சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு!!
75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது.
ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்தபோது அதில் 75 சயனைடு குப்பிகள், 300 கிராம் விஷப்பவுடர், 4 ஜி.பி.எஸ். கருவிகள், ரூ. 46,200 ரொக்கம், இலங்கை பணம், 7 கைபேசி இருந்தது. இதனை பறிமுதல் செய்த பொலிஸார் 3 பேரையும் கைது செய்து உச்சிப்புளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், 3 பேரில் ஒருவர் இலங்கை தமிழரான கிருஷ்ணகுமார் (வயது 30), எனவும், இவர் திருச்சி கே.கே.நகரில் வெளிப்பதிவு அகதியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. மற்ற 2 பேர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் எனவும், மற்றொருவர் உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சியை சேர்ந்த கார் டிரைவர் சசிக்குமார் எனவும் தெரியவந்தது.
கைதான கிருஷ்ணகுமார் 1990–ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அந்த இயக்க தலைவரான பிரபாகரனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது கிருஷ்ணகுமார் அங்கிருந்து தப்பி அகதியாக தமிழகம் வந்துள்ளார்.
அவர் இங்கிருந்து தப்பித்து இலங்கை செல்வதற்காக பலமுறை ராமேசுவரம் வந்துள்ளார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. அப்போது அவருக்கு உதவி செய்ய ராஜேந்திரன், சசிக்குமார் முன் வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றபோது பொலிஸில் பிடிபட்டுள்ளனர். நேற்று கைது செய்த 3 பேரையும் பொலிஸார் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணையில் கிருஷ்ணகுமார் எந்தவித தகவல்களை தெரிவிக்க மறுத்து வருகின்றார்.
எதற்காக சயனைடு குப்பிகள், ஜி.பி.எஸ். கருவிகள், விஷ மருந்துகள் கடத்தப்பட்டது என 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் இது குறித்து எந்த தகவல்களையும் தெரிவிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து இவர்களிடம் 2–வது நாளாக ‘ரா’ உள்ளிட்ட புலனாய்வு அமைப்பினரும் விசாரித்து வருகின்றனர். இந்த கடத்தல் பின்னணியில் பெரிய சதி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள்.
Average Rating