அப்பநாயக்கன்பாளையத்தில் மலர்ந்த நிஷாகந்தி பூ: நள்ளிரவில் குவிந்த மக்கள்!!
கோவை துடியலூர் அடுத்துள்ள அப்பநாயக்கன்பாளையம் மேற்கு தோட்டத்தில் வசிப்பவர் உதயகுமார். இவர் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். இவரது தோட்டத்தில் பிரம்மகமலம் என்று அழைக்கப்படும் நிஷாகந்தி பூக்கள் மலர்ந்துள்ளன.
இதனைபற்றி விவசாயி உதயகுமார் கூறும்போது, நண்பர் ஒருவர் 2 வருடங்களுக்கு முன் நிஷாகந்தி என்னும் செடியை தந்தார். இதனை தோட்டத்தில் நட்டு வளர்த்து வந்தேன். கடந்த ஆண்டு இந்த செடியில் இரவில் ஒரு பூ பூத்தது. காலையில் பார்க்கும் போது பூ வாடி விட்டது. இருந்தாலும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தேன். தற்போது நன்றாக பூத்துள்ளது.
இந்த மலர் இரவு 8 மணி அளவில் மொட்டுகள் விடத் தொடங்கி நள்ளிரவு 12 மணியளவில் மலர்ந்து அதிகாலையில் வாடும் தன்மை கொண்டது. பூத்துக்குலுங்கும் நிஷா கந்தி மலரின் நறுமணம் அப்பகுதி முழுவதும் வீசத் தொடங்கியுள்ளது. இந்த பூக்களின் நறுமனம் 500 மீட்டருக்கும் மேல் வீசுவதால் இந்த நிஷாகந்தி மலரை பொதுமக்கள் நள்ளிரவில் வந்து பார்த்துச் செல்கின்றனர் என்று கூறினார்.
இந்தச் செடியில், தாமரை மலரைப் போன்று 3 மடங்கு பெரிதாகப் பூக்கும் நிஷா கந்தி மலர், தற்போது மலரத் தொடங்கியுள்ளது. இரவில் பிரம்ம லோகத்தில் இருந்து வரும் தேவர்கள் இதன் நறுமணத்தில் முழ்கி அங்கேயே நிற்பர். அந்த சமயம் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை வரம் வேண்டி கொண்டிருப்பவர்கள் அங்கிருந்தால் தேவர்களின் அருள் பெற்று நன்மை நடக்கும் என்பது ஐதீகம். இந்த பூவின் கொடியை பிரம்மனின் நாடிக்கொடி என்று அழைப்பதால் பிரம்மகமலம் என்று பெயர் வந்துள்ளதாக கூறுப்படுகிறது. மேலும் விஷ்ணு பெருமாள் பாம்பு படுக்கையில் சயனத்திருப்பது போன்று இருப்பதால் அனந்த சயனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இரவில் வெள்ளை நிறத்தில் மலர்வதால் “நைட் குயின்‘ அதாவது இரவின் தேவதை என்று அழைக்கப்படுகிறது. ஜப்பான் மக்கள் நிஷாகாந்திமலரை “பியூட்டி அண்டர் தி மூன்‘ என்று கூறி பெருமை படுத்துகிறார்கள். இதனை இரவில் பார்ப்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. வெட்டுக்காயங்களுக்கு மருந்தாகப்பயன்படும் மூலிகையாக திகழ்கிறது.
நிஷாகந்தி பூக்களை கிராமத்து மக்கள் பாக்கியவதி என்று அழைப்பர். நிஷாகந்தி பூ அனைவரையும் சுண்டி இழுக்கும். இந்த அரிய வகை செடியில் இலையில் தான் பூக்கள் மலரும். 12 வருடத்திற்கு ஒரு முறை குறிஞ்சி பூப்பது போல நிஷாகந்தி ஆண்டிற்கு ஒரு முறை அதிசயமாக பூக்கும். இரவு 9 மணி முதல் 12 மணிக்குள் மலர்ந்து விடும். அதேவேளையில் தொடர்ந்து 3 மணி நேரம் முடிவதற்கு முன்னதாக வாட துவங்கும். ஒரு செடியில் 4, 5 பூக்கள் ஒரே முறையில் மலர்வது நடக்கும்
இந்த நிஷாகந்திக்கு “எப்பில்லம் ஹைபிரிடம்‘ எனும் தாவரவியல் பெயர் உள்ளது. இந்த நிஷாகந்தி பூக்கள் ஆண்டில் ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரங்களில் பூக்கள் மலரும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நிஷாகந்தி மலர், அதிஷ்டம் மிகுந்ததாக கருதப்படுகிறது.
Average Rating