மும்பையில் ரெயில்கள் தகர்ப்பு: குண்டு வெடிப்பு பலி 190 ஆக உயர்வு
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை தீவிரவாதிகள் குறி வைத்து தொடர் குண்டுவெடிப்பு மூலம் தாக்கி வருகிறார்கள். ஏற்கனவே 6 தடவை குண்டு வெடிப்பை சந்தித்துள்ள மும்பை நகரம் நேற்று மிகக் கொடூரமாக மற்றமொரு தொடர் குண்டுவெடிப்பு நாச வேலையில் மூழ்கியது. மும்பை நகரில் ஓடும் மின்சார ரெயில்களில் நேற்று மாலை 6.24 மணிக்கு அடுத்த டுத்து 7 ரெயில்களில் 8 குண்டு கள் வெடித்தன. முதல் குண்டு கார் ரோடு ரெயிலில் வெடித்தது. அதே சமயத்தில் பாந்த்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த ரெயிலில் குண்டு வெடித்தது.
6.25 மணிக்கு ஜோகேஸ்வரி, 6.26 மணிக்கு மாகிம், 6.29 மணிக்கு மீரா ரோடு- பயாந்தர், 6.30 மாதுங்கா, 6.35 மணிக்கு போரிவிலி பகுதிகளில் ஓடும் ரெயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துச் சிதறின. ஜோகேஸ்வரி ரெயில் நிலையத்தில் புறப்பட்டுக் கொண்டிருந்த ரெயிலில் 2 குண்டுகள் வெடித்தன.
8 குண்டுவெடிப்புகளும் 11 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. ஒவ்வொரு குண்டுவெடிப்பும் மிக, மிக சக்தி வாய்ந்ததாக இருந்தது. குண்டு வெடித்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கி சிதறின. மாகிம் ரெயில் நிலை யத்தில் ரெயில் புறப்பட்ட மறு வினாடி குண்டு வெடித்ததால் மாகிம் ரெயில் நிலையத்தின் பிளாட்பார கூரைகளும் பிய்த்து எறியப்பட்டன.
குண்டுவெடிப்பில் சிக்கிய வர்களின் உடல்கள் மிகவும் கோரமாக சிதறி துண்டு, துண்டாக விழந்தன. பிளாட் பாரங்களிலும், ரெயில் தண்ட வாளங்களிலும் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இதை கண்டதும் ரயில் பயணிகள் அலறியபடி ஓடினார்கள்.
நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள் ளத்தில் துடிதுடித்துப்படி கிடந்தனர். தண்டவாள ஓர குடிசைவாசிகளும், பொது மக்களும் அதிர்ச்சி நீங்கியதும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பலர் உயிரிழந்தனர்.
இன்று காலை 10 மணி நிலவரப்படி குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்திருந்தது. 625 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது பெயர் விபரங்களை மும்பை போலீசார் ரோட்டில் போர்டுகளிலும், இணையத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
வர்த்தகத் தலைநகரமான மும்பையை சீர்குலைப்பதோடு, இந்தியாவில் மதவாத மோதல்களை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீல்குலைக்கும் எண்ணத்துடன் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்த தொடர் குண்டுவெடிப்பை நடத்தி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
கடந்த 3மாதமாக மிகவும் திட்டமிட்டு இந்த சதிசெயலை தீவிரவாதி கள் அரங்கேற்றி இருப்பதை மும்பை போலீசார் முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். 8 குண்டுகளும் ரெயில்கள் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் வகையில் நேரம் கணக்கிடப்பட்டு திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்தன.
வெடிகுண்டு சிதறல்களை தடயவியல் அதிகாரிகள் சேகரித்து நேற்றிரவு முதல் கட்ட சோதனை நடத்தினார்கள். இதில் 1993, 2002, 2003-ம் ஆண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளை விட இந்த தடவை அதிக சக்திவாய்ந்த குண்டுகளை தீவிரவாதிகள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த குண்டுகள் எந்த ரகத்தை சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை.
தினமும் 60 லட்சம் பயணிகளை ஏற்றிச்செல்லும் மும்பை ரெயில்களில் மாலை நேரத்தில் தான் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் குரூர எண்ணத்துடன் மாலை நேரத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். ரெயில் பெட்டிகள் சிதறி நொறுங்க வேண்டும் என்ற திட்டத்துடன் ரெயிலின் மத்தியில் குண்டுகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு குண்டும் 8 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த குண்டுகள் அனைத்தும் பயணிகள் இருக்கை கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்றிரவு சீரமைப்பு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. இன்று காலை எல்லா ரெயில்களும் வழக்கம்போல ஓடின. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மும்பையில் இன்று இயல்பு வாழ்க்கை திரும்பியது என்றாலும் மக்கள்மனதில் பீதி அகலவில்லை. மும்பை முழுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.