புலிகளின் விமானங்கள் விரைவில் வீழ்த்தப்படும்! -பாதுகாப்புச் செயலாளர் நம்பிக்கை
புலிகளின் விமானங்களை எமது விமானப் படையினர் விரைவில் வீழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை செய்து விட்டு அனைவருக்கும் அறிவிப்போம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச தொலைக்காட்சி சேவையொன்றுக்கு நேற்று வழங்கிய விசேட பேட்டியொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியுள்ளதாவது: அநுராதபுரம் விமானத் தளம் மீது புலிகள் நடத்திய தாக்குதலால் எமக்கு இழப்புகள் இல்லையென நான் கூறவில்லை. அதேநேரம், படையினரின் சக்திக்கோ, மனோ வலிமைக்கோ இதனால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கை காலத்தை பயன்படுத்தியே புலிகள் அவர்களின் ஆயுதத் தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் தோற்கடிக்காமல் நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. நான் இதில் பயங்கரவாதத்தை பற்றியே கூறுகிறேன். ஏனைய அரசியல் நடவடிக்கைகள் பற்றிக் கூறவில்லை. அரசியல் தீர்வொன்றை பெறுவதென்றாலும் அதற்கு முதலில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
இதற்கு முன்னர் இருந்த அனைத்து ஜனாதிபதிகளும் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர். எனினும், அவை வெற்றியளிக்கவில்லை. நாம் இதை அடுத்த சந்ததியினருக்கும் விட்டுச் செல்லத் தயாரில்லை.
பிரச்சினையைத் தீர்க்க செயற்படும் போது தலைவர்களுக்கு வரும் அழுத்தங்களினால் அதை அடுத்தவர் கைகளில் ஒப்படைத்து சென்று விடுகின்றனர். இதற்கான மனோ திடத்துடனும் உறுதியுடனும் செயற்பட்டால்தான் கௌரவமான சமாதானம் கிடைக்கும். அதை செய்யாவிட்டால் பிரச்சினையை அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்வதாகவே அர்த்தப்படும்.
அநுராதபுரம் தாக்குதலுக்கு முன்னர் எமக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் பிரகாரம் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களினாலும் அவர்களது கப்பல்கள் அழிப்பினாலும் நிலப் பிரதேசங்கள் இழப்பினாலும் புலிகளின் முதுகெலும்பு உடைந்து மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், 30 வருடங்களாக பயங்கரவாதச் செயற்பாடுகளில் அனுபவமுள்ளவர்கள் என்ற ரீதியிலும் உலகில் மிகவும் குரூரமான தலைவரென வர்ணிக்கப்படும் பிரபாகரன் புலிகளது மனோதிடத்தை சரிசெய்து கொள்வதெற்கென ஏதாவதொன்றைச் செய்யக் கூடுமெனவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன.
எப்போதும் புலிகளின் திட்டங்கள் குறித்து நாம் ஆராய்ந்தே வந்துள்ளோம். எனினும், இவை சகலதையும் ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்த முடியாது.
எவ்வாறாயினும் பயிற்சிகளிலும் ஏனைய நடவடிக்கைகளிலும் எமது படையினர் எப்போதும் பலத்துடனேயே இருக்கின்றனர். அதை மறந்து செயற்பட்டதால்தான் 30 வருடங்களாக பிரபாகரனும் நீடித்து இருந்து வருகிறார்.
எமது படையினர் பலம் பெற அவர்களுக்குச் சரியான நோக்கமும் தலைமைத்துவமும் தேவை. அவர்களுக்கு அதற்கான சு10ழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமே தவிர, படையினரின் அர்ப்பணிப்புகளை மறந்து விடக்கூடாது.
படையினரின் அர்ப்பணிப்பையும் மனோ திடத்தையும் கவனத்தையும் சிதறடிக்கும் வகையில் ஊடகங்களும் அரசியல் வாதிகளும் செயற்படக் கூடாது. அது தாய்ப்பூமிக்கு இழைக்கும் துரோகமாகும். ஆயுதங்கள் இருந்தாலும் அதற்குப் பின்னால் இருக்கும் மனிதன் தான் முக்கியம். அவன் தான் வெற்றி தேடித் தருபவன். அதை மறந்து செயற்பட்டால் அங்கு தான் நாம் தோல்வியைச் சந்திக்கின்றோம்.
நாம் பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கிறோம். அங்கும் இங்கும் தாக்குதல் நடத்துவது யுத்தமல்ல. நாம் ஒரு திட்டத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.
இதேநேரம், அநுராதபுரம் சம்பவத்தில் நாம் எதனையும் மூடி மறைக்கவில்லை. நாம் ஒன்றரை வருட காலத்தில் பல வெற்றிகளை பெற்றிருக்கின்ற போதிலும், இச் சம்பவத்தை பெரிதுபடுத்தி பிரசாரம் செய்கின்றனர். தாக்கிய புலிகளை விட இங்குள்ள அரசியல் கட்சிகளே பெரிதாகப் பிரசாரம் செய்கின்றன.
சம்பவத்தின் இழப்புகளை உடனடியாக கூறமுடியாததால் அதற்கென குழுவொன்றை நியமித்து சரியான விபரங்களை பாராளுமன்றத்தில் தெரிவித்தோம். எதையும் மறைக்கவில்லை. எனினும், பல ஊடகங்கள் தவறான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில விடயங்களை வெளிப்படுத்த முடியாது. எடுக்கும் முடிவுகளை சரியாக செய்கின்றோமா என்பதே மக்களுக்குத் தேவை. உலக நாடுகளிலும் இதுவே நடக்கின்றது. அதையும் மீறி அனைத்தையும் வெளிப்படுத்தினால் அது பிரதிகூலமாக அமையுமே தவிர, ஒருபோதும் அனுகூலமாக அமையாதெனவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.