புளொட் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து புளொட் விடுத்துள்ள அறிக்கை (விபரமான செய்தி)
புளொட் சிரேஷ்ட உறுப்பினர்களை இலக்கு வைத்து காத்திருந்த புலிகள் கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நேற்று முன்தினம் இரவு வவுனியா முருகனூரில் புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை செல்வராஜா மற்றும் இருதயம் வேதராசா ஆகியோர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமையை அடுத்து நேற்றுமாலை புளொட் தலைவர் மற்றும் சிரேஸ்ட அங்கத்தவர்கள், புலிகளால் பகொலை செய்யப்பட்டவர்களின் வாசல்ஸ்தலத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வாகனங்களில் செல்வதற்கு முன்பாக அப்பிரதேசத்திற்குச் சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் வீதியின் இருமருங்கிலும் சோதனையிட்டபடி நடந்து சென்ற போது எல்லப்பர் மருதங்குளம் கல்லுமலையடியில் வைத்து புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டை கண்டு அதனை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அப்பிரதேசத்தில் மறைந்திருந்த புலிகள் கிளைமோர் குண்டை வெடிக்க வைத்ததுடன் துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொண்டபடி தப்பிச் சென்றுள்ளனர். இலங்கை இராணுவத்தின் சீருடையில் வந்தே புலிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று புளொட் உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.
புளொட் உறுப்பினர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று முன்தினம் 30.10.2007 அன்றிரவு வவுனியா முருகனூரில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட புளொட் அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை செல்வராஜா மற்றும் இருதயம் வேதராசா (ரஞ்சன்) ஆகியோரின் பூதவுடல்கள் நேற்று வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள புளொட் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன்போது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட் சிரேஸ்ட அங்கத்தவர்கள், புளொட் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் பூதவுடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்றுமாலை 6மணியின் பின்னர் இருவரது பூதவுடல்களும் முருகனூரிலுள்ள அவர்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்றுமாலை சிதம்பரப்பிள்ளை செல்வராஜாவின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆசிகுளம் மயானத்திலும், இருதயம் வேதராசாவின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு எல்லப்பர் மருதங்குளம் மயானத்திலும் தகனம் செய்யப்பட்டன. இறுதி நிகழ்வுகளில் புளொட் முக்கியஸ்தர்கள், புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
புளொட் சிரேஸ்ட உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்
புளொட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் வவுனியா முருகனூரில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்து புளொட் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. எமது அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்களான தோழர் சிதம்பரப்பிள்ளை செல்வராஜா மற்றும் இருதயம் வேதராசா ஆகியோர் 30.10.2007அன்றிரவு முருகனூரிலுள்ள அவர்களது இல்லங்களில் வைத்து அவர்களது பிள்ளைகளின் முன்னிலையில் பாசிசப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதன்போது தோழர் வேதராசாவின் மகளான 18வயதுடைய தயாளினி புலிகளின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எமது அரசியல் கட்சியின் பிரச்சாரச் செயலரான தோழர் செல்வராஜா 1984ம் ஆண்டில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார். இவர் யாழ். மன்னார் மற்றும் திருமலை மாவட்ட மக்களுடன் தன்னை ஒன்றிணைத்து கழகத்தின் பணிகளையும், மக்களுக்கான சேவைகளையும் சிறப்பாக ஆற்றி வந்தார்.
கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரான தோழர் ரஞ்சன் என்கிற இருதயம் வேதராசா 1987ம் ஆண்டில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தம்மை கழகத்தில் இணைத்துக் கொண்ட நாளிலிருந்து இற்றைவரை தமிழ் மக்களின் விடிவிற்காகவும், தமது எல்லைப்புற கிராமமக்களின் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணிப்புடன் இவர்கள் செயற்பட்டு வந்தார்கள்.
இதன்போது எமது அமைப்பு சந்தித்த அனைத்து நெருக்கடிகளுக்கும் இவர்கள் முகம் கொடுத்து வந்தனர். தமது அணுகுமுறைகளாலும், பண்பினாலும் இவர்கள் மக்கள் மத்தியிலும் தோழர்கள் மத்தியிலும் மிகுந்த அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். எல்லைப்புற மக்களின் பாதுகாப்பில் இவர்கள் காட்டிய அதீத அக்கறை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
இவர்கள் தமது இல்லங்களில் நிராயுத பாணிகளாக நின்றிருந்த வேளை இவர்களின் குழந்தைகளின் முன்னிலையிலேயே புலிகள் இவர்களை சுட்டுக் கொலை செய்து தமது கொலைவெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளனர். மனித நேயமற்ற இக்கொலைகளை புளொட் அமைப்பினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் இவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரது ஆறாத்துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சர்வதேச ஒன்றியம்.