“அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின், முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” இலங்கை தேர்தல்கள் – வாக்கெண்ணல், கடமை, மோசடிகள் – வேதாபரன்!!
“விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.”
(இந்தப் பதிவு 30-06-2015 எமது தளத்தில் வெளியிடப்பட்டது… தேர்தல் முடிவடைந்து விருப்பு வாக்கு எண்ணும் சர்ச்சைகள் தொடர்வதோடு அதுபற்றிய ஊடக செய்திகளும் வந்துகொண்டு இருக்கின்றன…. காலத்தின் தேவை கருதி இந்த பதிவு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. -ஆர்)
இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறுமென்ற அறிவிப்பு வெளியாகி கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்னர்.
தேர்தல் பிரச்சாரங்களில் அரச கட்சி,அரச ஆதரவு பெற்ற கட்சிகள் முறைகேடாக நடப்பதென்ற குற்றச்சாட்டு காலா காலமாக கூறப்டுகின்றது.
தேர்தல் வாக்களிப்பில் மோசடி நடைபெறுவதற்குரிய ஏதுக்கள் மிகப் பெருமளவில் அடைக்கப்பட்டுள்ளதென கூறலாம்.
ஜனவரி 8 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முறைமையை அவதானித்தவர்கள் இந்தக் கூற்றுடன் உடன்படுவார்கள்.
ஆனாலும் விருப்பு வாக்கடிப்படையில் நடைபெறும் தேர்தல்களில் வாக்கெண்ணும் கடமைகள் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றன.
ஜனாதிபதி தேர்தலில் நபர்களுக்கான விருப்பு வாக்கு முறை உள்ளது. இந்த தேர்தல் விருப்பு வாக்குமுறை பெருமளவுக்கு சிக்கல் இல்லாதது.
ஆனால் பாராளுமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி சபை தேர்தல்களின் விருப்பு வாக்கு முறைகள் வேறுபட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலிலும், மாகாண சபை தேர்தலிலும் வாக்காளர் ஒருவர் கட்சிக்கு வாக்களித்து விட்டு தமது விருப்பு வாக்கை ஒருவருக்கோ, அல்லது இருவருக்கோ அல்லது மூவருக்கோ வழங்கலாம்.
உள்ளுராட்சி தேர்தல்களில் வாக்காளர் ஒருவர் கட்சிக்கு வாக்களித்து விட்டு தமது விருப்பு வாக்கை ஒருவருக்கே 3 விருப்பு வாக்கை வழங்கலாம்.
அல்லது பாராளுமன்ற , மாகாண சபை தேர்தல்கள் போல 3 வேட்பாளர்களுக்கு தனித்தனியாக வழங்கலாம்.
இந்த மாறுபட்ட விருப்பு வாக்கு முறையால் படிப்பறிவு குறைந்த மக்கள் மட்டுமல்ல படித்தவர்கள் கூட கட்சிக்கு வாக்களித்து விட்டு விருப்பு வாக்கை வழங்க பயப்பிடுகின்றார்கள்.
ஏனெனில் தமது வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்குகளாகி விடுமோவென பயப்பிடுவதே காரணமாகும்.
இந்த நிலை தான் விருப்பு வாக்கு மோசடிக்கு வழிவகுக்கின்றது.
தேர்தல் நடைபெற்று வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குப் பெட்டி வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது தற்போதைய முறையின்படி 100 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நேரத்தில் ஒவ்வொன்றாக திறக்கப்படும்.
வாக்குச் சீட்டு கணக்கு உள்ள ”கே ” என்ற படிவத்தில் உள்ளவாறு வாக்குகள் உள்ளனவா என எண்ணப்படும்.
இந்த நேரத்தில் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் 100 வீத விழிப்புடன் இருப்பார்கள்.
அந்த வாக்கெண்ணும் நிலையத்திற்கு என ஒதுக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள் யாவும் இவ்வாறு எண்ணி முடிக்கப்படும்.
அடுத்தாக அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் தனியாகவும், நிராகரிக்கப்படும் வாக்குகள் தனியாகவும் பெட்டிகளில் போடப்படும்.அவை தலா 50 வாக்குகளாக எண்ணப்பட்டு றப்பர் பாண்ட் போட்டு கணக்கிடப்படும்.
இப்போதும் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் 100 வீத விழிப்புடன் இருப்பார்கள்..
அடுத்ததாக செல்லுபடியான வாக்குகள் கட்சி அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலாயின் நபர்கள் அடிப்படையிலும் தரம் பிரிக்கப்பட்டு பெட்டிகளில் போடப்படும்.
பின்னர் அவை தலா 50 வாக்குகளாக எண்ணப்பட்டு றப்பர் பாண்ட் போடப்பட்டு கணக்கிடப்படும்.
அப்போதும் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் 100 வீத விழிப்புடன் இருப்பார்கள்.
இந்த பணி முடிவடைந்ததும் கட்சிகளுக்குரிய உறுப்பினர்கள் எத்தனை என்பது தெரிவத்தாட்சி அலுவலராக கடமையாற்றும் அரசாங்க அதிபரால் அறிவிக்கப்பட்ட பெறுபேற்றுக்கமைய தேர்தல் ஆணையாளரால் தீர்மானிக்கப்படும்.
இந்த நிலையில் ஆசனங்கள் கிடைக்காத கட்சிகள் சுயேட்சைக் குழுக்களின் தேர்தல் கண்காணிப்பு முகவர்கள் தமது பணி நிறைவடைந்ததாக வெளியேறி விடுவார்கள்.
அடுத்தாக விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பிக்கும்.
முதற்கட்டமாக வாக்குகள் 4 அடிப்படையில் தரம் பிரிக்கப்படும்.
கட்சிக்கு மட்டும் வாக்களித்த வாக்குகள் P எனும் பெட்டியில் இடப்படும்.
ஒரு வேட்பாளருக்கு மட்டும் விருப்பு வாக்களித்த வாக்குகள் P 1 எனும் பெட்டியனுள் இடப்படும்.
இருவருக்கு விருப்பு வாக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் P 2 எனும் பெட்டியினுள் இடப்படும்.
மூன்று பேருக்கு விருப்பு வாக்களிக்கப்பட்ட வாக்குகள் P 3 எனும் பெட்டியினுள் இடப்படும்.
அப்போதும் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் 100 வீத விழிப்புடன் இருப்பார்கள்.
அவ்வாறு தெரியப்பட்ட வாக்குகள் தலா 50 வீதம் எண்ணப்பட்டு விருப்பு வாக்குகள் எண்ணப்படும். அவை கணக்கிடப்படும்.
முதல் கூறியவாறே வாக்குகள் நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்காக கட்சிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்ட வாக்குகள் பெருமளவில் எண்ணப்பட்டிருக்கும்.
விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவடைந்ததும் வாக்கெண்ணும் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச பணியாளர்கள் தமது வரவுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்பி விடுவார்கள்.
கட்சிகளின் தேர்தல் கடமை முகவர்களும் தமது பணி முடிவடைந்ததாக பெருமளவில் திரும்பி விடுவார்கள்.
ஒவ்வொரு வாக்கெண்ணும் நிலைய பிரதான வாக்கெண்ணும் நிலைய அலுவலர்களும் ( CCO ) தமது கணக்குகளை முடித்து தெரிவத்தாட்சி அலுவலரிடம் கணக்கை ஒப்படைக்க வேண்டும்.
ஒரு தேர்தல் மாவட்டத்தில் பல பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் கடமைக்கு வருவார்கள்.
இதில் சிலர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரச அதிகாரிகளாக இருப்பார்கள்.
இவர்கள் தெரிவத்தாட்சி அலுவலரான அரசாங்க அதிபரின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.
விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.
கட்சிக்கு மட்டும் வாக்களித்து வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கு வழங்கப்படாத வாக்குகள் இவ்விதமாக தேவையான வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு மாற்றியமைக்கப்பட்டு விடும்.
இந்த நிலைமை பல மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. தேர்தல் கடமைக்கு சென்ற அலுவலர்கள் தெரிந்து வைத்துள்ளதும் பகிரங்கமானது.
வாக்கெண்ணும் கடமை அதிகாலை 5 மணிக்கு முடிந்த பின்பு நண்பகல் வரை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத மாவட்டங்களில் இந்த நிலைமை நடைபெற்றுள்ளது.
தேர்தல் ஆணையாளர் பொருத்தமான நடவடிக்கை எடுத்து மக்கள் தீர்ப்பு 100 வீதம் உண்மையாக வெளிவருவதனை இந்த தேர்தலில் தேர்தல் ஆணைாயாளர் உறுதிப்படுத்துவாரா?
(Thanks.. குளோபல் தமிழ்ச் செய்திகள்)
Average Rating