சூரிச் மாநகரில் புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு

Read Time:4 Minute, 47 Second

plote.jpgபுளொட் அமைப்பினர் 17வது வீரமக்கள் தினத்தை சுவிசின் சூரிச் மாநகரிலுள்ள உண்டர்அப் ஹோட்டல் மண்டபத்தில் 09.07.2006 மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளனர். இந்நிகழ்வுகளில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். மங்கள விளக்கேற்றல் நிகழ்வின் பின்னர் மறைந்த புளொட் செயலதிபர் உமாமகேசுவரன் உள்ளிட்ட போராளிகள், மாற்றியக்க போராளிகள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வீரமக்கள் தின செய்தி அங்கு வாசிக்கப்பட்டது.

வீரமக்கள் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கலந்துகொண்டுள்ளார். தமிழீழம் என்பது பகற்கனவு. தமிழீழத்தின் பெயரில் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவது உடன் நிறுத்தப்படல் வேண்டும். இந்திய முறையிலான சமஷ்டி அமைப்பே இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரே தீர்வு. என்றும் ஆனந்தசங்கரி அவர்கள் தனதுரையில் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்காக குரல் கொடுத்த புவனேந்திரன் அவர்கள் மட்டுநகருக்கு சுவிசிலிருந்து சென்று தனது மனைவி பிள்ளைகளை பார்க்கப் போனபோது புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்து பேசிய ஆனந்தசங்கரி அவர்கள், இவ்வாறான கொலைகளை யும் அனைத்து கொலைகளையும் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

புளொட் சர்வதேச ஒன்றியப் பொறுப்பாளர் ரஞ்சன் தனதுரையில், போர்நிறுத்தம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். முறையான வகையில் பேச்சுக்களை ஆரம்பித்து சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். என்று தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், சுவீசிலிருந்து தனது மனைவி பிள்ளைகளை பார்க்கவென மட்டக்களப்புக்கு சென்ற எந்த அமைப்பையும் சேராத ஜனநாயகவாதியான புவனேந்திரன் புலிகளால் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார். அத்துடன் அவரது சகோதரன் மாற்று இயக்கத்தில் இருப்பதால் இவரைக் கொன்றிருப்பதை எவரும் நியாயப்படுத்த முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார். புலம்பெயர்ந்து வாழும் சகல மக்களும் இவ்வாறான கொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் புளொட் கிளையைச் சேர்ந்த சந்திரனும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும், படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து விநோதவுடைப்போட்டி, பொது அறிவுப்போட்டி, பின்னணி இசைக்கு ஆடல், சங்கீதப் பாடல்களை பாடுதல், திரு.வையாபுரி அவர்களின் நதிக்கரை நாணல் சமூக நாடகம், ஜேர்மன் இளந்தளிர் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு என்பன இடம்பெற்றன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியோருக்கும், கலந்து கொண்டோருக்குமான பரிசில்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிகளின் இறுதியில் புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியப் பொறுப்பாளர் எஸ். ரஞ்சன் நன்றியுரை ஆற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வங்காளதேசத்தில் பஸ் மீது ரெயில் மோதியதில் 33 பேர் பலி
Next post புலிகளை தாக்குவது கஷ்டமல்ல பொது மக்கள் குறித்தே சிந்திக்கிறோம் – பெர்னாண்டோ புள்ளே