ரிஎம்விபிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளும், சலசலப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன என்கிறார் ரிஎம்விபியின் அரசியல்துறைப் பொறுப்பாளர்
கடந்த ஓரிரு வாரங்களாக ரிஎம்விபிக்குள் தோன்றியதாகக் கூறப்படும் கருத்து வேறுபாடுகளும், சல சலப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன. ஜனநாயக அரசியல் கட்சியில் தனி மனித கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் முழுமையான இடருண்டு. அதனை யாரும் தடைசெய்ய முடியாது. எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரு கட்சியில் எல்லா உறுப்பினர்களினதும் எண்ணப்பாடுகளும், சிந்தனையோட்டங்களும், கருத்துக்களும் இணைந்தே இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறானதொரு நிலைமை கடந்த பல வாரங்களாக ரிஎம்விபிக்குள் உருவாகியிருந்தமை உண்மையே. இதற்குப் புறம்பாக தலைமைத்துவப் போட்டி, நிதி மோசடி என்றெல்லாம் கூறப்பட்டமை கற்பனை வாதங்களே. இவ்வாறான எக்கருத்தையும் எச்சந்தர்ப்பத்திலும் எந்த ரிஎம்விபி உறுப்பினர்களும் கொண்டிருக்கவில்லை.
கருத்தியல், நடைமுறை வேலைத்திட்டங்கள் தொடர்பாக கட்சிக்குள் உதித்த ஜனநாயக ரீதியான வேறுபாடுகளை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டே சிலரும், கிழக்கு மக்களின் தெளிவான தெளிந்த நீரோடையான அரசியல் பயணத்தில் கல்லெறிய நினைக்கும் குறுகிய தேசியவாத சக்திகளும், அவற்றுக் துணைபோகும் சில ஊடகங்களும் வேறு வழியில் திசைதிருப்பி எம்மக்களையும், எம் கட்சியில் பற்றுக் கொண்டவர்களையும் குழப்ப முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதற்கு இடம்கொடுக்காமல் ரிஎம்விபிஇன் ஜனநாயகப் பண்பிலும், எம்மக்களின் அரசியல் விடுதலையிலும் உறுதியாக நின்ற எம்மக்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், அனுதாபிகளுக்கும் எம் நன்றிகள்.
நாம் ஜனநாயகத்தில் பற்றுக் கொண்ட, எம் மக்களின் அரசியல் அபிலாசைகளில் தீராத மோகம் கொண்டவர்கள் என்பதினால் எமக்குள் உருவான கருத்தியல் ரீதியான நடைமுறை சார்ந்த வேறுபாடுகளை பேசித் தீர்பதற்குரிய கால அவகாசம் தேவைப்பட்டது. இக்கால அவகாசத்தையே விசமிகள் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். ஆனால், அதற்கு இடம்கொடுக்காமல் கட்சிக்குள் ஏற்பட்ட வேறுபாடுகளைக் களையும் நோக்கிலும், எதிர்கால அரசியல் வியூகங்களை வகுக்கவும், எம்மக்களின் நடைமுறைப் பிரச்சினைகளுக்கும், பயங்கரவாதத்திற்கு எதிராக காத்திரமான நடவடிக்கையெடுக்கவும் கடந்த 21.10.2007 அன்று கட்சியின் உயர்மட்டக்குழு மட்டக்களப்பில் கூடி சமகால நிலைமையை விவாதித்தது.
கட்சியின் அனைத்து உயர்மட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் தமது எண்ணங்களை சகல உறுப்பினர்களும், மனம் விட்டும், வெளிப்படையாகவும் பேசி எம்மக்களினதும், கட்சியினதும் எதிர்கால நலனையும், சமகால நிலைமையையும் கருத்திற் கொண்டு நடைமுறைச் சாத்தியமான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் ரிஎம்விபிஇன் தலைவர் கருணாஅம்மான் அவர்களின் ஆலோசனையிலும், பணிப்புரையின் கீழும் திரு. பிள்ளையான் அவர்கள் இரண்டாம் நிலைப்பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டார்.
கட்சியின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 06 பேர் கொண்ட அரசியல் செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களாக, திரு.பிள்ளையான், திரு.திலீபன், திரு.பாரதி, திரு. அசாத் மௌலானா, திரு.மார்க்கன், திரு.பிரதீப் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். கட்சியின் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அனைத்து அதிகாரங்களும் இக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், கட்சியின் நிதி நிலைகள் தொடர்பாக 07 பேர் கொண்ட நிதி செயற்குழு ஒன்றும் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகப் பண்புகள் கொண்ட ரிஎம்விபிஇல் கட்சியின் நற்பெயருக்கு, கட்டுக்கோப்பிற்கு, விதிக்கு முரணாகச் செயற்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக பதவி, நிலை கருத்திற் கொள்ளப்படாது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் ரிஎம்விபிஇல் தோற்றம் பெற்றிருந்த கருத்து வேறுபாடுகள் முற்றாகக் களையப்பட்டு கட்சியினதும், மக்களினதும் நலனை மட்டும் கருத்திற் கொண்டு தலைவர் கருணாஅம்மான் அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி அவரின் வழிகாட்டலில் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
வெ.திலீபன், அரசியல்துறைப் பொறுப்பாளர் -ரிஎம்விபி