மனைவி-குழந்தைகளை அபகரித்ததால் கள்ளக்காதலனை கொன்று சாக்கடையில் வீசினேன்: ஆட்டோ டிரைவர் வாக்குமூலம்!!
போரூர் பார்வதி அவென்யூவில் 3 நாட்களுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாயில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும், போரூர் எஸ்.ஆர்.எம்.சி. போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சார்லஸ் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த வாலிபர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆனால் அவர் யார்? என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில் (28), போரூர் போலீசில் சரண் அடைந்தார். அப்போது அவர், சாக்கடையில் பிணமாக கிடந்த வாலிபரின் பெயர் நவீன் சுந்தர் என்றும், அவரை தான் கொலை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் தகராறில் நவீன் சுந்தரை, செந்தில் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக செந்தில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
அடையாரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் நான் வேலை செய்த போது, நந்தினிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 8 மற்றும் 7 வயதில் மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் நவீன் சுந்தருக்கும், எனது மனைவி நந்தினிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் நவீன் சுந்தர் நந்தினியையும், எனது 2 மகள்களையும் அபகரித்துக்கொண்டார். மறைமலை நகரில் அவர்களை தங்க வைத்திருந்தார். நான் அங்கு சென்று தேடிப்பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
பலமுறை நவீன் சுந்தரை சந்தித்து மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விடுமாறு கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பலமுறை பேசி எனது மூத்த மகளை மட்டும் என்னுடன் அழைத்துச்சென்றேன். இளைய மகள், எனது மனைவியுடனேயே நவீன் சுந்தருடன் வாழ்ந்து வந்தார்.
கொலை நடந்த அன்று பகல் 12 மணி அளவில் நவீன் சுந்தரை பார்த்து பேசிய நான், எனது மனைவிதான் நடத்தை சரியில்லாமல் போய் விட்டாள், அவளை நீயே வைத்துக்கொள். ஆனால், எனது 2–வது மகளை மட்டும் என்னுடன் அனுப்பி வைத்து விடு. மகள்கள் இருவரையும் நான் வளர்த்துக்கொள்கிறேன் என்று கூறி மறுபடியும் கெஞ்சி கேட்டேன்.
ஆனால், நவீன் சுந்தர் இதனை கேட்காமல் என்னுடன் சண்டை போட்டார். இதனால் அருகில் இருந்த குப்பை தொட்டியில் கிடந்த இரும்பு கம்பியால் அவரை அடித்தேன். இதில் மயங்கி கீழே விழுந்த நவீன் சுந்தரை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் பயந்துபோய் உடலை சாக்கடையில் வீசிவிட்டு சென்று விட்டேன்.
மனைவி, குழந்தைகளை அபகரித்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட்டேன். எப்படியும் போலீசார் என்னை தேடி கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்திலேயே வாழ்ந்து வந்த நான் போலீசில் சரண் அடைந்தேன்.
இவ்வாறு செந்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்காதலால் குடும்பமே நிலை குலைந்த சம்பவம் செந்திலின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating