மனைவியை பார்க்க வந்த வாலிபர் கை–காலை கட்டி கடத்திய 5 பேர் யார்? போலீசார் தீவிர விசாரணை!!
சேலம் அயோத்திபட்டினம் பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 33). கார்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலையை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்தார். இவரது முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இதையடுத்து சேலம் பகுதியை சேர்ந்த சவுமியா (24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை மோகன் குமார் 2–வது திருமணம் செய்து கொண்டார். சவுமியாவை பார்க்க அவரது தாய் ஆதிலட்சுமி அடிக்கடி வந்து சென்றார். ஆதிலட்சுமியின் தம்பி துபாயில் இருந்தார். எனவே அவரை பார்க்க ஆதிலட்சுமி துபாய் சென்றுவிட்டார்.
கடந்த 23.6.2015–ல் அவர் துபாயில் இருந்து சேலம் திரும்பி வந்தார். தன் மகள் சவுமியாவை சென்று பார்த்தார். நீ மோகன்குமாருடன் வாழ வேண்டாம். அவரை விட்டு பிரிந்து வா துபாய்க்கு போ. அங்கு சம்பாதித்து நன்றாக வாழலாம் என்று கூறினார். ஆனால் சவுமியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. கணவரை விட்டு பிரிந்து வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.
ஆனால் ஆதிலட்சுமி தன் மகள் சவுமியாவிடம் புதுவைக்கு சென்றுவிட்டு வரலாம் என்று கூறி அவரை அழைத்து வந்தார். புதுவையில் உறவினர் வீட்டில் அவரை தங்க வைத்திருந்தார். அவரை ஏமாற்றி துபாய்க்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சவுமியா சேலத்தில் உள்ள தன் கணவர் மோகன்குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். எனவே அவரை மீட்பதற்காக மோகன்குமார் ஒரு காரில் நேற்று முன்தினம் புதுவை வந்தார். சவுமியா தங்க வைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு சென்றார். அவரை மீட்க முயற்சி செய்தார்.
அப்போது அங்கு நின்ற 5 பேர் மோகன்குமாரை தாக்கினார்கள். இங்கே ஏன் வந்தாய் என்று மிரட்டினார்கள். பின்னர் மோகன்குமாரை அவர் வந்த காரிலேயே அவரை கடத்தி சென்றனர். அவர் சத்தம்போட்டதால் அவர் கை–கால்களை கட்டினார். வாயில் துணியால் கட்டினார்கள். அவர் திமிறினார்.
விழுப்புரம் எல்லிஸ் ரோடு அருகே வந்தபோது ஆள் நடமாட்டம் இருந்ததால் காரை அங்கு நிறுத்தினார்கள். அப்போது சந்தேகப்பட்டு சிலர் அந்த பகுதிக்கு வந்ததால் அவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். காருக்குள் கை–கால் கட்டப்பட்ட நிலையில் இருந்த மோகன்குமாரை அவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மோகன்குமாரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மனைவியை மீட்பதற்காக புதுவை சென்றபோது 5 பேரால் தான் கடத்தப்பட்ட சம்பவத்தை கூறினார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மோகன்குமாரை காரில் கடத்திய 5 பேர் யார்? யார்? என்ன நோக்கத்துக்காக அவர்கள் கடத்தினார்கள் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரில் கடத்தப்பட்ட மோகன்குமார் விடுவிக்கப்பட்டதை அறிந்து அவரது உறவினர்கள் சேலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு வந்தனர். அவரை பாதுகாப்பாக சேலத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும்ப பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating