உ.பி.யில் கொடூரம்: பிரசவித்த பெண்ணின் கட்டிலில் ஆபத்தான எய்ட்ஸ் நோயாளி என்று எழுதிவைத்த அவலம்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஒரு பெண்ணின் தலைமாட்டில் ‘எய்ட்ஸ் நோயாளி – ஆபத்தானவள்’ என எச்சரிக்கை கையேடு எழுதி தொங்கவிட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இங்குள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அந்த ஆஸ்பத்திரியில் கடந்த 19-ம் தேதி மாதுரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் அந்தப் பெண்ணின் இரத்தத்தை பரிசோதித்தபோது மாதுரிக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பதை அறிந்து கொண்டனர்.
பெண் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் மாதுரியை பொது வார்டுக்கு மாற்றிய டாக்டர்கள், ஒரு பெரிய அட்டையில் எய்ட்ஸ் அபாய எச்சரிக்கையான சிகப்பு நிற ரிப்பன் படத்தை வரைந்து, அதன் கீழே ‘எய்ட்ஸ் நோயாளி- ஆபத்தானவள்’ என எழுதி, அந்த அட்டையை அறிவிப்பு பலகையாக மாதுரியின் கட்டிலின் தலைப்பகுதியில் தொங்க விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் தொண்டு நிறுவனத்தினர், தற்போது இந்தப் பிரச்சனையை மிகப்பெரிய மனித உரிமை மீறல் பிரச்சனையாக கையில் எடுத்து போராடத் தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மாதுரியிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகின்றது.
தனது கணவரின் மூலமாக எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான மாதுரி, சுமார் 8 ஆண்டுகாலமாக இந்த ரகசியத்தை மூடி மறைத்தபடி, எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். டாக்டர்கள் எழுதிவைத்த அந்த அறிவிப்பால் பெண் குழந்தையை பெற்றெடுத்த மாதுரியை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டாருக்கும் தற்போது இந்த ரகசியம் அம்பலமாகி விட்டது.
அது மட்டுமின்றி, தனக்கு பிரசவம் பார்த்த ஒரு மூத்த டாக்டர், ‘நீயே சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து, இந்நிலையில், மேலும் ஒரு ஆபத்தை (பிறந்த பெண் குழந்தை) இந்த உலகத்துக்கு கொடுத்து விட்டாயா?’ என்று கேவலமாக பேசியதாக கூறி கண் கலங்கும் மாதுரி, இனி என் எதிர்காலமும் என் குழந்தையின் எதிர்காலமும் என்ன ஆகுமோ..? என்ற வேதனையில் மூழ்கியுள்ளார்.
கொடூரத்தில் மிகவும் உச்சகட்ட கொடூரமாக, சிசேரியன் ஆபரேஷன் முடிந்த மூன்றாம் நாள் மாதுரியின் வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் மீது போடப்பட்டிருந்த கட்டை அகற்றிய டாக்டர்கள், அந்த அசுத்த துணியை எல்லாம் குப்பைத் தொட்டியில் போடும் வேலையையும் அவரிடமே ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள லாலா லஜ்பத் ராய் நினைவு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சுபாஷ் சிங், ‘கட்டிலில் இதைப்போன்ற அறிவிப்பை எழுதி மாட்டி வைத்தது தவறு. நோயாளிகளின் நோய்த்தன்மை தொடர்பான ரகசியத்தை பாதுகாக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்துள்ளார்.
Average Rating