அரூர் அருகே கணவனால் உயிரோடு எரிக்கப்பட்ட பெண் சாவு!!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது ஏ.விளாம்பட்டி. இந்த பகுதியில் வசித்து வருபவர் காமராஜ். இவரது மகள் ஆஷா(வயது 19). இவர் 9–ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், இளம்பெண் ஆஷாவுக்கும் ஜடையம் பட்டியை சேர்ந்த நல்லான் மகன் சென்னையன் (வயது 25) என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன சில மாதங்கள் வரை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். பின்னர் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு உருவானது. அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனைவி ஆஷா மனம் உடைந்தார். மேலும் கணவருடன் வாழ்வதற்கு பயம் ஏற்பட்டது.
இதனால் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட முடிவு செய்தார். அதன் படி ஏ.விளாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு தாய்–தந்தையுடன் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையன் ஏ.விளாம்பட்டிக்கு வந்தார். மனைவி ஆஷாவை குடும்பம் நடத்த அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார். எனினும் அவரை விடாமல் சென்னையன் பக்கத்து வீட்டிற்கு அழைத்துச் சென்று சமாதானம் பேசி குடும்ப நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது ஆஷா உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டதும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிச்சென்று அவரை காப்பாற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சென்னையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார், தலைமறைவாக இருந்த சென்னையனை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆஷாவிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில் எங்கள் வீட்டில் வைத்து பேசினால், நான் மீண்டும் குடும்பம் நடத்த அவருடன் செல்லமாட்டேன் என்று நினைத்து என்னை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை வலுக்கட்டாயமாக குடும்பம் நடத்த வருமாறு கணவர் சென்னையன் அழைத்தார்.
நான் உங்களுடன் வாழ்ந்தால் தினம், தினம் சண்டை ஏற்படுகிறது. தினமும் தகராறு செய்வதால் என்னால் உங்களுடன் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனவே உங்களுடன் வரமாட்டேன் என்று கூறினேன்.
உடனே ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து என் மீது ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வாலிபர் சென்னையன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஆஷா நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்ததால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
ஆஷாவுக்கு திருமணம் நடந்து 1½ வருடங்களே ஆவதால் அரூர் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating