சங்கரன்கோவில் அருகே மனைவி–குழந்தையை கொன்ற கல்லூரி ஊழியர் கைது!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் அருகே உள்ள இடையன்குளத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர் சங்கரன்கோவிலில் உள்ள மனோ கல்லூரி பயிற்சி மையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாள் (32). இவர்களுக்கு 6 மாதத்தில் திவ்யா என்ற பெண் குழந்தை இருந்தது.
வெங்கடேசனுடன் அவரது பெற்றோர் களியன்–முத்துலட்சுமி ஆகியோர் வசித்து வந்தனர். வெங்கடேசன் வீட்டின் மாடியிலும், அவரது பெற்றோர் வீட்டின் கீழ்தளத்திலும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 6–ந்தேதி காலை வெங்கடேசன், இசக்கியம்மாள் நீண்ட நேரமாகியும் மாடியில் இருந்து கீழே வரவில்லை. இதையடுத்து முத்துலட்சுமி மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு இசக்கியம்மாள் கத்தியால் சரமாரி குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை திவ்யா பிணமாக கிடந்தாள்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி அலறியடித்து கொண்டு கீழே இறங்கினார். மேலும் இது குறித்து உடனடியாக சின்னகோவிலான்குளம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தாய்–குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வெங்கடேசனே தனது மனைவி மற்றும் குழந்தையை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. தப்பியோடிய அவரை பிடிக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தர்மராஜ், கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் அழகுகண்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வெங்கடேசனை தேடி வந்தனர். இருப்பினும் அவர் போலீஸ்பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் வெங்கடேசன் சுற்றி திரிவதாக தனிப்படை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் திருச்செந்தூருக்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு சுற்றி திரிந்த வெங்கடேசனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரை சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மனைவி–குழந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து வெங்கடேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனக்கும் எனது மனைவிக்கும் திருமணமாகி 2 வருடம் ஆகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது உடம்பில் சொரியாசிஸ் நோய் ஏற்பட்டது. இதனால் எனது மனைவி உடலுறவு கொள்ள மறுத்து வந்தாள். இதன் காரணமாக அவளது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனது பெற்றோரும் என்னை வெறுத்தனர். இது எனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த 6–ந்தேதி அதிகாலை இசக்கிம்மாளை உடலுறவுக்கு அழைத்தேன். ஆனால் அவள் உங்களுக்கு சொரியாசிஸ் நோய் உள்ளதால் எனக்கும் பரவி விடும். எனவே வேண்டாம் என்றாள். இருப்பினும் நான் அவளை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு அழைத்தேன். இதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இசக்கியம்மாள் இனிமேல் உங்களுடன் வாழ மாட்டேன் என்று கூறி தாலியை கழற்றி எறிந்தாள். இது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோபமடைந்த நான் கத்தியை எடுத்து இசக்கியம்மாள் முகத்தில் சரமாரி குத்தினேன். அவளது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வாயிலும் சரமாரி குத்தினேன். இதில் அவள் இறந்து விட்டாள். இசக்கியம்மாள் இறந்ததால், குழந்தை திவ்யா அனாதையாகி விடுவாளே என்று எண்ணிய நான், திவ்யாவை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொலை செய்தேன். பின்னர் அங்கு படிந்திருந்த ரத்தக்கறையை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
முதலில் ராமேஸ்வரம் சென்றேன். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் சென்றேன். கோவிலில் தங்கியிருந்த நான் மாலை ஆனதும் கோவைக்கு சென்று விடுவேன். பின்னர் அங்கிருந்து திருச்செந்தூர் திரும்பி விடுவேன். இப்படி கடந்த 13 நாட்களாக சுற்றினேன். இருப்பினும் போலீசார் துப்பு துலக்கி திருச்செந்தூரில் பதுங்கியிருந்த என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பாக துப்பு துலக்கி வெங்கடேசனை கைது செய்த தனிப்பிரிவு போலீசாரை சங்கரன்கோவில் டி.எஸ்.பி. லட்சுமணன் பாராட்டினார்.
Average Rating