ஐந்து மடங்கு சம்பள உயர்வு!: ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு… இளைஞர்களை கவர புதிய திட்டம்
ராணுவத்தில், இளம் அதிகாரிகள், பைலட்கள் வெளியேறாமல் இருக்க, அவர்களுக்கு ஐந்து மடங்கு சம்பள உயர்வு அளிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பள கமிஷன் பரிசீலித்துவருகிறது. தனியார் நிறுவனத்தில், எக்கச்சக்க சம்பளம் கிடைப்பதால், ராணுவத்தில் இருந்தும் அதிகாரிகள் வெளியேறுவது அதிகரித்து வருகிறது. ராணுவத்தில் தான் அதிக அளவில் அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அதுபோல, விமானப்படையில் உள்ள பைலட்கள் சிலர், தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்துள்ளனர். கடற்படையில் தான் பெரிய அளவில் யாரும் விலகவில்லை. இதை கருத்தில் கொண்டு, ராணுவத்தில், அதிகாரிகள் மட்டத்தில், சம் பளத்தை உயர்த்த சம்பள கமிஷன் பரிசீலித்து வருகிறது. ராணுவ அதிகாரிகள் அளவில் ஐந்து மடங்கு சம்பள உயர்வு தரலாம் என்று மத்திய அரசுக்கு ராணுவ அதிகாரிகள் சார்பில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது. * ஆறாவது சம்பள கமிஷன் தன் அறிக்கையை அடுத்த ஏப்ரல் மாதம், அரசிடம் ஒப்படைக்க உள்ளது. ராணுவத்தை சேர்ந்தவர்கள் யாரும், சம்பள உயர்வு பற்றி மனுக்களை இதுவரை அளித்ததில்லை. அரசே, அவர்களுக்கு சம்பள உயர்வை நிர்ணயிக்கும். ஆனால், முதன் முறையாக, ராணுவத்தை சேர்ந்த பல பிரிவினரும், தங்களுக்கு சம்பள உயர்வு தர வேண்டும் என்பதை புள்ளிவிவரத்துடன், சம்பள கமிஷனிடம் அளித்துள்ளன. கடும் பணியை செய்யும் நிலையில், குறைந்த அளவு சம்பளம் தருவதை மாற்றி, அதிக சம்பளம் தர வேண்டும் என்று, இந்த பிரிவினர், மனுவில் கூறியுள்ளனர்.
அதுபோல, முதன் முறையாக, சம்பள கமிஷன் உறுப்பினர்களும், முதன் முறையாக, ராணுவ பிரிவினரை சந்தித்து, அவர் களின் குறைகளை கேட்டறிந்தனர். * இதற்கு முன், மூன்றாவது சம்பள கமிஷன் உறுப்பினர்கள், ராணுவத்தினருடன் பேச முற்பட்டபோது, “இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். ஒழுக்கம் கெட்டுவிடும்’ என்று அதற்கு அனுமதி அளிக்க, ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது.ஆனால், இப்போது, ராணுவத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறும் போக்கு அதிகரித்து வருவதை அடுத்து, அவர்களுடன் நேரடியாக பேச, சம்பள கமிஷன் உறுப்பினர்களுக்கு அமைச்சகம் அனுமதி அளித்து விட்டது.
முன்னாள் ராணுவ ஜெனரல் ஜே.ஜே.சிங் உட்பட ராணுவ உயர் அதிகாரிகள், முறைப்படி ராணுவத்தினரின் பணி வரன்முறை, சம்பளம் போன்றவற்றை பட்டியலிட்டு, அவர்களுக்கு எந்த வகையில் சம்பள உயர்வு தரலாம் என்பதுபற்றி அறிக்கையை சம்பள கமிஷனிடம் தந்தனர்.தங்களுக்கு ஐந்து மடங்கு சம்பளம் தர வேண்டும் என்று மனுவில், ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ராணுவ மேஜர் பதவியில் இருப்பவர் இப்போது 16 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இது, 86 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும். அதுபோல, லெப்டினன்ட் கர்னலுக்கு 20 ஆயிரத்தில் இருந்து ரூ.ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். லெப்டினன்ட் ஜெனரலுக்கு 24 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 37 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று, அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.ராணுவத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை எண்ணிக்கை 35 ஆயிரம்.
அதுபோல, விமானப்படையில் பைலட்கள் பற்றாக்குறை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ராணுவத்தில் மட்டும், இரண்டாயிரம் அதிகாரிகள் தங்களை விடுவிக்கக் கோரி விண்ணப்பம் தந்துள்ளனர். அதிகாரிகள் தந்த மனுவின் அடிப்படையில், சம்பள கமிஷன் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஐந்து மடங்கு சம்பளம் அளிக்கப்படுமா என்பது, அதன் அறிக்கை தயாராகும் போது தெரியவரும்.