நாமக்கல் பழக்கடை அதிபர் கொலையில் பிளஸ்–2 மாணவர் உள்பட 3 பேர் கைது!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42). இவர் நாமக்கல் நேதாஜி சிலை அருகே பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் காலை இவர் உழவர் சந்தக்கு சென்றுவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண் டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழி மறித்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றனர்.
நடு ரோட்டில் நடந்த இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நாமக்கல் சேந்தமங்கலம் ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப் போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிற்குமாறு போலீசார் கூறினார்கள். ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் போலீசார் அவர்களை சிறிது தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் 3 பேரும் பழ வியாபாரி சுப்பிரமணியை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
காசி என்ற காசிராஜன் (வயது 27), நாமக்கல் மாசி கங்காணி தெருவைச் சேர்ந்தவர்.
ராமு என்ற ராமசந்திரன் (29). சேலம் ஜான்சன் பேட்டையைச் சேர்ந்தவர்.
நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர். இவர் எருமப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
போலீசார் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளத் தொடர்பு காரணமாக இந்த கொடூர கொலை நடந்தது தெரிய வந்தது.
நாமக்கல் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலை பார்த்து வரும் வீரா என்ற வீரக்குமார் (32). என்பவருக்கும் கொலை யுண்ட சுப்பிரமணியின் மனைவி ராணிக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப் படுகிறது.
இந்த தொடர்பு சுப்பிரமணிக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை கண்டித் தார். அதன்பிறகு கடந்த சில மாதங்களாக ராணி வீராவை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கணவர் கண்டிப்பதால் தான் ராணி தன்னுடன் உள்ள தொடர்பை துண்டித்ததாக வீரக்குமார் கருதினார். இதனால் சுப்பிரமணியை அவர் தீர்த்துக்கட்ட முடிவு செய்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து நண்பர்கள் உதவியுடன் சுப்பிரமணியை கொன்றது போலீசாருக்கு தெரியவந்தது.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் வீரா மற்றும் அவரது நண்பர் சேகர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீரா போலீசில் சிக்கினால் தான் என்ன காரணத்திற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்த முழு விவரம் தெரியவரும். இதற்கிடையில் சுப்பிரமணி மனைவி ராணியிடம் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான காசிராஜன் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயில் தண் டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான பிளஸ்–2 மாணவர் உள்பட 3 பேரும் நாமக்கல் ஜே.எம்.–1 நீதிபதி மோகனம்மாள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பழ வியாபாரி கொலையில் பிளஸ்–2 மாணவர் ஒருவர் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating