சாவில் மர்மம் நீடிப்பு: சேலம் என்ஜினீயர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!
சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது22) என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பள்ளிப்பாளையம் அருகே தொட்டில்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். ஈரோடு ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோகுல்ராஜின் தாயார் சித்ரா தனது மகன் கொலை செய்யப்பட்டதாக திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தார். தனது மகன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தப்பெண்ணின் உறவினர்கள் தனது மகனை கடத்தி சென்று கொன்று தண்டவாளத்தில் பிணத்தை வீசி விட்டு சென்றதாக கூறி இருந்தார்.
இதைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு திருச்செங்கோடு போலீசுக்கு மாற்றப்பட்டது. 174 (மர்ம சாவு) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், ஆதி தமிழர் பேரவை, மக்கள் தேசம் உள்ளிட்ட தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. திருச்செங்கோடு மற்றம் சேலத்தில் அந்த அமைப்புகள் மறியல் – ஆர்ப்பாட்டம் நடத்தின. மேலும் நேற்று கோகுல்ராஜின் பிரேத பரிசோதனை நடைபெறவில்லை. அவரது பிணத்தை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துக் கல்லூரி ஆஸ்பத்திரி டாக்டர் சம்பத்குமார் மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன் அமைக்கும் 2 டாக்டர்கள் குழு ஆகியோர் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பரிசோதனை அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் உத்தரவிட்டு உள்ளனர். சேலத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவின் மீது இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்து உள்ளனர்.
கோகுல்ராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்ய சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி டாக்டர் சம்பத்குமார் இன்று காலை சேலம் வந்தார். அவர் தலைமையில் 3 டாக்டர்கள் அடங்கிய குழு கோகுல்ராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்கிறது. இந்த பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. பரிசோதனை செய்தாலும் கொலை வழக்கு பதிவு செய்யும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வக்கீல் இமய வரம்பன் தெரிவித்தார்.
இதனால் இன்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பதட்டம் நிலவியது. துணை கமிஷனர் செல்வராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் இன்றும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கோகுல்ராஜ் இறந்தது எப்படி என்பதை அறிய ஒரு குழுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார். சேலம் தடயவியல் நிபுணர் கொளஞ்சியப்பன் தலைமையில் சென்ற அந்தக்குழுவில் சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக் குழுவைச் சேர்ந்த டாக்டர்கள் கோகுலரமணன், கார்த்திக், சங்கீதா, போலீஸ் டி.எஸ்.பிக்கள் மனோகரன், விஷ்ணுப்பிரியா ஆகியோர் சென்றனர். இந்தக் குழுவினர் கோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் மருத்துவக் குழுவினர் ரெயில்வே போலீசாரிடம் விசாரணை நடத்தினர். உடல் எப்படி கிடந்தது. ரெயிலில் அடிபட்டு இறந்தால் காயங்கள் ஏற்படுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டனர். அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது. அந்த நாய் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி விட்டு மீண்டும் உடல் கிடந்த இடத்துக்கு ஓடி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடந்த பிறகு தான் என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரிய வரும்.
கொலை வழக்காக பதிவு செய்யும் வரை கோகுல்ராஜ பிணத்தை வாங்க மாட்டோம் என்று அவரது தாயார் சித்ரா, அண்ணன் கலைச்செல்வம் மற்றும் உறவினர்கள் அறிவித்து உள்ளனர்.
Average Rating