தாஜூடீன் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் உரிய நடவடிக்கை இல்லை!!
விஷம் அருந்துவதாக கூறுவதும் விஷத்தை பருக்க முயற்சிப்பதும் தவறு என, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
டிலான் பெரேரா, உதய கம்மன்பில உள்ளிட்டோர் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சிலரை விஷம் அருந்துமாறு கோரியதோடு, விஷ போத்தல்களையும் காட்சிப்படுத்தினர்.
அத்துடன் அவற்றை சோபித தேரருக்கு வழங்குவதாக கூறி அவரையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கியுள்ளனர் என, சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேபோல் விஷம் அருந்த அழைப்பதாயின் கடந்த காலங்களில் கொலை, கடத்தல்களில் ஈடுபட்ட தலைவர்களுக்கு விஷ பெரல்களை அனுப்ப வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிங்கபூர் பிரதமர் லீக்குவா நியூ கூறியதைப் போல, மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் உடனடியாக விஷம் அருந்த வேண்டும் என, மாதுலுவாவே சோபித தேரர் குறிப்பிட்டதாக டிலான் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் போன்றோர் விஷம் அருந்த வேண்டும் எனவும் இதன்போது அவர் கூறியதுடன் அவர்களிடம் விஷம் வாங்க பணம் இல்லையாயின் தாம் வாங்கி தருவதாகவும் கூறி விஷ போத்தல்களையும் காட்சிப்படுத்தினார்.
மேலும் சோபித தேரரிடம் இன்று அல்லது நாளை இந்த விஷ போத்தல்களை எடுத்து சென்று அவர்களை விரைவில் விஷம் அருந்தும் படி அல்லது பதவியை விரைவில் இராஜனாமா செய்யும் படி கோர வேண்டும் என, தேரரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் டிலான் பெரேரா இதன்போது தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த வேண்டுமாயின் மத்திய வங்கி விவகாரம் மட்டுமே உள்ளதாகவும், இது தொடர்பில் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு ஊடகத்திலும் வாதம் புரியத் தயாராக உள்ளதாகவும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சுஜீவ சேனசிங்க கூறினார்.
இந்த சவாலை பந்துல குணவர்த்தன, பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் உள்ளிட்ட எவரும் ஏற்க முடியும் எனவும் சுஜீவ மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாஜூடினின் மரணம் தொடர்பில் யார் பொறுப்புக் கூற வேண்டும் என முழு நாட்டுக்குமே தெரியும் எனவும், எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க பொலிஸ் மா அதிபர் தலையீட்டில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமசிங்க கொல்லப்பட்டமை, பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை போன்றன கே-9 என்ற அமைப்பினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக இங்கு மேலும் சுட்டிக்காட்டிய சுஜீவ, இதற்காக அவர்கள் 9 வௌ்ளை வேன்கள் வரை பயன்படுத்தியதாக தகவல் தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்வதில் பொலிஸ் மா அதிபர் கவனயீனமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating