20 நாட்களில் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் எதிர்கால இந்தியா என்னவாகும்?
இந்தியாவின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் விவசாயமும் அந்த விவசாயத்திற்காக ரத்தம் சிந்தி உழைக்கும் விவசாயியும் அதிவேகமாக அழிந்து வரும் நிலையில் எதிர்கால இந்தியா குறித்த அச்சம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகமாகியுள்ளது. இதை இன்னும் அதிகமாக்கும் வகையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 13 விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தியாவின் பல கிராமங்களில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. தற்போதைய உலகமயமாதல் காலக்கட்டத்தில் விவசாயம் படிப்படியாக அழிந்து வருகிறது. இருப்பினும் இந்திய விவசாயத்தில் குறிப்பாக கர்நாடகத்தின் பங்கு முக்கியமானதாகும். இதற்கு இங்கு உற்பத்தியாகும் காவிரி நதியும், தண்ணீரை அதிகளவு சேமித்து வைக்கும் பொருட்டு அமைக்கப்பட்டு உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, லிங்கனமக்கி, ஹாரங்கி, ஹேமாவதி போன்ற அணைகளும் தான் காரணம்.
இவை அனைத்தும் தென்கர்நாடக விவசாயிகளின் நிலத்தை வளமாக்குகிறது. வடகர்நாடக மக்கள் பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறுகள், குளம், குட்டை ஆகியவற்றை நம்பியே விவசாயம் செய்து வருகிறார்கள். கர்நாடக விவசாய பயிர்களில் முக்கிய இடத்தை கரும்பு பிடித்துள்ளது.
இது ஒருபுறம் இருப்பினும் நாள்தோறும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏறுமுகமாகவே உள்ளன. இதில், கர்நாடக விவசாயிகளும் விதிவிலக்கல்ல. கடன் தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் நசுக்கப்படுவதுடன், விவசாயமும் படிப்படியாக அழிந்து வருகிறது. விவசாயத்தை வளமாக்கி விவசாயிகளின் நலனை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் விவசாய கூட்டுறவு வங்கி திறந்து உள்ளதுடன் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளன. இருப்பினும், இந்த நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு எட்டாக் கனியாகவே தான் இன்னும் இருக்கின்றன.
கர்நாடகத்தில் உள்ள விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் வங்கி, உறவினர்கள் மற்றும் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனாலும் பருவம் தவறிய மழை, அதிக மழை, வறட்சி, விவசாய பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காதது என்பன போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தோட்டத்தில் தாங்கள் பயிரிட்டுள்ள கரும்பு, சோளம் உள்பட பல்வேறு பயிர்களை தாங்களாகவே தீவைத்தும், வாகனங்களை ஏற்றியும் அழித்து வருகிறார்கள். இன்னும் சிலர் எதிர்கால வாழ்க்கையை நினைத்து தற்கொலை செய்து விடுகிறார்கள்.
கடந்த 20 நாட்களில் மட்டும் கர்நாடகத்தில் மொத்தம் 13 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில விவசாயிகள் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாநிலம் முழுவதும் விவசாய குடும்பங்களில் மரண ஓலங்கள் தொடர்ந்து ஒலித்து கொண்டு இருக்கின்றன. விவசாயிகளின் இந்த தற்கொலைகளுக்கு பெரும்பாலும் கடன் தொல்லை தான் காரணம் என கூறப்படுகிறது.
விவசாயிகளின் இந்த தற்கொலைகள் கர்நாடகத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக விசுவரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக போலீஸ் அதிகாரிகள் விவசாயிகளிடம் அதிக வட்டி வசூலிக்கும் கந்து வட்டிக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், மாநில அரசு மற்றும் போலீஸ்காரர்களால் விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை. மாறாக தினந்தோறும் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஏதேனும் சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமா? என்பது தான் இப்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Average Rating