உடுமலையில் குடிபோதையில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜீவா நகரை சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ் (வயது 24). பெயிண்டர். இவர் கடந்த 1 வருடத்துக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து வேற்று மதத்தை சேர்ந்த சஜிதா பேகத்தை (18) காதலித்து திருமணம் செய்து கொண்டர். திருமணத்துக்கு பிறகு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினர். இதன்விளைவாக சஜிதா பேகம் கர்ப்பம் அடைந்தார்.
இந்த தகவலறிந்ததும் சஜீதா பேகத்தின் தாய் அவரை தன் குடும்பத்துடன் சேர்த்துக் கொண்டார். இருந்த போதிலும் ஆகாஷ் ராஜாவும், சஜிதா பேகமும் தனியாக வசித்து வந்தனர். ஆகாஷ் ராஜாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவியது.
தற்போது சஜிதா பேகம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை போதையில் வீட்டுக்கு வந்த ஆகாஷ் ராஜ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். தகவலறிந்து சஜிதா பேகத்தின் தாய் மகள் வீட்டுக்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு அவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
மாமியார் சென்றதும் வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்ட ஆகாஷ் ராஜ் மீண்டும் போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். அவரிடம் சஜிதா பேகம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் ராஜ் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல் மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்று சுவற்றில் தலையை இடித்தார். இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே சஜிதா பேகம் துடிதுடித்து இறந்தார்.
சிறிது போதை தெளிந்த ஆகாஷ் ராஜ் மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மனைவியையும், அவரது வயிற்றில் இருந்த சிசுவையும் கொன்று விட்டோமே என்று அஞ்சிய ஆகாஷ் ராஜ் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்து பிளேடால் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரத்த வெள்ளத்தில் மனைவியின் அருகே மயங்கினார்.
இதற்கிடையே சஜிதா பேகத்தின் தாய் தனது மகளும், மருமகனும் சண்டை போட்டு கொண்டிருந்ததால் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இரவு 7 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்தார். மகளின் வீடு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்ததால் மகளை அழைத்தார். நீண்ட நேரம் அழைத்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அதிர்ச்சியடைந்து அவர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார்.
அவர்கள் வீட்டின் கூரை மேல் ஏறி ஓட்டைப்பிரித்து வீட்டுக்குள் இறங்கினர். அங்கு கணவன்–மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரகாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆகாஷ் ராஜின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிணமாக கிடந்த சஜிதா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முயன்ற ஆகாஷ் ராஜை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மனைவியை போதையில் கொலை செய்த ஆகாஷ் ராஜை கைது செய்து அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating