சர்வதேச நிறுவன வாகனம் மூலமே புலிகள் அநுராதபுரத்துக்கு ஆயுதம் கொண்டு வந்தனர்
அநுராதபுரம் விமானப்படை முகாம்கள் மீது புலிகள் இயக்கத்தினர் தீவிரதாக்குதல்களை மேற்கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு அனுராதபுரம் விமானப்படைத்தளத்தை தாக்குதவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான வெடிகுண்டுப் பொருட்களையும் ஆயுதங்களையும் தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள் பொருத்தப்பட்ட கவச உடைகளையும் மற்றும் உபகரணங்களையும் புலிகள் இயக்கத் தாக்குதல் அணியினர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குரிய வாகனம் மூலமே விமானப்படை முகாமை அண்டியுள்ள பிரதேசத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன், இந்த வாகனம் பாதுகாப்பு படையினர் தரப்பில் பாதுகாப்புச் சாவடி மற்றும் தடைமுகாம் சோதனைகளிலிருந்து எந்தவகையிலோ கடந்து வந்த பின்னரோ முன்னரோ இவ்வாறு புலிகளுக்காக தற்கொலைத்தாக்குதல் ஆயுதங்கள், உடைகள், வெடிப்பொருட்களைக் குறித்த இடத்திற்குக் கடத்திவந்துள்ளதெனவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான தகவல்கள் வெளியாகியிருப்பதைத் தொடர்ந்து மேற்படி அநுராதபுரம் விமானப்படைத்தளத்தை அண்டியுள்ள குறிப்பிட்டதொரு பிரதேசத்துக்கு புலிகள் இயக்கத்தினர் தமது மேற்படி ஆயுதங்கள் ,தற்கொலைத்தாக்குதல் கவசம், வெடிகுண்டுப்பொருட்கள் உபகரணங்களை குறித்ததொரு நிறுவனத்தின் வாகனத்திலேயே கடத்திவந்தார்களா என்பதுபற்றியும் அவ்வாறாயின் அந்த நிறுவனம் எது என்பது பற்றியும் பரந்த முறையில் தீவிர விசாரணைகளை அரசபாதுகாப்பு புலனாய்வுத்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
இது பற்றி தகவல்களை அறிந்துகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது அரச பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்த சிரேஷ்ட தகவல் அறிவிப்பு உத்தியோகத்தர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறு பாதுகாப்பு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அந்த சோதனைச்சாவடி அல்லது தடை முகாம்களைக் கடந்து தினமும் வாகனங்கள் பயணம் செய்துகொண்டிருப்பதாகவும் இந்த வகையில் பல்வேறு வெளிநாட்டு அரசு சார்ந்த, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான பல வாகனங்கள் வன்னிக்கும் கொழும்புக்கும் இடையே போக்கு வரத்து செய்தகொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், எவ்வாறாயினும் பெரும்பாலும் சர்வதேச அரசுகளுக்கும் நிறுவனங்களுக்கு முரிய கொடிகள், இலச்சினைகள், அறிவிப்புகளுடன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் மற்றும் உலகில் முன்னணியிலுள்ள ஒருசில பிரபல அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகனங்களும் அத்துடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வாகனங்களும் உட்பட கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான வாகனங்களே இவ்வாறு தினமும் கொழும்பிலிருந்து வன்னிக்கோ, வன்னியிலிருந்து கொழும்புக்கோ பயணம் செய்கின்றன.
மேற்படியான வாகனங்களையும் பாதுகாப்புப் பிரிவினரின் தீவிர பரிசோதனைகளுக்குப் பின்னரே வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போக்குவரத்து செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் அண்மையில் பாதுகாப்புப் பிரிவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அவ்வாறான சர்வதேச தரப்பு வாகனங்களைச் சோதனையிடுவதற்கு கிளப்பப்பட்ட எதிர்ப்புகள் காரணமாக பாதுகாப்புப் படையினரினதும் மற்றும் பொலிஸ் பிரிவினரதும் மேற்படியான வாகனச் சோதனைகள் நடைபெறுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இருந்தபோதும் அண்மையில் புலிகள் இயக்கத் தற்கொலைப் படையினர் அநுராதபுரம் விமானப்படைமுகாம் தாக்குதலுக்கான ஆயுதங்கள், வெடிகுண்டுகள், தற்கொலைக் கவசங்கள், உபகரணங்களை மேற்படி ஏதோ ஒரு நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனத்தில் வைத்தே குறித்த விமானப்படைமுகாமை அண்டிய பகுதிகளுக் கடத்தியுள்ளனர் என்ற தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை அரச பாதுகாப்புத்துறை முடுக்கிவிட்டுள்ளநிலையில், அந்த விசாரணைகளிலிருந்து தெரியவரப்போகும் தகவல்களுக்கு ஏற்ப மேற்படி சர்வதேச தரப்பு வாகனங்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் வன்னிக்கும் கொழும்புக்கும் இடையே போக்குவரத்துச்செய்யும் அனைத்து வாகனங்களும் பாதுகாப்புப் பிரிவினரின் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் என மேற்படி பாதுகாப்பு தகவல் பிரிவுத் தரப்பு சிரேஷ்ட உத்தியோகத்தர் கூறியுள்ளார்.