பல்லை பிடுங்க சென்ற இடத்தில் 3 வயது சிறுமியின் உயிரை பறித்த டாக்டர்!!
மராட்டிய மாநிலத்தின் தொழில் நகரமான புனே அருகில் உள்ள கோத்ருட் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் பல்வலியால் துடிதுடித்த தனது மூன்று வயது மகளுக்கு சிகிச்சை அளிக்க வீட்டின் அருகாமையில் இருக்கும் ஒரு பல் டாக்டரிடம் அழைத்து சென்றார்.
பல்லின் வேர் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் தான் இந்த வலி வருகின்றது என தெரிவித்த அந்த டாக்டர், இன்று அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என கூறி, கடந்த மாதம் 29-ம் தேதி மீண்டும் தனது கிளினிக்குக்கு வந்து பார்க்கும்படி தெரிவித்தார்.
சம்பவத்தன்று காலை 11 மணியளவில் சானவி என்ற அந்த சிறுமிக்கு சிகிச்சையளிக்க தொடங்கிய டாக்டர் முதலில் மயக்க மருந்து செலுத்தி பல்லின் வேர் பகுதியை சுத்தப்படுத்த ஆரம்பித்தார். பின்னர், மயங்கி இருந்த சானவியின் பல்லை துளையிட்டு அதில் அடைப்பானை செலுத்தினார். அடுத்தடுத்து, மூன்று முறை ‘ஹைட்ரோஜன் பெராக்சைட்’ எனப்படும் வெளுப்பானை பயன்படுத்தி சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது, திடீரென கண்விழித்துப் பார்த்த அவள் திகைப்புடன் பெருமூச்சு விட்டபடி மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.
இதை அந்த டாக்டருக்கு நிரஞ்சன் சுட்டிக்காட்டி உணர்த்தியபோது, அது ஒன்றுமில்லை என கூறிவிட்டு அவர் கருமமே கண்ணாக தனது வேலையை கவனித்து கொண்டிருந்தார்.
சிகிச்சை முடிந்ததும் மயங்கி கிடந்த மகளை தூக்கிய நிரஞ்சன், சற்றுகூட சுயநினவின்றி தன்மீது துவண்டு விழுந்த மகளைப் பார்த்து பதறிப்போனார். ‘என் குழந்தைக்கு என்ன ஆச்சு?’ என்று டாக்டரிடம் கேட்டபோது, பல்லில் இருந்து ரத்தம் வடிந்த இடத்தில் சிறிதளவு பஞ்சை வைத்து அடைத்து விட்டு, ‘ஒன்றுமில்லை, வீட்டுக்கு தூக்கிப் போங்கள். எல்லாம் சரியாகி விடும்’ என சமாதானப்படுத்தினார்.
இல்லை, என் குழந்தைக்கு என்னவோ ஆகிவிட்டதைப் போல் இருக்கின்றது என்று அவர் பதறியபோதும், அந்த சிறுமியின் நாடியை பிடித்துப் பார்க்ககூட அவர் முன்வரவில்லை. இனி, இவரை நம்பி பலனில்லை என்பதை உணர்ந்துகொண்ட நிரஞ்சன், சானவியை தூக்கிக் கொண்டு அருகாமையில் உள்ள ஒரு குழந்தை மருத்துவரிடம் ஓடினார். அவர் நாடித்துடிப்பை பரிசோதித்துவிட்டு, உடனடியாக செயற்கை சுவாசம் ஏற்படுத்த முதலுதவி செய்தார்.
இருப்பினும், சிறுமியின் உடலில் சிறு அசைவுகூட உண்டாகாததால் அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து ஆம்புலன்சை வரவழைத்தார். ஆம்புலன்சில் வந்த டாக்டர்களும் செயற்கை சுவாசம் உண்டாக்க பெருமுயற்சி செய்தனர். இருப்பினும், பலனின்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சானவி பரிதாபமாக உயிரிழ்ந்தாள்.
தனது மகளின் இறப்புக்கு அந்த பல் டாக்டர்தான் காரணம் என நிரஞ்சன் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின்போது, தனக்கு 40 ஆண்டு ‘சர்வீஸ்’ உள்ளதாகவும், தினந்தோறும் பத்துக்கும் அதிகமானவர்கள் தனது கிளினிக்கில் சிகிச்சை பெற்று செல்வதாகவும் தெரிவித்துள்ள அந்த பல் டாக்டர், நான் அளித்த சிகிச்சையினால் அந்த சிறுமி இறந்துப் போனதாக கூறுவது தவறு என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Average Rating