13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயற்சி; தாய்-தந்தை உள்பட 5 பேரிடம் போலீஸ் விசாரணை

Read Time:5 Minute, 21 Second

13 வயது மாணவியை தேவதாசி ஆக்க முயன்றதாக மாணவியின் தாய், தந்தை உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55) விவசாயி. இவருடைய மனைவி அஞ்சலை (50). இவர்களுக்கு ஆனந்த் (35), கிருஷ்ணமூர்த்தி (32), முருகன் (22) என்ற 3 மகன்களும், பூங்காவனம் (24), ராஜலட்சுமி (17), மோகனா (16), கிருஷ்ணவேணி (13) ஆகிய 4 மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகள் பூங்காவனத்திற்கும், மாயவன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் மாயவன் இறந்துவிட்டார். அதன்பிறகு ராமகிருஷ்ணன் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பயந்து போன ராமகிருஷ்ணன் அதே பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் உறவினரின் மகன் கணேசன் (14) என்பவரிடம் குறி கேட்டார். அவர், “உனது குடும்பத்தில் கடந்த 3 தலைமுறைக்கு முன்னர் இருந்தவர்கள் உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையை தேவதாசியாக்கி விட்டனர். ஆனால் நீ அப்படி செய்யாமல் இருக்கிறாய். உனது குடும்பத்தில் இனியும் துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டுமானால் உன்னுடைய மகள்களில் ஒருவரை பொட்டு கட்டிவிடு” என்று கூறினார்.

இதனால் பயந்து போன ராமகிருஷ்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்களிடம் கலந்து பேசி தனது கடைசி மகள் கிருஷ்ணவேணிக்கு பொட்டு கட்டுவது என்று முடிவு செய்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அரகண்டநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கிருஷ்ணவேணி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

பொட்டு கட்டினர்

கிருஷ்ணவேணியை பொட்டு கட்டும் நிகழ்ச்சிக்காக அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். ஊர் முக்கிய பிரமுகர்கள் அங்கு ஒன்று கூடினர். பின்னர் மாணவிக்கு பொட்டு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்த ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் அனைவரும் கோவில் முன்பு கூடி பொட்டு கட்டும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்ட நிலை உருவானது.

விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் பொட்டு கட்டும் நிகழ்ச்சி முடிந்து விட்டதால் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை போலீசாரால் தடுக்க முடியாமல் போனது. இருந்தும் பொட்டு கட்டும் நிகழ்ச்சி முடிந்தவுடன் வழக்கம்போல் கிருஷ்ணவேணியை குதிரை வண்டி மூலம் வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்டனர்.

அப்போது கிராம மக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஊர் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

5 பேரிடம் விசாரணை

இதுகுறித்து விசாரணை நடத்த மாணவி கிருஷ்ணவேணி, அவருடைய தந்தை ராமகிருஷ்ணன், தாய் அஞ்சலை, திருமணத்தை முன்னின்று நடத்திய நாட்டாண்மைகள் அம்மாவாசை (70), சின்னத்தம்பி (68) மற்றும் பூசாரி ராஜன் (66) ஆகிய 5 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அவர்கள் 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஊர் நாட்டாண்மைகள், பூசாரி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோரை விடுவிக்கவேண்டும் என்றும் கோரி அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி கோரிக்கை வைத்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து உடன் அப்புறப்படுத்தினர். இதனால் சற்று நேரம் காவல் நிலையம் முன்பு பதட்டம் நிலவியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த எகிப்து மன்னரின் பதப்படுத்திய உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது
Next post ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்!!