அவுஸ்திரேலியா மண்ணில் முரளிதரன்; சாதனைக்கு வந்த சோதனை!!
அவுஸ்திரேலியா மண்ணில் சாதனை படைக்கும் ஆசையுடன் காலடி எடுத்து வைத்துள்ள முரளிதரனுக்கு நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. இவர் இன்னும் 9 வீக்கெட்டுகள் வீழ்த்தினால், ஷேன் வோர்ன் சாதனையை முறியடித்து விடலாம். இதனை தடுக்க `பொண்டிங் படை’ அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளதாம். முதல் கட்டமாக வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ரசிகர்களின் கோஷம். `பந்தை எறிவது’ போன்ற புகார்கள் முரளிதரனுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நாளை 8 ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இத்தொடரில் இலங்கையின் `சுழல் மன்னன்’ முரளிதரன் பங்கேற்க வேண்டாமென முன்னாள் கப்டன் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட பலர் கேட்டுக் கொண்டனர். ஏனென்றால் முரளிதரனை பொறுத்தவரை அவுஸ்திரேலியா தொடர் எப்போதுமே சர்ச்சை நிறைந்தது. 1995 இல் பந்தை எறிவதாக புகார் கூற டெஸ்ட் தொடரில் முழுமையாக பங்கேற்க இயலவில்லை. பின்னர் 2004 இல் இவர் பந்தை எறிகின்றார் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவர்ட் வெளிப்படையாக குற்றம் சாட்ட, அந்தத் தொடரை புறக்கணித்தார். தவிர ரசிகர்களும் இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவதை வாடிக்கையாக கொண்டிருந்ததால் அவுஸ்திரேலிய பயணத்தை தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இம்முறை அவுஸ்திரேலியாவுக்கு முந்தைய சர்ச்சைகளை மறந்து சென்றுள்ளார். தற்போது 700 வீக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள முரளிதரன், இன்னும் 9 வீக்கெட்டுகள் வீழ்த்தினால் அவுஸ்திரேலியாவின் `சூழல் புயல்’ ஷேன் வோர்னை (708 விக்.) முந்தி முதலிடத்தை பிடித்து விடலாம். இந்தச் சாதனையை எட்ட முரளிதரன் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியிருக்கும். தங்களது மண்ணில் இந்த மைல்கல்லை எட்ட அனுமதிக்க மாட்டோம் என அவுஸ்திரேலிய கப்டன் பொண்டிங் சவால் விடுத்துள்ளார்.
சர்ச்சை மன்னர்கள்
டெஸ்ட் போட்டிகளில் முரளிதரன், வோர்ன் இடையே நீண்ட காலமாக போட்டி நிலவி வந்தது. அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் இருவரும் மாறி மாறி முதலிடம் பெற்று வந்தனர். இருவருமே சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கினர். 1992 இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முரளிதரன் மீது பந்தை எறிவதாக குற்றம் சாட்டப்பட்டது. பிறப்பில் உள்ள குறைபாடு காரணமாக இவரால் கையை முழுமையாக நீட்டி பந்து வீச முடிவதில்லை என்று விளக்கம் தரப்பட்டது.
பின்னர் ஐ.சி.சி. அனுமதி வழங்க சிறந்த `ஒவ்ஸ்பின்னராக’ ஜொலித்தார். இதேபோல் 1992 இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான வோன், தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்தார்.
பெண்களுடன் தொடர்பு, மனைவி விவாகரத்து, ஊக்க மருந்து தடை உள்ளிட்ட சர்ச்சைகளை கடந்து சிறந்த `லெக்ஸ்பின்னராக’சாதித்தார், டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த சாதனையை தகர்க்க முரளி காத்திருக்கிறார்.
இருவரையும் ஒப்பிடுகையில் 35 வயதான முரளிதரன் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் 113 டெஸ்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார். வோர்ன் 145 டெஸ்டில் 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலிருக்கிறார். இந்தியாவின் கும்ளே 118 போட்டிகளில் 566 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலுள்ளார்.
முரளிதரன் ஒரு போட்டிக்கு சராசரியாக 6 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். அப்படி பார்த்தால் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள இரண்டு டெஸ்டில், சாதனைக்கு தேவையான 9 விக்கெட்டுகளை வீழ்த்தி விடலாம். ஆனாலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளது சற்று பின்னடைவான விடயம்.
ஆடுகளம் வேகம்
முரளிதரனை சமாளிக்க இம்முறை போட்டி நடக்கும் பிரிஸ்பேன், ஹோபர்ட் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் சுழலுக்கு வேலையில்லாமல் செய்து விடலாம் என்று அவுஸ்திரேலியா தரப்பில் திட்டம் போடப்பட்டுள்ளது. ஆனாலும் எந்த ஆடுகளத்திலும் விக்கெட் வீழ்த்தும் திறமை முரளிக்குள்ளது என்று இலங்கை சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து ரசிகர்களின் கோஷம் முரளிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். சமீபத்திய இந்திய தொடரின் போது ரசிகர்கள் சைமண்ட்சை கேலி செய்தனர். இதற்கு பழி தீர்க்க காத்திருக்கும் அவுஸ்திரேலிய ரசிகர்கள் முரளி தரனை ஒருகை பாக்கலாம். இதை தவிர இவரது பந்துவீச்சு பற்றி டரல் ஹேர் போன்று நடுவர்கள் வீண் புகார் சொல்லாமல் இருக்க வேண்டும்.
இது போன்ற தடைகளை எல்லாம் தகர்த்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை முரளிதரன் படைப்பார் என நம்புவோம்.