முழு இராணுவ மரியாதையுடன் இறுதி விடைபெற்றார் கலாம்!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல் இராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் இன்று 21 குண்டுகள் முழங்க முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், கேரள, ஆந்திர, கர்நாடக முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
கடந்த 27ம் திகதி மாலை மேகாலயா ஐ.ஐ.எம்மில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது கலாம் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்.
உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் டெல்லி கொண்டுவரப்பட்ட அவரது உடலை பிரதமர் மோடி பொறுப்பேற்றார். இதனையடுத்து கலாமின் குடும்பத்தார் விருப்பத்திற்கு இணங்க அவரது உடலை சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டு, கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நேற்றையதினம் முழுவது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கலாமின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அப்துல் கலாம் பற்றி…
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் 1931ம் ஆண்டு அக்டோபர் 15ம் திகதி தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்கு முன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.
ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார்.
கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார்.
அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, “நான் என்ன தர முடியும்” என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
அப்துல் கலாம் பற்றி சில அரிய தகவல்கள்….
• நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
• இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
• அக்னிச் சிறகுகள் எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளிவந்துள்ளது.
• அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
• இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’
• அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு டம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
• அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
• அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சிலவற்றை அவர் தெரிந்து வைத்திருந்தார்.
• இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டவையாகும்.
• போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.
• அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.
• சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–க்களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.
• அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
Average Rating