எமது விடியலை தேடிய பாதையெங்கும் விதை விதைத்த விருட்சங்களில் ஒன்று வீழ்ந்துவிட்டது! -EPDP
மரியாதை செலுத்துகின்றோம்!! “தோழர் கந்தசாமி சற்குணவதி!” 83 இன் ஆரம்ப நாட்கள்….. இந்த விருட்சத்தின் கீழ் நாங்கள் இளைப்பாறினோம். அச்சு வேலி சொந்த ஊர் கல்வயலில் குடும்ப விருட்சமாக இவர் விழைந்ததால் அன்று நாம் நின்றிருந்த ஆயுதப்போராட்டக்களத்திற்கு உரம் கொடுத்த இந்த குடும்ப விருட்சத்தை கல்வயல் அக்கா என்று அழைத்தோம்! இன்று நாம் செல்லும் ஐனநாயகவழிப்பயணத்தில் உரிமை கேட்டு ஒலி எழுப்பும் எங்கள் உதடுகள் இவரை அன்ரி என்று அழைத்தன. இவரது கணவன் தோழர் கண்ணன் எமது மக்களுக்கான உரிமைப்போராட்டத்தில் உறுதியுடன் உழைத்தவர். தன் கணவனுக்கு பக்க பலமாக நின்று மனைவியாக, தோழியாக இறுதி வரை உழைத்தவர். அன்பு காட்டி புன்னகைப்பதில் மட்டும் பூவாக இருந்தவர். ஆனாலும் அடக்கு முறைகளை கண்டு அடங்கியிருந்தவரல்ல அன்ரி! புயலோடு போராடும் போர்க்குணம் கொண்டவர். எடுத்த இலட்சியத்தை எட்டுவதில் மனம் தளராதவர் அன்ரி!
போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் பிரதானம் என்று அன்று நாம் முதன் முதலில் அறைகூவல் விடுத்த போது, அன்றைய எமது ஆயுதப்போராட்ட வழி முறையில் நின்ற பெண்கள் அணியோடு இணைந்து சவால்களை எதிர் கொண்டிருந்த போது அன்ரி மனம் தளரவில்லை! போராட்ட களத்தில் வித்தாகி மரணித்த எங்கள் தோழர்கள் சிந்திய குருதியை கண்டு அன்ரி மனம் தளரவில்லை!
காயப்பட்டு வந்த எமது தோழர்களின் குருதி துடைத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து பாதுகாத்த போதும் அன்ரி குருதி வடியும் காயங்களை கண்டு மனம் தளரவில்லை! சமூக நீதிக்கும், சமத்துவத்திற்குமான போராட்டங்களை நாம் முன்னெடுத்த போது அதில் தானும் பங்கு கொண்ட அன்ரி மனம் தளரவில்லை!
தமிழர்களை தமிழர்களே கொன்றொழித்து வரும் பாசிசப்புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் விஐpதரன் எங்கே என்று கேட்டு ஊர்வலம் நடத்திய அன்ரி புலிகளால் அடித்து காயப்பட்டிருந்த போதும் மனம் தளரவில்லை!
தாம் மட்டும் போராட வேண்டும் என்ற ஏகபிரதித்துவ தலமை வெறியினால் புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்து, மாற்று இயக்கங்களின் குடும்பங்களை கொன்றொழித்தனர். எஞ்சியுள்ளவர்களை படகில் ஏற்றி இந்தியாவிற்கு துரத்தினார்கள். அதில் அன்ரியின் குடும்பத்தவர்களும் துரத்தப்பட்டனர். ஆதனால் நடுக்கடலில் தத்தளித்த அன்ரி அப்போதும் மனம் தளரவில்லை!
1991 இல் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலட்சிய கனவுகளோடு மீண்டும் எம் தேத்தில் கால்பதித்த போது மனம்தளராத அன்ரி தன் கணவன் தோழர் கண்ணனோடு ஈ.பி.டி.பி யில் இணைந்து கொண்டார்.
புலித்தலமையினால் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக அவிட்டுவிடப்பட்டிருந்த நவீன அடக்கு முறைக்கு எதிராக பலத்த சாவல்களுக்கு மத்தியில் எம்மால் நடத்தப்பட்ட மக்கள் குரல் வானொலிச்சேவையில் ஐனநாயகத்தின் குரலாக ஒலித்திருந்த அன்ரி அப்போதும் மனம் தளரவில்லை!
