திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களாக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் கைது!!
திருச்சி மாநகரில் பல பகுதிகளில் சமீப காலமாக பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்தது. இதில் குறிப்பாக கருமண்டபம், ஜெய்நகர், செல்வா நகர், உறையூர், கே.கே.நகர் உள்பட மாநகரில் பல பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
இதில் தெருக்கள் மற்றும் சாலைகளில் நடந்து செல்வோர், வீட்டு முன்பு கோலம் போடுவோர், வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர்கள், மொபட்டில் செல்லும் பெண்களிடமும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வரும் மர்ம நபர்கள் செயின்களை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்ததால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவித்தனர்.
இதை தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் அருள் அமரன் கண்காணிப்பில் கண்டோன் மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் மரியராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து மோட்டார் சைக்கிள்களில் வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் செயின்களை பறிகொடுத்த பெண்களிடமும் விசாரணை நடத்திய போது இந்த செயின் பறிப்பில் குறிப்பிட்ட 2 நபர்கள் ஈடுபடுவது போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் அங்க அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் திருச்சி மாநகரில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மகன் ஜெயசூர்யா (வயது 19), சத்திரம் பஸ் நிலைய பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பிரவீன் (19) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்த போது அவர்கள் தற்போது திருச்சியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருவதும் இருவரும் கூட்டு சேர்ந்து செயின்பறிப்பில் ஈடுபட்டதும், தற்போது ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள்களை 2 பேரும் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கண்காணித்த போலீசார் நேற்று ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களாக திருச்சி மாநகரில் நடந்த வழிப்பறி சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருந்ததும், அந்த நகைகளை விற்று அதில் கிடைத்த வருமானத்தை வைத்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை வாங்கி ஜாலியாக ஊர் சுற்றி பணத்தை சொகுசு வாழ்க்கைக்காக செலவு செய்ததையும் போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 36 பவுன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பெண்களிடம் பறித்த நகைகளை எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Average Rating