வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் தலைவர் த.சித்தார்த்தன்…
சுவிஸில் நடைபெற்ற வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை..
தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை தியாகம் செய்த போராளிகள் தலைவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது இதய அஞ்சலிகள். தமிழ்இனத்தின் விடுதலைக்காக சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் திரு.அ.அமிர்தலிங்கம் மற்றும் யாழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெ.யோகேஸ்வரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட தினமான 13.07.2006 முதல்
ஆயதப்போரட்டதை முன்னெடுத்தவர்களில் முன்னோடியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது தலைவரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் நிறுவனரும் செயலதிபருமான தோழர் க. உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான 16.07.2006 வரை எமது இனத்தின் விடுதலைக்காக தம் உயிரைத் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் வகையில் வீமக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சர்வதேசப் பொறுப்பாளர் தோழர்.ரஞ்சன் அவர்களின் முயற்சியால் சுவிஸில் ஆண்டு தோறும் பலஇடர்களின் மத்தியிலும் வீரமக்கள் தினம் அனுட்டிக்கப்படுகிறது. இந்த வருடம் தமி;ழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் இங்கு வீரமக்கள் தினத்தில் விஷேட அதிதியாக கலந்து கொள்கிறார். அவருக்கு நன்றி. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எதிரிகளால் கொல்லப்பட்டவர்களை விட சந்தர்ப்பவாதிகளால் வஞ்சகமாக கொல்லப்பட்டவர்களே அதிகமெனக் கூறலாம். கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல வழிகளிலும் தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப் போராடிய போதிலும் இதுவரை உரிமைகள் மீளப்படவில்லை. பதிலாக இருந்த உரிமைகளையும் இழந்தது அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
போராட்டத்தின் ஏகபோக உரிமையை எடுத்துக்கொண்ட புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்கும் வாய்ப்பை முதலில் தவற விட்டனர். அதன் பின்னர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை இரகசியமாக நடத்தினர். புலிகள் அரசாங்கத்திடம் என்ன கேட்டார்கள், அதில் என்ன கொடுக்கப்படவில்லை என்பது சிதம்பர இரகசியமாகும். ஆனால் ஒவ்வொரு பேச்சுவார்த்தைகளின் முடிவும் ஒவ்வொரு யுத்தத்தின் ஆரம்பமாகவே இருந்தது.
2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டபோது இவ்வொப்பந்தத்தின் மூலம் யுத்தநிறுத்தம் ஏற்படுத்தி அரசியல் தீர்வுக்கான சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. பேச்சுவார்த்தையும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசியல்தீர்வு பற்றி இந்தப் பேச்சுவார்த்தைகளில் பேசப்படவில்லை. மாறாக இந்த ஒப்பந்தத்தின்மூலம் புலிகள் தவிர்ந்த ஏனைய போராட்ட அமைப்புகளிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட்டது. தொடர்ந்து இந்த அமைப்புகளை அழிக்கும் வேலைகளிலேயே புலிகள் செயல்பட்டனர். அதே வேளை அரசியல் திர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தபோதெல்லாம் புலிகள் அதை தட்டிக்கழித்து வந்தனர்.
புலிகளின் நடவடிக்கைகளால் தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் இப்போது சர்வதேசத்தின் ஆதரவையும் இழந்து வருகிறது. இதை சாதகமாகக் கொண்டு அரசாங்கம் தன்பக்கம் நியாயம் இருப்பதாக ஒரு மாயையை தோற்றுவித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்மக்களின் நிலை கேள்விக் குறியாகிவிடும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் மாகாண சபைகளுக்குப் பதிலாக இந்திய அரசியலமைப்பின் மாதிரியை அறிமுகப்படுத்தியிருந்தால் அதைப் புலிகள் ஏற்றிருப்பர் என்று அண்மையில் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பேட்டியளித்திருந்தார். அதற்கான காலம் இன்னும் கடந்து விடவில்லை.
இனப்பிரச்சினைக்கு இந்தியா அரசியல் அமைப்பு மாதிரியான தீர்வுமுறை முன்மொழியப்பட்டால் புலிகள் வன்முறைகளை கைவிட்டு தமது சமாதான நிலைப்பாட்டை வெளிக்காட்ட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் யாப்பாவும் தெரிவித்திருக்கிறார். அரசு சர்வதேசத்தை ஏமாற்றும் குறுகிய நோக்கில் கருத்துக்கள் தெரிவிப்பதை விடுத்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய விதத்தில் ஒரு தீர்வை முன்வைக்கவேண்டும்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள அரசியல் அதிகாரப் பரவலாக்கல் முறையை இலங்கையில் அறிமுப்படுத்துவதற்கு சட்ட ஆலோசனை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக இந்தியா தெரிவிக்கிறது. இந்த சந்தர்ப்பதை இலங்கை அரசும் புலிகளும் சரியான முறையில் பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண இரதரப்பினரும் முன்வரவேண்டும்.
தமது இன்னுயிரை அர்ப்பணித்த அனைவருக்கும் நாம் செய்யும் கடமை, தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகள் நிறைவேறி, நாட்டில்; நிரந்தரமான சமாதானம் ஏற்பட உண்மையான பங்களிப்பை அளிப்பதேயாகும்.
த.சித்தார்த்தன்
– தலைவர் –
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம். (புளொட்) -09.07.2006-
தகவல்:- புளொட் சர்வதேச ஒன்றியம்…