தேர்தலில் கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்துமாறு கனடிய தமிழர் பேரவை வலியுறுத்து!!
கனடிய தமிழர் பேரவை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் வாழும் குடிமக்களையும் தமிழர்களையும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கடந்த ஜனவரி 08, 2015 இல் நடந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். வாக்காளர்கள் பெருமளவில் திரண்டு (ஆட்சி) மாற்றத்துக்கும் ஒரு புதிய தொடக்கத்துக்கும் வாக்களித்தார்கள். இந்த மாற்றத்தை கனடாவும் அனைத்துலக சமூகமும் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதனை வரவேற்றன.
இருந்தும் இலங்கையின் பொறுப்புள்ள குடிமக்களுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அது யாதெனில் இம்மாற்றம் புறமாற்றலுக்குத் தள்ளப்படுவதற்கு வாய்ப்பளிக்காதவாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
காணியுரிமை அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் முதலிய தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் எதிர்பார்த்தது போல தீர்க்கப்படவில்லை.
இருந்தும் இப்போதுள்ள அரசாங்கம் எடுத்த சில நடவடிக்கைகள் (ஜனாதிபதி) தேர்தல் முடிவு நல்லெண்ணத்துக்கான தொடக்க குறிகளைக் காட்டியது. ஓகஸ்ட் தேர்தலுக்குப் பின்னர் வரவுள்ள அரசின் நடவடிக்கைகள் புதிய அரசியல் நன்னம்பிக்கை மேலும் வலுத்தப்படலாம் என கனடிய தமிழர் பேரவை நம்புகிறது.
தமிழின சிக்கலுக்கு தீர்வு காண்பதற்குப் பொருள் பொதிந்த பேச்சு வார்த்தைகள் சிறீலங்கா அரசுக்கும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கும் மற்றும் அதில் அக்கறையுடையோருக்கும் இடையில் நடைபெற்றே ஆகவேண்டும்.
இப்படியான சூழலில் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான பங்கு வகிப்பர். இத்தகைய பேச்சு வார்த்தைகளில் தமிழர் சார்பாக ஒரே குரலில் வலுவான முறியில் பேசப்படும்போது அது காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்பும் அனுபவமும் வாய்ந்த இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் மக்களது அங்கீகாரத்தை மட்டுமல்ல இலங்கையில் உள்ள ஏனைய சமூகங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கனடா அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற பன்னாட்டு சமூகத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
அவர் தமிழ் மக்களது கவலைகள் குறைகள் மற்று தமிழ்மக்களின் வேட்கை போன்றவற்றை மிகவும் கவனமாகவும் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறி வந்திருக்கிறார். கனடிய தமிழர் பேரவை தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு நெருங்கிச் செயல்பட்டுகிறது.
இந்தக் கூட்டுறவு கனடா மற்றும் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கிடைக்கப்பெற்ற இராஜதந்திர வெற்றிகளுக்கு மிக முக்கிய காரணியாக விளங்கியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டம் மற்றும் வெளியுறவுச் செயலாளராக இருக்கும் எம்.ஏ.சுமந்திரனின் வழக்காடும் வாதத் திறமைகள் பட்டறிவு மற்றும் நிபுணத்துவம் கனடாவில் உள்ள பல அரசாங்க அதிகாரிகள் ஜெனிவா மற்றும் உலகில் உள்ள இராஜதந்திரிகள் போன்றோரைச் சந்திங்கும் போது கனடிய தமிழர் பேரவை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
பேச்சுவார்த்தை நடைபெறும் காலத்தில் எமது நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கு வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களைப் பிரதிநித்துவப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வலுவான ஆணை கொடுக்கப்படும் என்று கனடிய தமிழர் பேரவை உறுதியாக நம்புகிறது.
தென்னிலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சிக்குக் குரல் கொடுக்கும் முற்போக்கு சக்திகளின் வெற்றியானது இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வு பொறுப்புக் கூறல் மற்றும் நீடித்த நல்லிணக்கம் ஆகியவை கைகூடுவதற்கான பெருவாய்ப்பு இருக்கிறது.
Average Rating