தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!
கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.
தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தான் தோற்கடிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில், மிக முக்கியமான பாத்திரத்தை வகித்த புறக்காரணிகள் இரண்டு.
ஒன்று புலம்பெயர் புலியாதரவு தமிழர்கள். இரண்டாவது சமூக ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி.
இந்த தேர்தலில், இந்த இரண்டு காரணிகளுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான பிரசாரங்களுக்கு வலுவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.
அரபுலகப் புரட்சியின்போது, சமூக ஊடகங்கள் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியிருந்தன.
டியூனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிலவிய சர்வாதிகார ஆட்சிகளை அகற்றுவதில் சமூக ஊடகங்களும் இணையங்களும் மேற்குலக நாடுகளால் மிகநுட்பமாகத் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டன.
அதற்குப் பின்னர், எல்லா நாடுகளுமே, சமூக ஊடகங்கள் குறித்து அதில் எழுப்பப்படும் கருத்துக்கள், விவாதங்கள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கத் தொடங்கின.
இலங்கையிலும், கூட ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியதில் சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது என்பதை மறுக்க முடியாது.
ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடிப்பதில், சமூக ஊடகங்களின் மூலம் இளம் சமூகத்தினர் ஏற்படுத்திய ஆக்கபூர்வமான கருத்தாடல்களும், கருத்துக்களும் முக்கிய பங்காற்றியிருந்தன.
ஜனாதிபதி தேர்தல் காலங்களில், மஹிந்த ராஜபக் ஷவினாலும் அவரது ஆதரவாளர்களினாலும் அரபுலக புரட்சிப் போல இலங்கையில் ஏற்படுத்தி விட முடியாதென்று கூறப்பட்டது.
அத்தகையதொரு புரட்சிக்கான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் உணர்ந்திருந்தது.
அதுபோலவே அப்போது மஹிந்த ராஜபக் ஷவும் சமூக ஊடகங்களை தனது பிரசாரங்களுக்கு மிகக் கவனமாகப் பயன்படுத்தியிருந்தார்.
அதற்கென இந்திய நிபுணர்களை பணிக்கு அமர்த்தியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், மஹிந்த ராஜபக் ஷ ஜனவரி 8 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டதற்கும், சமூக ஊடகங்கள் கணிசமான செல்வாக்கைச் செலுத்தியமை பின்னர் உறுதியாகியிருந்தது.
இந்தக் கட்டத்தில், மஹிந்த ராஜபக் ஷ சமூக ஊடகங்களை தனது பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களுக்கு அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூறலாம்.
அவரது பேஸ்புக் கணக்கு இம்முறை தேர்தல் பிரசார காலங்களில் மிகமுக்கியமான நேரங்களில் எல்லாம் உறங்கிக் கொண்டிருந்தது.
அதேவேளை, இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில், பெரும்பாலான வேட்பாளர்கள் சமூக ஊடகங்களை தமது பிரசாரங்களுக்கான சுலபமான வழிமுறையாகத் தெரிவு செய்திருந்தனர்.
அதிகம் கட்டுப்பாடுகள் இல்லாத- கூடுதல் சுதந்திரத்துடன் கருத்துக்களை வெளியிடக் கூடிய, ஒரு ஊடகமாக இது இருந்ததால், மரபுரீதியான பிரசாரங்களுக்கு மாற்றான அவதூறுப் பிரசாரங்களுக்கும் இது வாய்ப்பான களமாக இருந்தது.
பெரும்பாலான கட்சிகளும் வேட்பாளர்களும் கொள்கை ரீதியாகத் தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி பிரசாரம் செய்யும் தகைதிறன் இன்றியே காணப்பட்டனர்.
அத்தகையவர்களுக்கு, மொட்டைக் கடிதங்கள் போலவும், ஆதாரமில்லாத தகவல்கள், புனையப்பட்ட படங்கள், வீடியோக்கள் மூலமும் அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான களமாக இந்த சமூக ஊடகங்கள் வாய்த்திருந்தன.
பெரும்பாலான வேட்பாளர்கள் தமக்கு ஆதரவான பிரசாரங்களுக்கே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியிருக்க, வடக்கு கிழக்கில், அதிலும் குறிப்பாக, யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்டிப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அவை செயற்படுத்தப்பட்டன.
இத்தகையதொரு நவீன ஊடகப் புரட்சியின் மூலம், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான தலைமைத்துவத்தில் இருந்து கூட்டமைப்பை அகற்றி விடலாம் என்று சில தரப்பினர் திட்டமிட்டிருந்தனர்.
இதில் முக்கிய பங்காளர்களாக இருந்தவர்கள் புலம்பெயர் தமிழர்கள்.
தமது கைக்குள் அகப்படாத கூட்டமைப்பை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்பதில், புலம்பெயர் தமிழர்களிலுள்ள கடும் போக்காளர்கள் உறுதியாகவே இருந்தனர்.
வடக்கு, கிழக்கிற்கு புதிய தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டு வரும் இவர்களின் முயற்சி படுதோல்வியில் முடிந்திருக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாற முயன்று தோற்றுப் போனது இது தான் முதல் முறையல்ல.
ஏற்கனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, கடந்த ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, இப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது என்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள கடும்போக்காளர்கள் இந்த விடயத்தில் தோல்வி கண்டிருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர் அரசியலில் புலம்பெயர் தமிழர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கத்தக்க நிலையில் இருந்தாலும், இங்குள்ள தமிழர்களின் வாக்குரிமையைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர்கள் இருக்க முடியாது என்ற உண்மை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சமூக ஊடகங்களும் – ஹரிகரன் வடக்கு மாகாணசபைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும், இப்போது கூட்டமைப்பைத் தோற்கடித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையை ஏற்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழர்கள் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தனர்.
சமூக ஊடகங்கள் மூலமும், இணைய ஊடகங்கள் மூலமும் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் படுதோல்வி கண்டிருக்கின்றன.
இதில் மிகவேடிக்கை என்னவென்றால், வாக்களிக்கும் தமிழர்கள், வடக்கு கிழக்கில் இருக்க பிரான்ஸின் லாசப்பலிலும், பிரித்தானியாவின் லண்டனிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டும் அளவுக்கு புலம்பெயர் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகள் சந்தி சிரிக்கும் அளவில் இருந்தன.
தனிநபர்களை குறிவைத்தும், கீழ்த்தரமாக விமர்சித்தும், முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்கள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தன.
புலம்பெயர் ஊடகங்களால் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் மிகமோசமாக — கேவலமாக விமர்சிக்கப்பட்டனர்.
அவை மனித ஒழுக்கம், ஊடக நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன.
அத்தகைய பிரசாரங்கள் அவதூறுக்கு உள்ளாக்கப்படுபவரை விட, அவதூறு செய்பவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
அது தான் வாக்களிப்பின் போதும் நடந்திருக்கிறது.
**இத்தகைய பிரசாரங்கள் கூட்டமைப்புக்கு எதிர்பாராத பலத்தைக் கொடுத்திருக்கிறது.
அதைவிட புலம்பெயர் ஊடகங்களின் பிரசாரங்களில் குரோதங்களும், வன்மங்களும் நிறைந்திருந்ததே தவிர, உண்மையும், நேர்மையும், ஆரோக்கியமான விமர்சனங்களும் இருக்கவில்லை.
இதனால் முன்னுக்குப்பின் முரணாகவும் செயற்பட்டுக் கொண்டன.
உதாரணத்துக்கு சுமந்திரன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்த புலம்பெயர் ஊடகங்கள், அவருக்கு செல்வாக்கு இல்லை, தோற்கடிக்கப்படுவார் என்று குறிப்பிட்டு வந்தன.
தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக அவை வெளியிட்ட ஒரு செய்தியில், சுமந்திரன் அமைச்சர் பதவியை ஏற்கப் போவதாகவும், வடமராட்சியில் உள்ள அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
சுமந்திரன் அமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்வதாயின் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அல்லது தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெற வேண்டும்.
தேர்தலுக்கு முன்னரே அவர் அமைச்சராகிறார் என்றால், அவர் வெற்றி பெறும் வாய்ப்புள்ளவராகத் தானே வாக்காளர்கள் கருதுவார்கள் என்ற சாதாரண தர்க்க ரீதியான விளக்கத்தைக் கூட அந்த ஊடகங்கள் கொண்டிருக்கவில்லை.
அதைவிட, மூன்றடுக்குப் பாதுகாப்பு இல்லையா என்பது, உள்ளூரில் இருக்கும் வாக்களிக்கப் போகும் மக்களுக்கு தெரியும் என்பதை புலம்பெயர் ஊடகங்கள் கொஞ்சமும் சிந்தித்து பார்க்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்ற 529,239 வாக்காளர்களில், நான்கு இலட்சம் பேர் கைத் தொலைபேசி பாவனையாளர்கள் என்றும் அதில் பாதிப் பேர் கைத்தொலைபேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் என்றும் சட்டபீட விரிவுரையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
இவர்கள் மத்தியில், இந்த சமூக ஊடகங்களும், இணைய ஊடகங்களும் தாக்கத்தைச் செலுத்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு எதிர்மாறான முடிவுகளையே தேர்தல் முடிவுகள் காட்டியிருந்தன.
இணையமும், சமூக ஊடகங்களும், புலம்பெயர் தமிழர்களும், இங்குள்ள மக்களின் மீது செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணிகள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், அவை தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் திறன் கொண்டவைதானா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது தேர்தல் முடிவு.
ஏனென்றால், அரசியல் ரீதியாக இணையம், சமூக ஊடகங்கள், மற்றும் புலம்பெயர் தமிழர்கள் முடிவெடுக்கும் சக்தியாக மாறியிருந்தால், தமிழத் தேசிய மக்கள் முன்னணி தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது மூன்று இடங்களையாவது அந்தக் கட்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி., ஐ.தே.க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்று எல்லாவற்றுக்கும் பின்னால் தள்ளப்பட்டது அந்தக் கட்சி.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள், பிரசாரங்களின் மூலம், தமிழ் மக்களைச் சென்றடைந்திருந்தால், சமூக ஊடகங்களை அறிவார்ந்த முறையிலான கருத்தாடல்களுக்கான களமாகப் பயன்படுத்தியிருந்தால், இத்தகைய மோசமான பின்னடைவு ஒன்றைச் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது.
அதேவேளை புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பது என்ற பெயரில் அதனை படுகுழிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசியல் அறிவு நிரம்பியவர்கள். அவர்கள் எல்லாப் பிரசார மாயைகளுக்கும் எடுபடுபவர்கள் அல்ல.
அவர்கள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள் என்பதை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தாயகத்தில உள்ள தமிழர்களுக்கு தோள் கொடுக்கலாமே தவிர, அவர்களை வழி நடத்த முடியாது என்பதை, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த தேர்தல் முடிவு மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.
Average Rating