ஜெயங்கொண்டம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை: கணவர், மாமனார், மாமியாரிடம் விசாரணை!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டகரம் கைலாசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் சுபாஷினி (வயது 28). ஜெயங்கொண்டம் வேலாயுத நகரை சேர்ந்த ராஜாராம் மகன் நடராஜன் (35) என்பவருக்கும் சுபாஷினிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. நடராஜன் சவுதி அரேபியாவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் சுபாஷினியை சவுதி அரேபியாவிற்கு அழைத்து சென்றார் நடராஜன். இவர்களுக்கு புகழினி என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நிலம் வாங்க பணம் தேவைபடுவதாகவும் எனவே தாய் வீட்டில் நகை, பணம் வாங்கித் தரும்படியும் மனைவி சுபாஷினியிடம் அடிக்கடி கேட்டு நடராஜன் தகராறு செய்தாராம். இது குறித்து சுபாஷினி தனது தாயிடம் போனில் கூறினாராம்.
கடந்த 30–ந்தேதி சவுதி அரேபியாவில் இருந்து சுபாஷினி வீட்டிற்கு போன் செய்த நடராஜன், தனது மனைவி சுபாஷினி இறந்து விட்டதாக கூறி உள்ளார். இதை கேட்ட சுபாஷினியின் தாய் செல்வி அதிர்ச்சி அடைந்தார். இதன் பின் இறந்த சுபாஷினியின் உடலை விமானம் மூலம் நடராஜன் திருச்சிக்கு கொண்டு வந்தார். திருச்சியில் சுபாஷினியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடலை ஜெயங்கொண்டம் கொண்டு சென்றனர், அப்போது சுபாஷினியின் கணவர் நடராஜன் அவர்களுடன் செல்லவில்லை.
சுபாஷினி இறப்பதற்கு முன்பு வீட்டிற்கு போன் செய்ததாகவும், அப்போது அவர் நன்றாக பேசியதாகவும் சுபாஷினியின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் சுபாஷினி சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஜெயங்கொண்டம்– கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் குணசேகரன், தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுபாஷினி சாவில் மர்ம இருப்பதாகவும், அவரது கணவர் நடராஜன் மற்றும் மாமனார், மாமியாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் சுபாஷினியின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் சென்னை– கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது சுபாஷினியின் உடல் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அப்போது சுபாஷினி இயற்கையாக இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என தெரியவரும்.
இதற்கிடையில் சுபாஷினியின் கணவர் நடராஜன், மாமனார் ராஜாராம், மாமியார் தமிழரசி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Average Rating