அதிபர் முஷரப் அதிரடி நடவடிக்கை; பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம்; சுப்ரீம் கோர்ட்டை ராணுவம் கைப்பற்றியது
பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. நேற்று மாலையில் இதற்கான உத்தரவை அதிபர் முஷரப் பிறப்பித்தார். இதையடுத்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டை ராணுவம் கைப்பற்றியது.பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முஷரப் இருந்து வருகிறார். ராணுவ தளபதியாக இருந்த முஷரப், கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை புரட்சி மூலம் கவிழ்த்து விட்டு, அதிபர் ஆனார். அதுமுதல் அதிபர் மற்றும் ராணுவ தளபதி ஆகிய இரண்டு பதவிகளையும் வகித்து வருகிறார். இந்நிலையில் முஷரப்பின் அதிபர் பதவி காலம் வருகிற 15-ந் தேதி முடிவடைகிறது. இதனால் முஷரப், தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அதிபர் ஆக விரும்பினார். ஆனால் அவர் ஒரே நேரத்தில் அதிபர் மற்றும் ராணுவ தளபதி பதவியை வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராணுவ தளபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வற்புறுத்தின. ஆனால் இதை முஷரப் கண்டுகொள்ளவில்லை. பதிலாக, தான் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் வகையில் சட்டத்தை திருத்தினார். இதையடுத்து கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் முஷரப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே, ராணுவ தளபதி பதவியில் இருந்து கொண்டு, முஷரப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை அந்நாட்டின் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. இதனால் முஷரப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், அவரது வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தனர். எனினும் இப்பிரச்சினையில் முஷரப்புக்கு பாதகமாக தீர்ப்பு அமையும் என்று பரவலாக தகவல்கள் வெளிவந்தன.
சிக்கல் அதிகரிப்பு
இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானில் சமீப காலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் வசீரிஸ்தான் பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான ராணுவத்தினர் பலியாகி விட்டனர்.
அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு ஊர்வலத்தில், பயங்கர தற்கொலை தாக்குதல் நடந்தது. அந்த சம்பவத்தில் 165 பேர் பலியானார்கள். பெனாசிர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனால் முஷரப்புக்கு நெருக்கடி அதிகரித்தது. ஒருபக்கம் உள்நாட்டு பாதுகாப்பு சீர்குலைந்து வரும் நிலையில், மறுபுறம் சட்ட சிக்கல்களால் அவரது பதவிக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது.
நெருக்கடி நிலை பிரகடனம்
இந்நிலையில் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் வகையில், முஷரப் நேற்று மாலையில் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். ராணுவ சட்டத்தை பிறப்பித்த அவர், அரசியல் சட்ட செயல்பாடுகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். இதன்மூலம் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் அவர் தன் வசம் வைத்துக் கொண்டார்.
நெருக்கடி நிலை அறிவிப்பை அடுத்து, பாகிஸ்தானில் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் முடக்கப்பட்டன. சாதாரண தொலைபேசி மற்றும் செல்போன் செயல்பாடுகளும் முடக்கப்பட்டன.
ராணுவம் புகுந்தது
இஸ்லாமாபாத்தில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் ராணுவம் புகுந்து, தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அங்கிருந்த தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உள்ளிட்ட நீதிபதிகள் வெளியேற்றப்பட்டனர். முஷரப்புக்கு எதிராக வாதாடிய வக்கீல் கைது செய்யப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மாகாண ஐகோர்ட்டுகளின் நீதிபதிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பாராளுமன்றம், அதிபர் மாளிகை ஆகிய இடங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. சர்ச்சைக்குரிய லால் மசூதி பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி உள்ளிட்ட பல இடங்களில் தெருக்களில் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வந்தனர்.
நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ள போதிலும், பாகிஸ்தான் மந்திரி சபை தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து போன்ற மாகாணங்களின் சட்டமன்றங்கள், கவர்னர்கள் மற்றும் மந்திரிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.
இந்தியா வருத்தம்
பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதற்கு, இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாகிஸ்தான் கடினமான நேரத்தில் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பாகிஸ்தானில் வெகு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும். அங்கு ஸ்திரத்தன்மையும், ஜனநாயகமும் தொடரும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம் ஐரோப்பியூனியன் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நெருக்கடி நிலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன.
பெனாசிர் நாடு திரும்பினார்
இதற்கிடையே, பாகிஸ்தானில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதற்கு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப்பும், பெனாசிர் பூட்டோவும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நெருக்கடி நிலை பற்றி அவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து உடல்நலம் குன்றிய தாயை பார்ப்பதற்காக துபாய் சென்ற பெனாசிர், நேற்று பாகிஸ்தானுக்கு மீண்டும் திரும்பினார்.