ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது ஜவுளி கடையில் வேலை பார்த்த பவித்ரா!!
ஆம்பூர் கலவர பின்னணியில் இருந்த பவித்ரா, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசில் சிக்கியுள்ளார்.
ஆம்பூரில் கலவரம் வெடித்தபோது அவர் சத்தமே இல்லாமல் சென்னையில் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.
அம்பத்தூரில் மகளிர் விடுதியில் தங்கியிருந்து ஜவுளி கடையில் அவர் வேலை செய்துள்ளார்.
விசாரணையில் பவித்ரா கூறியதாவது:–
‘‘பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்க்கும்போது ஆம்பூரை சேர்ந்த ஷமில்அகமதுவுடன் சுமார் 1 வருடமாக தொடர்பு இருந்தது.
ஷமில் அகமது ஈரோட்டில் தங்கி வேலை பார்த்தார். கடந்த 24–ந் தேதி ஷமிலை பார்க்க யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து புறப்பட்டேன். வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் சென்றேன். அன்று இரவு விடிய விடிய கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்தேன்.
அப்போது 5 முறை ஷமில் அகமதுவை செல்போனில் தொடர்பு கொண்டேன். அவர் ஈரோடு வரச் சொன்னார். மறுநாள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் சென்றேன்.
அதிகாலை 3 மணிக்கு ஈரோட்டில் இறங்கினேன். எனக்காக காத்திருந்த ஷமில் அகமது என்னை மோட்டார் சைக்கிளில் குமார பாளையம் அழைத்து சென்றார்.
அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்தார். வீட்டுக்கு தேவையான பாத்திரங்கள், பாய் ஆகியவை வாங்கி கொடுத்தார். அன்று இரவு என்னோடு தங்கியிருந்தார். அப்போது ஷமில் அகமது மனைவி அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார். தன்னுடைய மனைவிக்கு பயந்த ஷமில் அகமது என்னை ஊருக்கு சென்றுவிடும்படி கூறினார்.
இதனால் அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து கோபத்துடன் புறப்பட்டேன். ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு சென்றேன். அப்போது சுரேந்தருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவருடன் பாண்டிச்சேரிக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்தேன். அவர் என்னை அம்பத்தூரில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்க வைத்தார். செலவுக்கு பணம் இல்லை. அதனால் அம்பத்தூரில் உள்ள அடகு கடையில் தாலியை ரூ.3 ஆயிரத்துக்கும், மோதிரத்தை ரூ.2 ஆயிரத்துக்கும் அடகு வைத்தேன். தனிப்படை போலீசார் விடுதிக்கு வந்து என்னை கண்டு பிடித்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பவித்ரா மாயமானது தொடர்பாக ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் கூறியதாவது:–
இறந்து போன ஷமில் அகமது, பவித்ரா ஆகியோருக்கு இடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோட்டுக்கு சென்று தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்நிலையில்தான் பவித்ராவின் கணவர் பழனி, பவித்ராவை ஷமில்அகமது கடத்திச் சென்று விட்டதாக புகார் கூறி இருந்தார்.
இதுபற்றி தெரியவந்த பின்னரே ஷமில்அகமது, பவித்ராவை ரெயிலில் ஏற்றி ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பவித்ரா வீட்டுக்கு செல்லாமல் சென்னைக்கு சென்று விடுதியில் தங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் விரிவாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையும் கோர்ட்டில் சமர்ப்பிப்போம்.
இவ்வாறு டி.எஸ்.பி. கணேசன் கூறினார்.
Average Rating