“றோவும்” இலங்கை அரசியலும்!!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தற்சமயம் நிறைவு பெற்றுவிட்டது.
மஹிந்தவுக்கு தேர்தலில் சீட்டேகிடைக்காது என்று நினைத்த யானைக் கட்சிக்கு கைகாட்டிவிட்டார் மைத்திரி. இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிக்குமிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்குவந்துவிடும் எனலாம்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிருஸ்டியும் மகிந்த யுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து மைத்திரியுகத்தினை தொடக்கி வைத்தவருமாகிய சந்திரிக்காவும் மைத்திரிக்கு எதிரான ஒருநிலைப்பாட்டுடன் லண்டன் சென்று திரும்பி தற்சமயம் வந்துகொண்டிருக்கிறார்.
ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியினை தொடர் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையினை மஹிந்த இன்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த58 இலட்சம் வாக்குகள் உண்மையில் மக்களால் விரும்பி அளிக்கப்பட்ட வாக்குகளா? அல்லது முழு அரச இயந்திரங்களையும் பயன்படுத்திப் பறிக்கப்பட்டவாக்குகளா? என்பதற்கான வாதப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க மஹிந்தவுக்கு எதிராக விழுந்த 62 இலட்சம் வாக்குகளும் மைத்திரியின் தனிவாக்குகள் என்று கூறமுடியாது.
இங்கேதான் ஒரு விடயத்தினை உற்று நோக்கவேண்டும். ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி மைத்திரிஅணி, ஐ.தே.க, ஜனநாயகக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகமக்கள் முன்னணி, ஜே.வி.பி,த.தே.கூ என பெரும்பான்மை, மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து எடுத்த வாக்குகளே 62 இலட்சம் ஆகும்.
ஆனால் மஹிந்த பெற்ற வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்றவாக்குகள். இன்று ஈ.பி.டி.பி யினரை விட ஐ.ம.சு.கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வெற்றிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராகிவிட்டன.
தென்னிலங்கை சிங்களக் கட்சியினுடைய கூட்டினை வடக்கு-கிழக்கு தமிழ்பேசும் மக்கள் விருப்பவில்லை என்பதனை உணர்ந்து கொண்டும், அத்துடன் தமது ஆதரவாளர்கள், மக்கள் ஆகியோரிடையே ஏற்படுத்திக் கொண்ட கருத்துக் கணிப்புக்களும் டக்ளஸ் தேவானந்தாவை தனித்து தேர்தலில் களம் இறங்க வைத்துள்ளது.
காலாகாலமாக சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சிங்களத்துடன் ஒரு அவதானமாகவே பழக விரும்புகின்றனர். இதன் காரணமாக சிங்களத்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.டி.பியினை மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலாக கடந்த தேர்தல்களில் தோற்கடித்துள்ளார்கள்.
தற்சமயம் டக்ளஸ் தேவானந்தா யாழ்மாவட்டத்தில் வீணைச்சின்னத்தில் தனது கட்சியில் போட்டியிடுவதனால் 7 சீட்களில் ஒன்றினுடைய வெற்றி உறுதியாகிவிட்டது.
மீதி 6 சீட்களுக்கும் கடும் போட்டி நிகழலாமெனக் கூறப்படுகின்றது. விகிதாசாரத் தேர்தல் முறையில் இத்தேர்தல் நடைபெறுவதால் மக்கள் வாக்களிப்பு வீதம் வெற்றிதோல்வியில் கூடியளவுக்குச் செல்வாக்குச் செலுத்தும் எனக் கருதப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த எதிர்ப்பு அலை ஒன்று யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஆகிய இடங்களில் அதிகம் வீசினாலும் வெற்றிலைக்கு சுமார் 75,000 வாக்குகள் பதிவாகியிருந்தன.
இது யாருடைய வாக்கு என்பதனைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வடமாகாணசபை தேர்தல் போன்றதொரு வாக்குப்பதிவு நடைபெறுமாயின் கட்சிகள் மிக அதிகம் வாக்குகளைப் பெறவேண்டியிருக்கும்.
வாக்குகள் கட்சிகள் சார்ந்து பிரிகின்ற போது சொற்பவாக்குகளைப் பெற்றவர்களும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூடிய வாய்ப்புள்ளது.
த.தே.கூவில் மிக முக்கிய தலைவர்களாகப் போட்டியிடுபவர்களில் மாவை, சித்தார்த்தன், சுரேஸ், சிறிதரன், சுமந்திரன், சம்பந்தன், பொன் செல்வராசா, அரியநேந்திரன், யோகேஸ்வரன், அடைக்கலநாதன், சிவசக்திஆனந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இவர்களில் பலருடைய வேலைத்திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் போதாது என்ற குறைபாடு உள்ளது. கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் வேலை செய்யவில்லை என்ற குறைபாடொன்றும் உள்ளது.
ஒட்டு மொத்த இலங்கையர்களும் ஜனவரி 8 இல் எவ்வாறு ஒரு மாற்றத்தினை கொண்டுவந்தாhர்களோ அதே போல ஆகஸ்ட் 17 லில் ஒரு பெரிய மாற்றத்தினை இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்படுத்துவார்கள் என்பது வெள்ளிடைமலை.
மஹிந்தவை அகற்றி மைத்திரியைக் கொண்டுவந்த மக்கள் மீண்டும் மைத்திரியைத் தர்மசங்கட நிலைக்குத் தள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மைத்திரி ஆட்சிக்கு பக்கபலம் சேர்ப்பார்கள். ஆகவே வெற்றிலை மீண்டும் துளிர்க்கலாம்.
தென்னிலங்கையில் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் மைத்திரி-மஹிந்த கூட்டு எடுபடுமா? என்ற கேள்வி ஒன்றுள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் பல தேர்தல்களில் ஐ.தே.க. வுக்கு வெள்ளையடித்தார்கள்.
ஐ.தே.கவின் உதவியுடன் தான் மைத்திரி மஹிந்தவை வென்றார். இம்முறை இதே உத்தியை வைத்துத்தான், இருவரும் சேர்ந்து மீண்டும் ஐ.தே.கவின் முகத்தில் சாணியடிக்கத் தயாராகிவிட்டனர்.
மைத்திரி-மஹிந்த இருவரும் ஸ்ரீ.ல.சு,க யின் அடிப்படைவாதிகள்.
இந்தக்கட்சியின் தூண்கள். வடமத்திய மாகாணத்தில் தனக்கென ஒரு இடத்தினை வைத்துக் கொண்டு அடிமட்டச் சிங்கள மக்களின் வாக்குகளை வைத்து ஸ்ரீ.ல.சு.கயினை வளர்த்தவர் மைத்திரி என்றால் அதே போல தென்மாகாணத்தினை மையமாக வைத்துச் சுழன்ற சூறாவளி மஹிந்த.
இருவரும் அடிப்படையில் மேல்தட்டு அரசியல்வாதிகளுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, ஏழைச் சிங்கள மக்கள் மேல் ஒருவிதபாசம் கொண்டவர்கள். கடவுள் நம்பிக்கை, ஆன்மீகம் போன்ற விடயங்களில் ரொம்ப ஈடுபாடு கொண்டவர்கள்.
நாட்டுப்பற்று மிக்கவர்கள் அத்துடன் தமது குடும்பத்தின் மீதும் அதீத கரிசனை கொண்டவர்கள். இருவருக்குமிடையே ஒரு பனிப்போரினை உருவாக்கியதில் முக்கியபங்கு வகித்தவர் சந்திரிக்கா. சந்திரிக்கா-மஹிந்த எதிர்புத்தன்மையில் விளைந்த விளைவுதான் மைத்திரியுகம்.
மைத்திரியுகத்தினை முறியடித்து இன்று ஐ.தே.கயுகம் என்பது போலக்காட்டும் ரணில் இந்த 6 மாதகாலத்தில் செய்த ஆட்சியினைதானே முழுமையாக உரிமை கோரப் போகின்றாரா? அல்லது நல்லவற்றுக்கு ரணிலும் கூடாதவற்றுக்கு மைத்திரியும் என்ற கோட்பாடு எடுக்கப்போகின்றாரா?
மைத்திரி ஜனாதிபதியாகிவிட்டார். அரசியலமைப்பினை மீறி பாராளுமன்ற ஜனநாயகத்துக்கு முரணாக ரணில் பிதமராக்கப்பட்டார். மேற்குலகநாடுகள் இதற்குத் துணைநின்றன, என்றெல்லாம் பேசப்படுகின்றது. இதில் உண்மை இருக்கலாம். பொய் இருக்கலாம். ஆனால் எந்தவொரு இலங்கையரும் தனது நாடு வெளிநாட்டுச் சக்திகளுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஆடுவதனை அனுமதிக்கமாட்டார்கள்.
காலாகாலமாக ஐ.தே.க என்பது அமெரிக்க யானை என்பது இலங்கை வாழ் மக்களுக்கு நன்கு தெரியும். இதன் காரணமாகத்தான் கிராமப் புறங்களில் ஐ.தே.க தேர்தல்களில் கூடியளவுக்கு அடிவாங்குகின்றது.
