மலையக மக்களுக்கான காணியுரிமையை நிலைநாட்ட சட்ட அணுகுமுறை அவசியம்!!
மலையக மக்களின் காணியுரிமை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உண்டு. அதேநேரம் 200 வருட வரலாற்றைக்கொண்ட மலையக மக்களின் காணியுரிமையை வென்றெடுக்க அரசியல் பேரம் பேசுதல் மட்டுமன்றி சட்டரீதியான அணுகமுறைகளும் அவசியமும் உள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான திலகர் தெரிவித்துள்ளார்.
டிக்கோயா காசல்ரீயில் இடமபெற்ற தோட்ட சேவையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்குமிடையிலான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்படி கருத்தினை தெரிவித்த திலகர், மேலும் கூறுகையில்,
இன்று மலையக மக்களுக்கான காணியுரிமை குறித்து சமூகத்தின் பல்வேறு மட்டத்திலும், பல்வேறு தளத்திலும் பரவலாக பேசப்படுகின்றது. இந்த விழிப்புணர்வு மிகவும் முக்கியத்துவம் உடையது. சிவனு லட்சுமணன் என்ற தியாகியை மலையகம் இந்த விடயத்தில் நினைவுபடுத்திக்கொள்கின்றது. தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர் அல்லாத குடியிருப்பாளர்கள், தோட்ட சேவையாளர்கள், ஆசிரியர்கள், அரச சேவையாளர்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு இன்று வீட்டுக்கான காணியுரிமையை தாம் பெறவேண்டும் என்பதாகவே உள்ளது.
இந்த உரிமையை அரசாங்கத்திடம் இருந்தே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக நாம் அரசியல் பேரம் பேசும் சக்தியை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதேநேரம் சட்டரீதியான அணுகுமுறைகளும் அவசியமாகவுள்ளது. ஏறக்குறைய 200 வருட பெருந்தோட்ட வரலாற்றில் வெறுமனே 20 வருடங்கள் மாதிரமே அரச பொறுப்பில் தோட்டங்கள் இருந்துள்ளன.
1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டம் அமுலுக்கு வரும்வரை தனியார், அதுவும் பிரித்தானியரே தோட்டங்களை நடாத்தி வந்தனர். எனவே அந்த காணியின் உரிமையும் மறைமுகமாக அவர்கள் வசமே இருந்துள்ளது. அதேபோல 1992 ஆம் ஆண்டு மீளவும் பிராந்திய கம்பனிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கத்தினால் தோட்டங்கள் நிர்வகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.
எனவே 1972 க்கும் 1992க்கும் இடைப்பட்ட காலத்தில் அரச பெருந்தோட்ட யாக்கம் மற்று மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்பனவற்றிற்கு ஊடாக காணி மீளமைப்பு ஆணைக்குழு தோட்டக்காணிகளை ஒப்படைத்து தேயிலை றப்பர் கைத்தொழிலை செய்ய அனுமதித்திருந்தது. மீண்டும் 1992 ஆம் ஆண்டு தோட்டங்கள் தற்போதைய கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டபோது அரச பெருந்தோட்ட யாக்கம் மற்று மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன குத்தகைக்கு வழங்கியுள்ளன.
எனவே இன்று பெருந்தோட்ட நிலங்களின் உரிமம் காணி மீள்வரைவு ஆணைக்குழுவுக்கா அல்லது அரச பெருந்தோட்ட யாக்கம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையினருக்கா என்பதில் சட்ட சிக்கல் நிலவுகிறது.
தாம் வீடுகட்டுவதற்காக வழங்கும் நலம் தமக்கு உரித்தானது இல்லை என தெரிந்துகொண்டுள்ள பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் தற்போது ஏழு பேர்ச் காணிகளை வழங்கி வருகிறது. அதன்போது தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதிரமே வழங்கி வருகிறார்கள். காரணம் தொழிலாளிகள் தோட்டத்தை விட்டுச் சென்றுவிட்டால் தமது தொழில் துறை பாதிப்பை அடையும் என்ற காரணமாகும்.
எனவே தோட்டத் தொழில் அல்லாதவர்களுக்கும் சமூக நிலைமாற்றத்திற்கு உள்ளாகியுள்ள ஏனைய மத்திய தர வர்க்கத்தினருக்கும் காணியுரிமையைப் பெற வேண்டுமாயின் அரசியல் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கப்பட வேண்டியுள்ள அதேநேரம் சட்ட ரீதியாக இந்த பிரச்சினையையை அணுகி மலையக மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வும் உரிய சட்ட அந்தஸ்து உள்ள காணியுறுதிப் பத்திரமும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உளளது.
தற்போதைய நிலைமையில் வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் அரச நிறுவனங்களால் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தபட்ட காணியுறுதிக்கான ஏற்பாடுகள் ஆகும். இதனைப் பெற்றுக்கொண்டு மலையக மக்களுக்கான காணியுரிமைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் செழுமைபடுத்தவும், வலிமைபடுத்தவும் வேண்டியுள்ளது.
இந்த நிலைமைகள் சீர்செய்யப்பட்டால்தான் தோட்ட சேவையாளர்களாகிய உங்களுக்கு காணியுரிமையைப் பெற்றுக்கொடுக்க முடியும். எனவே இந்த உரிமையை வென்றெடுக்க கூடிய அணியைத் தெரிவு செய்யவேண்டியது மக்களின் கடமையாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராமசிவம் மற்றும் தோட்ட மருத்துவ அதிகாரிகள் சார்பில் வைத்தியர் சிவபாலன் ஆகியோரும் கருத்துரைத்தனர்.
Average Rating