புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணம் குறித்தும் அது தொடர்பானதுமான: விரிவான செய்திகள் (புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளது)
இலங்கை விமானப் படையினரின் சுப்பசொனிக் விமானங்கள் நேற்றுக்காலை ஆறு மணியளவில் கிளிநொச்சியில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு புலிகளின் உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். லெப்டினன்ட் கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுந்தன், கப்டன் நேதாஜி, லெப்டினன்ட் ஆட்சிவேல், லெப்டினன்ட் வாகைக்குமரன் ஆகியோரே பிரிகேடியர் தமிழ்செல்வனோடு இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள் என புலிகள் அறிவித்துள்ளனர். நேற்றுக் காலை 04 மணி முதல் கிளிநொச்சி நகரப்பிரதேசத்தில் அரச விமானப்படைக்குச் சொந்தமான வேவு விமானமொன்று வட்டமடித்து, வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் இதனையடுத்து, காலை 06 மணியளவில் கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் குண்டுவீச்சு விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தின எனவும் கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி, பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது முதல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் சிவிலியன்கள் இருவர் கொல்லப்பட்டனர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து. மீண்டும் வான்பரப்பினுள் வந்த குண்டு வீச்சு விமானங்கள் இரண்டாவது தடவையாக நடத்திய குண்டுத் தாக்குதலின் போதே புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச் செல்வனும் ஏனையொரும் கொல்லப்பட்டனர். வான்குண்டுத் தாக்குதலில் தமிழ்ச்செல்வனின் உடலில் நேரடியாக பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் விமானக்குண்டு வெடிப்பு எற்படுத்திய திடீர் பேரமுக்கமும், அதிர்ச்சியுமே அவரது மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கிளிநொச்சித் தகவல்கள் தெரிவித்தன. தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து போரளிகளின் மறைவையொட்டி இன்றும், நாளையும், நாளை மறுதினமும் என மூன்று நாட்களுக்குத் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்க புலிகள் அமைப்பு கோரியிருக்கின்றது.
தமிழ்செல்வனின் பூதவுடலுக்கு அஞ்சலி
தமிழ்செல்வனின் பூதவுடல் புலிகளின் புலிக்கொடி போர்க்கப்பட்ட நிலையில் நேற்றுப் பிற்பகல் அவரது கிளிநொச்சி இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரத்தியேக இடத்தில் வைத்து பிரபாகரனினால் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்ச்செல்வன் தனது துணைவியாரையும் எட்டு வயது மகள் மற்றும் நான்கு வயது மகன் ஆகியோரையும் விட்டுப் பிரிந்திருக்கிறார்.
பிரிகேடியர் பதவிநிலை
புலிகள் தரப்பில் மரணம் அடைந்த போராளிகளில் அதியுயர் படைத்தர நிலைப் பதவியான பிரிகேடியர் பதவிநிலை தமிழ்ச் செல்வனுக்கே இப்போது வழங்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
14 வருடங்களுக்கு முன்னரும் வான் தாக்குதலில் சிக்கியவர்
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பூநகரி இராணுவத்தளம் மீது புலிகள் நடத்திய தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் இருந்து கடும் காயங்களுடன் தப்பிப் பிழைத்த தமிழ்ச்செல்வன் இப்போது விமானக் குண்டு வீச்சில் உயிரிழந்திருக்கின்றார். பூநகரிச் சமரின் போது விமானத் தாக்குதலில் அவரது ஒரு கால் தொடையில் சதைப்பகுதி சிதறியது. இதனால் நீண்டகாலம் நடக்க முடியாமல் சிகிச்சை பெற வேண்டியவரானார். அதன் பின்னர் மெல்லிய சதையுடன் எலும்பு மாத்திரமே அவரது ஒருகாலின் தொடைப்பகுதியில் இருந்தது. அதனாலேயே அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடமாடி வந்தார். 1991இல் ஆனையிறவு முற்றுகைப் சமரின் போதும் அவர் வயிற்றில் காயமடைந்து தப்பிப் பிழைத்தார். 1987- 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படைகள் இலங்கையில் இருந்த போது யாழ், குடாநாடடுக்குள் தங்கியிருந்து இந்தியப்படைகளுக்கு அவ்வப்போது தொல்லை கொடுத்த புலிகளின் முக்கிய போராளிகளுல் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிகொளுத்தி தெற்கில் வரவேற்பு
இதேவேளை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி வெளியாகியதை காலி மற்றும் அநுராதபுரம் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வெடிகொளுத்தி, ஆரவாரம் செய்து வரவேற்றனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. சில இடங்களில் படையினரைப் பாராட்டும் பதாகைகளும் தொங்க விடப்பட்டிருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
புலிகளின் அரசியல் பொறுப்பாளராக நடேசன் நியமிக்கப்பட்டார்
விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இடத்துக்கு புதிய அரசியல் பொறுப்பாளராக பா.நடேசன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார் என இணையத்தள செய்திகள் தெரிவித்தன. இதுவரை புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தவர் பா.நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்பு சிறிலங்கா பொலிஸ்துறையில் சார்ஐன்ட் தரத்தில் கடமையாற்றியவர் என்பதும் இவரது மனைவி சிங்கள இனத்தைச் சேர்ந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவிக்கு நன்றி:- அதிரடி இணையம் WWW.ATHIRADY.COM