சேலம் என்ஜினீயரிங் பட்டதாரி கொலை: திருச்செங்கோட்டில் போலீஸ் நிலையம் முற்றுகை- 300 பேர் கைது!!
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் கோகுல்ராஜ் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரி.
கடந்த திங்கட்கிழமை காலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கிழக்கு தொட்டி பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பிணமாக கிடந்த வாலிபரின் சட்டைப்பையில் அடையாள அட்டையும், அருகே ஒரு பையும் கிடந்தது. அதை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பிணமாக கிடந்தவர் ஓமலூரில் மாயமான கோகுல்ராஜ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் சட்டைப்பையில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கண்டெடுத்தனர்.
அதில் என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல, என்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன், எந்த பெண்ணையும் நம்ப முடியவில்லை, ஏமாற்றம் நிறைந்த உலகில் வாழ விரும்பவில்லை, என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிப்பாளையம் விரைந்து சென்றனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
கோகுல்ராஜ் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொன்று பிணத்தை தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது.
தன் மகனை அடித்துக் கொன்றுவிட்டதாக பெற்றோர் திருச்செங்கோடு போலீசில் புகார் செய்துள்ளனர்.
அதில் தனது மகன் நட்பு ரீதியாக பழகி வந்த இளம்பெண் ஒருவருடன் திருச்செங்கோட்டிந்கு சாமி கும்பிட சென்றதாகவும், அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அந்த இளம் பெண்ணை மிரட்டி விட்டு தனது மகனை கடத்திச்சென்று கொலை செய்து விட்டதாக கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக கோகுல் ராஜின் உறவினர்கள் கூறியதாவது:–
கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது அதே கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இருவரும் தற்போது படிப்பை முடித்துவிட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் காரில் துரத்தி வருவதாக அந்த பெண் கோகுல்ராஜியின் தாய் சித்ராவுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் கோகுல்ராஜ் அங்கிருந்து தப்பித்து எப்படியும் ஓமலூருக்கு வந்துவிடுவார் என்று நேற்று முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்தோம். ஆனால் அவர் திரும்பி வராததால் ஓமலூர் போலீசில் புகார் செய்தோம்.
நேற்று மாலை 3 மணிக்கு கோகுல்ராஜ் உடல் பள்ளிப்பாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் கிடப்பதாக தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் கோகுல்ராஜை துரத்திய கும்பல் அவரை கொலை செய்து ரெயில் தண்டவாளத்தில் வீசி இருக்கலாம் அல்லது அடித்து உதைத்து தற்கொலைக்கு தூண்டி இருக்கலாம். திருச்செங்கோட்டில் விரட்டிய கும்பல் யார் என்பது குறித்து விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், திருச்செங்கோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று கோகுல்ராஜின் உறவினர்கள் மற்றும் அவருடன் சாமி கும்பிட சென்ற இளம்பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கோகுல்ராஜ் சாவில் உள்ள மர்மம் தொடர்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார்.
தனிப்படை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் கோகுல்ராஜ் வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி இன்று பகல் திருச்செங்கோடு போலீஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 300 பேரை கைது செய்தனர்.
Average Rating