தன் கணவவன் தோழர் கண்ணன் நோய்வாய்ப்பட்டு இறந்த போதும், தொடர்ந்தும் ஈ.பி.டி.பியில் இணைந்து செயலாற்றியிருந்த அன்ரி அப்போதும் மனம் தளரவில்லை! பாசிசப்புலிகளால் எமது தோழர்கள் பலர் கொல்லப்பட்டும், செயலாளர் நாயகத்தின் மீது தற்கொலை குண்டு தாரிகளை புலிகள் ஏவிவிட்டிருந்த போதும், மனம் தளராத அன்ரி தன் கருவறை வித்துக்களான பிள்ளைகளையும், குடும்பத்தவர்களையும் ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களாக இணைவதற்கு சம்மதித்திருந்தார்.
1994 இல் நாம் பாராளுமன்ற பிரதிநித்துவங்களை பெற்று எமது மக்களுக்கான அரசியல் மற்றும் அபிவிருத்தி பணிகளை சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்த போது அந்த சால்களை ஏற்று எம்மோடு இணைந்து செயலாற்றிய அன்ரி அப்போதும் மனம் தளரவில்லை!
1998 இல் நாம் யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி சபை தேர்தலின் போட்டியிட்ட போதும், அதில் வெற்றியடைந்திருந்த போதும், எமது மக்களின் வாழ்வில் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்திய போதும், எமது உன்னத தோழர்கள் மக்களின் மகிழ்ச்சிக்கு எதிரான புலித்தலமையால் கொல்லப்பட்ட போதும் எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருந்த அன்ரி மனம் தளரவில்லை!
எமது மக்களுக்கு அவலங்களை உருவாக்கி, புலிகளால் தூண்டிவிடப்பட்டிருக்கும் அழிவு யுத்தத்தை எதிர்த்து ஈ.பி.டி.பி யினராகிய நாம் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறையில் அரசியலுரிமை சுதந்திரத்தை அடைவதற்கு மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அயராது உழைத்து வரும் எம்மோடு இறுதி வரை இணைந்திருந்த அன்ரி எதற்கும் மனம் தளர்ந்திருக்கவில்லை.
ஆகவே, மனம் தளராத மாதர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு! எங்கள் சற்குணவதி அன்ரி!
விழ விழ எழுந்து குருதி துடைத்து எழுந்து வரும் எங்கள் செயலாளர் நாயகத்தின் இலட்சியப்பயணமெங்கும் இறுதி வரை உறுதியோடு மனம் தளந்தளராமல் உழைத்து வந்தவர் அன்ரி! 58 வயதான அன்ரி இறுதிக்காலத்தில் ஊர்காற்றுறை கரம்பனில் வாழ்ந்து வந்தவர். மாதர் அபிவிருத்தி சங்கம், மற்றும் பொது அமைப்புகளோடு தன்னையும் இணைத்து மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்தவர் இவர்.
ஈழப்போராட்ட வரலாற்றில் அன்ரிக்கு அழியாத பதிவுண்டு! ஈழப்பெண்களின் மனந்தளராத மாதர்களில் வரலாற்றில் அன்ரிக்கும் முதலிடம் உண்டு! ஈ.பி.டி.பி யின் இலட்சிய பயணத்தின் வரலாற்றில் அன்ரிக்கும் பிரதான பங்குண்டு!
எமது மக்கள் சாவதற்காக அல்ல அவர்கள் வாழ்வதற்காகவே நாங்கள் உழைப்பவர்கள்! மனித உயிர்கள் கொல்லப்படவும், மனித மனங்கள் அச்சப்படவும், உரிமை அற்று தொடர்ந்தும் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படவும் இருக்கின்ற சூழலை நாம் மாற்றுவோம். இதுவே அன்ரிக்கு நாம் செலுத்தும் இறுதி மரியதை ஆகும்! அன்ரியின் கருவறை வித்துக்களும், உறவுகளும், அவர்களோடு சேர்ந்து நாமும் எமது இலட்சியத்தை நோக்கி உறுதியுடன் நடப்போம்.
இதயம் கனத்து வலியெடுத்து மனம் தளராத மாதர்களின் அரசி எங்கள் ஈழ மாதர் அணியின் அமைப்பாளர் கந்தசாமி சற்குணவதி அன்ரிக்கு நாம் இறுதி மரியாதை செலுத்துகின்றோம்!
ஈழ மக்கள் ஐனநாக கட்சி ஈ.பி.டி.பி