ராசிபுரம் அருகே போலீஸ்காரர் மனைவி, மகன் தீயில் கருகி சாவு!!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிபேட்டையைச் சேர்ந்தவர் காளியப்பன். மெக்கானிக். இவரது மகள் மணிமலர் (25) இவருக்கும் நாமகிரிபேட்டை அருகேயுள்ள மெட்டாலா பக்கமுள்ள உடையார் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி–பாப்பாத்தி ஆகியோர் மகன் பெருமாள் என்கிற பாண்டியன் என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக தெரிகிறது.
பெருமாள் என்கிற பாண்டியன் தற்போது அஸ்ஸாம் மாநிலம் புலாட் பகுதியில் உள்ள 142வது பட்டாலியனில் மத்திய பாதுகாப்பு ரிசர்வ் போலீஸ்காரராக (சி.ஆர்.பி.எப்) வேலை பார்த்து வருகிறார். பெருமாள்–மணிமலர் தம்பதியினருக்கு ஜேவியாஸ் (2) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் 1 மாதம் விடுமுறையில் போலீஸ்காரர் பெருமாள் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவர் பணிக்கு திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது
நேற்று (திங்கட்கிழமை) காலையில் மணிமலரின் மாமனார், மாமியார் வேலைக்கு வெளியில் சென்றுவிட்டனர். வீட்டில் மணிமலர் மற்றும் மகன் ஜேவியாஸ் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில நேற்று மதியம் அவர்களது வீட்டில் இருந்து புகை கிளம்பி வெளியே வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மணிமலர் மற்றும் அவரது மகன் ஜேவியாஸ் இருவரும் தீயில் கருகி பிணமாக கிடந்தனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள், மணிமலரின் பெற்றோர் விரைந்து சென்று அவர்களது உடலை பார்த்து கதறி அழுதனர். உறவினர்கள் சோகத்தில் உறைந்தனர்.
இது பற்றி மணிமலரின் கணவரான மத்திய பாதுகாப்பு ரிசர்வ் போலீஸ்காரர் பெருமாள் என்கிற பாண்டியனுக்கு தகவல் தரப்பட்டு உள்ளது. மணிமலர் தனது மகனுடன் தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு, ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பேளுகுறிச்சி இன்ஸ்பெக்டர் பொறுப்பு) ராஜாரணவீரன், ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
போலீசார் மணிமலரின் பெற்றோர், மாமனார், மாமியார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். தீயில் கருகி பிணமாக கிடந்த மணிமலர் மற்றும் ஜேவியாஸ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மத்திய பாதுகாப்பு படை ரிசர்வ் போலீஸ்காரர் பெருமாள் என்கிற பாண்டியனுக்கும் மணிமலருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் மட்டும் ஆகி இருப்பதால் மணிமலரின் இறப்பு குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் கண்ணன் விசாரணை நடத்துவதற்காக தகவல் தந்துள்ளனர்.
உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் போலீசார் ஆகியோரின் இறுதிகட்ட விசாரணைக்குப் பிறகுதான் மணிமலர் மற்றும் அவரது மகன் ஜேவியாஸ் ஆகியோர் தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனரா? அப்படியானால் அதற்கு என்ன காரணம்? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? போன்ற விவரங்கள் தெரியவரும். மேலும் மணிமலர் முதலில் தனது மகனை தீ வைத்துகொன்றாரா? அல்லது இருவரும் ஒன்றாக தீ வைத்துக்கொண்டு செத்தார்களா? என்பது தெரியவில்லை.
2 வயது மகனுடன் தாய் தீயில் கருகி பிணமாக கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. மணிமலர் மற்றும் அவரது மகன் ஜேவியாஸ் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனை இன்று (செவ்வாய்க்கிழமை) உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
Average Rating