கரும்புலிகளின் உடல்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை
அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய கரும் புலிகளின் உடல்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது போன்று வெளியான புகைப்படங்கள் போலியானவையாக இருக்கலாமென இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கும் அதேநேரம், உயிரிழந்த கரும் புலிகளின் உடல்கள் கறுப்பு நிற உறைகளினால் சுற்றி எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவை நிர்வாணமாக்கப்பட்டிருந்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுவதாகவும் இது எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறுகிறார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த கரும்புலி உறுப்பினர்கள் நிர்வாணமாக ட்ரக்டர் வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே இருவரும் மேற்கண்டவாறு வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவிக்கையில்;
விமானப்படைத் தளத்திலிருந்து உயிரிழந்த புலி உறுப்பினர்களின் சடலங்கள் அநுராதபுரம் நகர் வழியாகவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தாக்குதலில் உயிரிழந்த புலி உறுப்பினர்கள் குண்டுகளுடனான தற்கொலை அங்கிகளை (Suicide Jackets) அணிந்திருந்ததால் எமக்கு அவர்களின் உடைகளை களைய வேண்டி ஏற்பட்டது.
சடலங்களை எடுத்துச் செல்லும் போது மக்களுக்கோ அல்லது சடலங்களை எடுத்துச் செல்பவர்களுக்கோ அல்லது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற பின்னர் அங்குள்ள வைத்தியர்களுக்கோ பணியாட்களுக்கோ ஆபத்துகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகவே உடைகளை அகற்றினோம்.
எனினும், சடலங்கள் மறைத்தே எடுத்துச் செல்லப்பட்டு வழமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மற்றும் படி நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்கள் போலியாக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். புலிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் இதை செய்திருப்பார்கள் என்றார்.
அதேநேரம், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இங்கு தெரிவிக்கையில்;
“சடலங்கள் அனைத்தும் கறுப்பு உறைகளால் சுற்றியே எடுத்துச் செல்லப்பட்டன. எனினும், அவை நிர்வாணமாக்கப்பட்டிருந்த சம்பவமொன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது எப்படி நடந்தது என்பது பற்றி உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ளார். அதன் பிரகாரம் வட மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதேவேளை, “உயிரிழந்த புலி உறுப்பினர்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடு ஒப்படைக்க தயாராக இருந்த போதும் விடுதலைப் புலிகளிடமிருந்து எந்த கோரிக்கையும் விடுக்கப்படாததால் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டன. சடலங்கள் பழுதடைந்துவிட்டதால் அப்போதைய சூழ்நிலை கருதி அநுராதபுரம் நீதிவானின் உத்தரவின் பேரிலேயே இந்த சடலங்கள் புதைக்கப்பட்டன” என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.