அமெரிக்க ஏகாதி பத்தியம் இலங்கையின் அரசியலில் வெளிப்படையாகக் காட்டப்பட்ட பின்பும் கூட ஐ.தே.கவுக்கு சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா?
மேல்தட்டுமக்கள் வேண்டுமென்றால் அமெரிக்கச் செல்வாக்கினை ஏனோதானோ என விட்டுவிடலாம்.
தற்சமயம் மஹிந்த-மைத்திரி கூட்டுச்சதியின் பின்னணியில் றோ இருப்பதாகப் பேசப்படுகின்றது.
தென்னிலங்கையில் இப்படியானதொரு கைங்கரியத்தினைச் செய்த றோ வடக்கு-கிழக்கில் த.தே.கூ வினது ஏக பிரதிநிதித்துவத்தினை வலுவிழக்கச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபடுவது போல தெரிகிறது.
றோவைப் பொறுத்தவரை அதனுடைய புலி எதிர்ப்புக் கொள்கையில் மாற்றமில்லை. இலங்கையில் ஒரு ஏக பிரதிநிதித்துவம், அது சிங்களமாக இருக்கலாம். அல்லது தமிழாக இருக்கலாம். அதிலும் கூட ஒரு பலமான கூட்டமைப்பினை வலுவிழக்கச் செய்யவேண்டும் என்பது போல றோ தொழிற்படுவதனைக் காணலாம்.
இந்தியாவுடைய சித்தாந்தம் இலங்கையில் பலமான அரசுகள் அமையக்கூடாது. ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைய வேண்டும். இதன்மூலம் இந்தச் சிறியநாட்டில் அரசியல் குழப்பங்கள் பெருகவேண்டும்.
மஹிந்தவினுடைய எழுச்சிக்கும் அன்று றோதான் காரணம். வீழ்ச்சிக்கும் றோதான் காரணம் தற்சமயம் அவரது மீள்எழுச்சிக்கும் றோதான் காரணம்.
இதனை விட தமிழ்த்தலைவர்களிடமும் இந்த றோவின் செல்வாக்கு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. த.தே.கூ றோ சொல்வதைச் செய்யும். வெற்றி தோல்விகளைப்பற்றி அக்கறை இல்லை.முன்னாள் போராளிகளுடைய விவகாரத்தில் கூட றோவின் கைபட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை த.தே.கூ வின் வேட்பாளர் பட்டியல் தெரிவு கூட றோவின் அனுசரணையிலே நடைபெற்றுள்ளதாகவும் நம்பப்படுகின்றது.
இதனைவிடப் பெரிய வேடிக்கை என்னவென்றால் த.தே.கூ பினைப்பதிவதற்கு தமிழரசுக் கட்சியை விட மிகவும் எதிர்ப்பாக நிற்பது றோ.
றோவானது மஹிந்த-மைத்திரி இணைப்புக்கும் தற்சமயம் வழிவகுத்துள்ளது. ராஜித போன்ற முக்கிய தலைவர்கள் சுதந்திரக்கட்சியைவிட்டு வெளியேறுவதற்குரிய சந்தர்ப்பபவாதத்தினை உருவாக்கியதும் வெளிநாட்டு சக்திகள்தான். இதேவேளை த.தே.கூ வின் பிழையான நிகழ்ச்சி நிரலுக்கும் றோ துணை போகின்றது.
இதற்கே இப்படியென்றால் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுவானதொரு தமிழ் ஜனநாயக அமைப்பினை உருவாக்குவதற்கு றோ விடுமா? இலங்கை இனப்பிரச்சினையில் பலசந்தர்ப்பங்களில் சேம்சைட் கோல்கள் அடிக்கும் றோவின் பார்வை இருக்கும்வரை தமிழர்களுக்குத் தீர்வு உண்டா?
த.தே கூவின் வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும் போது தெரிகின்றது யாரோஎழுதி ஏனோதானோஎன இறக்கப்பட்ட முட்டுகாய்கள் போல வேட்பாளர்கள் பலர் உள்ளனர்.
உண்மையில் த.தே.கூ வின் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மிகக்குறைவு. றோவின் ஆதிக்கம்தான் மிகவும் அதிகம்.
றோவுக்கு அடிமைப்பட்ட தமிழ்த்தலைவர்களுக்கு இந்தத்தேர்தலில் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வாக்குச் சூட்டினால் தழும்பு வைப்பதன் மூலம் றோ தனது தோல்வியை வடக்கு கிழக்கில் ஒப்புக் கொள்ளவேண்டும். தமிழ்மக்கள் றோவுக்கு சூடுவைப்பார்களா?
குசேலன்
Average Rating