ஆனைமலை தொழிலாளி கொலையில் மனைவி கைது: கள்ளக்காதலை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம்!!
பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஞானசேகரன்(வயது 45). பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை ஆழியாற்றங்கரை மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் ஞானசேகரனை அவரது மனைவி கஸ்தூரி(33), கள்ளக்காதலன் சுரேஷ்கோபி(46), இவரது நண்பர்கள் சஞ்சீவி (32), மைதீன்பாட்சா(35), சபரி நாதன்(44) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.
போலீஸ் தேடுவதை அறிந்த சுரேஷ்கோபி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து கஸ்தூரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஸ்தூரி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது கணவர் ஞானசேகரன் பொள்ளாச்சியில் டீக்கடையில் வேலை பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சுரேஷ்கோபியுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகினர். இதனால் சுரேஷ்கோபி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்தார்.
எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் என்னை பற்றியோ, குழந்தைகளை பற்றியோ கவலைப்படாமல் இருந்தார். இந்நிலையில் எனக்கும், சுரேஷ்கோபிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்தோம். இது என் கணவருக்கு தெரிந்ததும் அவர் என்னை கண்டித்தார்.
இந்நிலையில் சுரேஷ்கோபி ஆனைமலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு சென்றாலும் அடிக்கடி என்னை சந்தித்தார். கடந்த 5–ந்தேதி நாங்கள் தனிமையில் ஜாலியாக இருந்ததை ஞானசேகரன் பார்த்து விட்டார். இதனால் எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. கள்ளக்காதலை கைவிடுமாறு கடுமையாக எச்சரித்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்டலாம் என நானும், சுரேஷ்கோபியும் திட்டம் தீட்டினோம்.
அதன்படி சம்பவத்தன்று சுரேஷ்கோபி ஆனைமலையில் மது மற்றும் கறி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக கூறி எனது கணவரை அழைத்தார். மதுவுக்கு ஆசைப்பட்டு சென்ற ஞானசேகரனுக்கு மது ஊற்றிக்கொடுத்தனர்.
போதையில் இருந்த ஞானசேகரனை சுரேஷ்கோபி, அவரது நண்பர்கள் சஞ்சீவ், மைதீன்பாட்சா, சபரிநாதன் ஆகியோர் சேர்ந்து பெரிய கல்லை தலையில் போட்டுக்கொலை செய்தனர். பின்னர் முகம் தெரியாமல் இருக்க முகத்தை சிதைத்தனர். எனினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஞானசேகரனை தீர்த்துக் கட்டுவதற்காக சுரேஷ்கோபி தனது நண்பர்களான சஞ்சீவ், மைதீன்பாட்சா, சபரிநாதன் ஆகியோருக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் மதுபாட்டில்களை வாங்கி கொடுத்ததும் தெரிய வந்தது.
கொலை நடந்த நாளில் கஸ்தூரி தனது கள்ளக்காதலன் சுரேஷ்கோபியுடன் பல முறை செல்போனில் பேசி உள்ளார். இந்த அழைப்பு விவரங்களை பட்டியல் சேகரித்து போலீசார் விசாரித்த போது கஸ்தூரி கையும், களவுமாக சிக்கிக்கொண்டார். கைதான கஸ்தூரி உள்பட 4 பேரையும் பொள்ளாச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating