முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா?? கூட்டமைப்பிடம், முன்னாள் புலிப் போராளிகள் கோரியது என்ன?? -சுபத்திரா (சிறப்புக்கட்டுரை)!!
விடுதலைப் புலிகள் இயக்கம் தமது போராளிகளை பாராளுமன்றம் அனுப்பும் ஆசைக்காக கூட்டமைப்பை உருவாக்கவில்லை. அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது புலிகளும் அல்ல. அதை வலுப்படுத்தியவர்கள் தான் அவர்கள். எனவே, கூட்டமைப்பு என்பது புலிகளுக்குச் சொந்தமானது என்பது போல உரிமை கோருவதும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயலாகவே தெரிகிறது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் அரசியல் அமைப்பாக ஒருங்கிணைவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் கடந்த வாரத்தில் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பகிரங்கப்படுத்தப்படாத ஒரு இடத்தில்- நடந்ததாகக் கூறப்படும் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைய, ஜனநாயகப் போராளிகள் என்ற கட்சி உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரண்டு முன்னாள் போராளிகளைத் தேர்தலில் நிறுத்த வேண்டும் எனக் கோருவதென்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
அதையடுத்து வவுனியாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை முன்னாள் போராளிகளின் கட்சி சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளரும் ஊடகவியலாளருமான ந.வித்தியாதரன் தலைமையிலான குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தது.
Prabha_and_new_MPs_DM20040421(அன்று… புலிகளுக்கு பயந்து, புலிகள் சொல்லுவதை பேசா மடந்தைகளாக இருந்து கேட்டுக்கொண்டிருந்த கூட்டமைப்பினர். )
(இன்று.. பேசா மடந்தைகளாக இருந்து கூட்டமைப்பினர் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் புலிகள்.. “யாணைக்கு ஒரு காலம் வந்தால் பூனை ஒரு காலம்” வரும் என்பது இதுதானோ!!)
வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா இரு முன்னாள் போராளிகளை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்று அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை, கூட்டமைப்பின் தலைவர்கள் நிராகரித்திருந்தனர்.
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் ஆரம்பித்திருந்த நிலையில் தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவசரமாக முடிவெடுக்கக் கூடிய நிலை இல்லை என்று கூட்டமைப்புத் தலைவர்கள் பதிலளித்ததாகவும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
அதேவேளை, முன்னாள் போராளிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரவணைத்து அரசியல் நடத்தத் தயாரில்லை என்று நிராகரித்து விட்டதாக, அதன் ஒருங்கிணைப்பாளர் ந.வித்தரன் தெரிவித்திருந்தார்.
இருதரப்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்ட இந்தச் சூழலில் அரசியல் வட்டாரங்களில் இது ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியிருந்தது.
முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வரலாமா? – கூடாதா? என்ற விவாதம் இப்போது மேலோங்கியிருக்கிறது.
போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழித்து, முன்னாள் போராளிகளுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மை.
அதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலுக்கோ அல்லது சமூகத்தின் எந்த உயர் நிலைக்கோ வரக்கூடாது என்ற கருத்து எவரிடத்திலும் காணப்பட்டாலும், அது தவறான பிற்போக்குத்தனமான அணுகுமுறை என்பதில் சந்தேகமில்லை.
தமது உயிரைக் கூட, போராட்டத்துக்காக கொடுக்கத் துணிந்தவர்கள் அவர்கள். அதற்காக அவர்கள் பல்வேறு இன்னல்களையும் அபாயங்களையும் சந்தித்தவர்கள்.
ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டதோடு முன்னாள் போராளிகள் மீது சமூகத்திலிருந்து வந்த மதிப்பு கேள்விக்குறியானது.
அவர்களின் உரிமைகள், எதிர்காலம் குறித்துப் பெரும்பாலானோர் சிந்திக்கவேயில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், முன்னாள் போராளிகள் சிலர் செயற்பட்ட விதம், ஒட்டுமொத்த முன்னாள் போராளிகள் பற்றியும் ஒருவித சந்தேகம், அச்சத்தை தமிழ்ச் சமூகத்துக்குக் கொடுத்திருந்தது.
அதாவது, அவர்கள் யாருடைய பக்கத்தில் நிற்கிறார்கள் என்ற சந்தேகமே அது. உண்மையான போராளிகளாக – தமது கொள்கையை மதிக்கின் றவர்களாக இருக்கின்ற ஆயிரக்கணக்கான போராளிகளையும் கூட, இந்தச் சந்தேகமும், பார்வையும், வேதனைப்படுத்துவதாக அமைந்தது.
என்றாலும், கடந்தகால கசப்பான அனுபவங்களால் ஏற்பட்ட சந்தேகம் மற்றும் அச்சத்தினால், தமிழ்ச் சமூகம் முன்னாள் போராளிகள் விடயத்தில் சற்று ஒதுங்கியிருக்கவே விரும்பியது. இந்தச் சந்தேகமும் அச்சமும் தமிழ்ச் சமூகத்தை விட்டு இன்னமும் விலகிவிடவில்லை.
அதேவேளை, ஆயுதப் போராட்டத்தின் முடிவில், அரச படைகளிடம் சரணடைந்து, புனர்வாழ்வு பெற்று வெளியே வந்த முன்னாள் போராளிகளை அரசாங்கமும், அரசபடைகளும் உண்மையாக நம்பிவிடவில்லை. அவர்களைப் பின்தொடர்வதும், கண்காணிப்பதும் வழக்கமான விடயங்களாகவே நீடிக்கின்றன.
முன்னாள் போராளிகள் சிலர் எங்காவது கூடி நின்று பேசினால் கூட, அவர்கள் விசாரணைகளை எதிர்கொள்ளும் நிலை தான் இன்று வரை நீடிக்கிறது.
ஆக, அரசாங்கத்தரப்பின் நம்பகத் தன்மையையும் பெற முடியாத நிலையில், தமிழ்ச் சமூகத்துடன் இயல்பாகவும் முழுமையாகவும் ஒன்றிணையவும் முடியாத நிலையில் – ஒரு ஒட்டா மனிதர்களாகவே முன்னாள் போராளிகள் வாழ்கின்றனர்.
ஒரு காலத்தில் மதிப்புமிக்க போராளிகளாக, – தளபதிகளாக,- பொறுப்பாளர்களாக இருந்தவர்களும், பார்க்கப்பட்டவர்களும், எல்லாவற்றையும் இழந்து தமக்கு யாராவது உதவுவார்களா என்று கையேந்துகின்ற ஒரு நிலை உருவாகியது. அந்த நிலை இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.
அதேவேளை, முன்னாள் போராளிகள் எந்தவகையிலும் மீள ஒருங்கிணையவோ, ஒன்றுகூடவோ விடா மல் தடுத்து வந்திருக்கிறது அரசாங்கம்.
கிட்டத்தட்ட 3,600 முன்னாள் போராளிகளை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து இராணுவத்தின் கண்காணிப்பில் வைத்திருக்கிறது அரசாங்கம். எஞ்சியுள்ளோரையும் வெளியே சுதந்திரமாக இருக்கவிடவில்லை.
இந்தச் சூழலில், முன்னாள் போராளிகள் மத்தியில் இருந்து அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை, இயல்பானதொன்றாக தமிழ்ச் சமூகத்தினால் நோக்க முடியவில்லை என்பது முக்கியமானதொரு விடயம்.
இதன் பின்னணி என்ன – இவர்களின் இலக்கு என்ன – என்ற கேள்விகள் இருக்கின்றன.
இந்தச் சந்தேகங்களை நியாயமான வகையில் தீர்க்க வேண்டிய பொறுப்பு, அரசியலுக்கு வரத் துடிக்கும் முன்னாள் போராளிகளுக்கு இருக்கிறது.
ஏனென்றால், சாதாரணமாக ஒருசில முன்னாள் போராளிகளே ஒன்று கூடிப் பேசமுடியாத ஒரு சூழ்நிலையில்- ஒரு அரசியல் அமைப்பாக இருந்து இயங்குவதற்கு அரசாங்கத்தின் இராணுவக் கட்டமைப்பு ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.
தமது பிரச்சினைகளை, அரசியல் கைதிகள், காணாமற்போனவர்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறவே பாராளுமன்றத்தை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ள இவர்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.
முன்னாள் போராளிகளின் நலன்களை எவரும் கருத்தில் கொள்ளவில்லையாயின், முதலில், அவர்களுக்கான ஒரு சமூக நல அமைப்புத் தான் தொடங்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர, அரசியல் கட்சி அல்ல.
முன்னாள் போராளிகளுக்கான நலன்புரி அமைப்பு அல்லது புனர்வாழ்வு அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் முன்னாள் போராளிகளுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல், கடன் உதவிகளை பெற்றுக் கொடுத்தல் வாழ்வாதாரத்தை உருவாக்குதல் என்று ஏதாவது முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம்.
அத்தகையதொரு தளத்தில் இருந்து அவர்கள் அரசியல் தளத்தை நோக்கி நகர்ந்திருப்பார்களேயானால், அதுகுறித்து யாரும் சந்தேகப்பட்டிருக்கவோ கேள்வி எழுப்பியிருக்கவோமாட்டார்கள்.
ஆனால், திடீரென தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதும், அரசியல் கட்சியை அமைக்கும் முடிவை எடுப்பதும், எடுத்த எடுப்பிலேயே தமக்கு இரண்டு வேட்புமனுக்களைக் கோருவதும் நியாயமற்றதொரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒரு இடத்தைபப் பெறுவதற்கே போராடும் ஒரு நிலையில், மாவட்டம் தோறும் இரண்டு இடங்களை கோருவதும், அதுவும் விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்திக் கோருவது சர்ச்சைக்குரிய விடயமே.
இந்தப் போராளிகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்திருக்கிறார்கள், அதற்காக பாடுபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மை.
அதற்காக, விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் உரிமை கோரும் அதிகாரம் இவர்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு போராட்ட இயக்கமாக இருக்க நினைத்ததே தவிர, அரசியல் கட்சியாக விரும்பவில்லை.
ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய தேவை வந்த போது, ஏனைய புளோட், ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈரோஸ் போன்ற இயக்கங்களைப் போல, விடுதலைப் புலிகள் தமது பெயரில் கட்சியை உருவாக்கவில்லை.
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரைத் தான் வைத்தனர்.
எனவே, முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தை அரசியலுக்காக பயன்படுத்த முனைவது, அவர்கள் உண்மையாகவே, தமது இயக்கத்தின் கொள்கையை நேசித்தார்களா என்ற கேள்வியை எழுப்ப வைக்கிறது.
அதைவிட, விடுதலைப் புலிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்தார்கள் என்றும், எனவே அவர்களுக்கு இரண்டு இடங்களைக் கோரும் உரிமை உள்ளது என்பது போன்று ம்கேட்பது அபத்தமானது.
விடுதலைப் புலிகள் இயக்கம் தமது போராளிகளை பாராளுமன்றம் அனுப்பும் ஆசைக்காக கூட்டமைப்பை உருவாக்கவில்லை.
அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது புலிகளும் அல்ல. அதை வலுப்படுத்தியவர்கள் தான் அவர்கள்.
எனவே கூட்டமைப்பு என்பது புலிகளுக்குச் சொந்தமானது என்பது போல உரிமை கோருவதும் நியாயப்படுத்த முடியாத ஒரு செயலாகவே தெரிகிறது.
முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடியவர்கள் – துன்பங்களையும், காயங்களையும் எதிர்கொண்டவர்கள்.
மரணத்தின் வாயிலை எட்டிப் பார்த்து விட்டு வந்தவர்களும் இருக்கின்றனர்.
அவர்களின் தியாகங்களை மக்கள் மறந்து விடவில்லை.
அதுபோலவே, முன்னாள் போராளிகளுக்கு தமிழ் மக்களின் மீது அக்கறை இருக்கிறது. உரிமையும் இருக்கிறது. ஆனால், அந்த அக்கறையும், உரிமையும் அரசியல் ஆதாய நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்க முடியாது.
அதேவேளை, முன்னாள் போராளிகள் அரசியலுக்கு ஒத்துவராதவர்கள் என்றோ, அவர்களை அரசியல் நீரோட்டத்தில் இணைய முடியாதென்றோ யாரும் கூற முடியாது.
ஒரு காலத்தில் இலங்கையில் ஆயுதம் ஏந்திப் போராடிய, ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட் போன்ற அமைப்புகள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் போது- ஈபிடிபி போன்ற அமைப்புகள் கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து அரசியல் நடத்தும் போது- ஒன்றுக்கு இரண்டு ஆயுதப் புரட்சிகளை நடத்தி தோல்விகண்ட ஜேவிபி அரசியல் கட்சியாக இயங்கும் போது-
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை மட்டும் ஒதுக்கி வைப்பதில் நியாயமில்லை.
அவர்கள் மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கும் ஏனையவர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் உள்ளன. ஆனால், அந்த உரிமைகளை அவர்கள் எந்த வழிமுறையின் ஊடாக அடைய முனைய வேண்டும் என்ற விடயத்தில் தான் பலரும் முரண்படுகின்றனர்.
தேர்தல் காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேரம் பேர முற்பட்டது, வரவேற்கத்தக்கதொரு அணுகுமுறையாக பார்க்கப்படவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வேலைத் திட்டங்களை முன்னெடுத்து, அவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பி, அதன் ஊடாக அரசியல் ரீதியான கூட்டு ஒன்றுக்குள் நுழைவது குறித்து பேசுவது பொருத்தமானது.
அவ்வாறின்றி, திடீரென ஒரு கட்சியை உருவாக்குவதாக அறிவித்து விட்டு, வேட்புமனுக் கோருவதை எந்தக் கட்சியுமே ஏற்றுக்கொள்ளாது.
முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதையே தமிழ் மக்கள் விரும்புவர் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அதற்காக, கூட்டமைப்பின் ஒற்றுமையையோ, அதன் செல்வாக்கையோ சீரழிப்பதற்கு முன்னாள் போராளிகள் முற்பட்டால் அதை அவர்கள் நிச்சயம் விரும்பப் போவதில்லை.
ஏனென்றால், இன்றைய நிலையில், சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்மக்களின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான். அதைப் பலவீனப்படுத்தும் எத்தகைய நகர்வும், தமிழ்மக்களால் சகித்துக் கொள்ளப்படமாட்டாது.
அந்தவகையில் முன்னாள் போராளிகளுக்கு இப்போது வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே அவர்களின் தேவையாக இருக்கும்.
அவ்வாறான ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாய்ப்பளிக்க மறுத்தால் அதற்கெதிராக தமிழ்மக்கள் நிச்சயம் நியாயம் கேட்பார்கள்.
இப்போதுள்ள சூழலில், முன்னாள் போராளிகளின் நகர்வுகளை தெற்கிலுள்ள சிங்களப் பேரினவாத சக்திகளே அதிகம் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தச் சூழலில், முன்னாள் போராளிகள் தமது அரசியல் பாய்ச்சலுக்காக சற்று பதுங்கித் தான் ஆக வேண்டும்.
பதுங்கிக் கொள்ள வேண்டியது பாய்வதற்காகவே தவிர, ஒதுங்கிக் கொள்வதற்காக அல்ல.
– சுபத்திரா- Thanks… ILAKKIYAA
Average Rating