இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் த.தே.கூ!!
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன.
பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்ப்பதில் இருந்த அந்த இனரீதியான ஒற்றுமை சுதந்திரத்திற்குப்பிறகு மெல்லமெல்ல அற்றுப்போனது. பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்தே பழக்கப்பட்ட இலங்கை அரசதலைவர்கள் அந்த எதிர்ப்பு தன்மையை மறக்கமுடியாமல் இடையிடையே தமக்குள்ளேயும் அந்த எதிர்ப்பினை தேவைக்கேற்றவாறு வெளிப்படுத்திக்கொண்டனர்.
இதன்விளைவாக 1950 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இனக்கலவரங்கள் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பலமுள்ளவர்கள் பலமற்றவர்கள் மீது செல்வாக்கு செலுத்துவதென்பது ஒருகொள்கைத்தத்துவமாகும்.
பல்லின மக்களும் வாழ்கின்ற இந்தத்திருநாட்டில் சனத்தொகையில் கூடிய சிங்கள மக்கள், சனத்தொகையில் குறைந்த தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தின்மீது செல்வாக்கு செலுத்துவதென்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
இலங்கை சுதந்திரம் பெற்றபின்பு காலாகாலமாக இலங்கையை ஆட்சிசெய்து வந்த ஆட்சியாளர்கள் தம்முடைய அரசியல் தேவைக்கேற்றவாறு இனங்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை செய்து வாக்குகளை சூறையாடிக்கொண்டார்கள்.
17 வருடகாலம் தொடர்ச்சியாக இந்தநாட்டை ஆட்சிசெய்த ஐக்கிய தேசியக் கட்சியினுடைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் இலங்கையிலேயே ஜனநாயக ஆட்சி நிலவுவதாகக் கூறிக்கொண்டாலும், அந்த ஆட்சியானது ஒரு சர்வாதிகார ஆட்சியாகவே வெளியுலகத்தினரால் பார்க்கப்பட்டது.
தேர்தல் நடாத்தப்படாமலேயே ஜே.ஆர்.ஜெயவர்த்தன தன்னுடைய ஆட்சிக்காலத்தை நீடித்துக்கொண்டது ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் விரோத ஆட்சியை அன்றைய காலகட்டத்தில் வெளிப்படுத்தியது.
அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி ஆர்.பிறேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களே வெறுக்கும் அளவிற்கு அவருடைய செயற்பாடுகள் காணப்பட்டது.
அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி சந்திரிக்கா காலத்திலேயே இலங்கையில் ஜனநாயக ஆட்சிமுறையில் ஒரு ஒழுங்கு ஏற்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைப் பிடிப்பதென்பது ஒரு கனவாகவே உள்ளது.
2015ஆம் ஆண்டு மைத்திரி யுகத்தின் மூலம் ஆட்சியை பிடித்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தைத் தூண்டி சிங்களப்பிரதேசத்தில் சிங்களவாக்குகளையும், தமிழர்கள் செறிந்துவாழும் இடங்களில் தமிழ்வாக்குகளையும், முஸ்லிம்கள் வாழும் இடங்களில் முஸ்லிம்வாக்குகளையும், மலையகத்தமிழர்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய வாக்குகளையும் கைப்பற்றி தன்னுடைய எதிர்க்கட்சி அந்தஸ்தை கடந்த காலத்தில் தக்கவைத்துக் கொண்டது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்திலோ அல்லது பிறேமதாஸ காலத்திலோ அல்லது ரணில் விக்கிரமசிங்க காலத்திலோ சிறுபான்மையினருடைய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டதா?
இது இப்படியிருக்க சுதந்திரத்திற்குப்பின்னர் வந்த தமிழ்த்தலைவர்கள் செய்த அரசியல் மிகவும் விநோதமானது. அவர்கள் இனவாதத்தினை வடக்கு கிழக்கில் மட்டுமே கக்கினார்கள். தென்பகுதியில் சிங்கள மக்களுடன் விருந்தில் கலந்து கொண்டார்கள். அந்தக்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாமையினால் அவர்கள் தப்பிக்கொண்டார்கள்.
ஆனால் தற்சமயம் நிலைமைவேறு. பாராளுமன்றத்தில் சிங்கள எம்பிக்களுடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டாலோ அல்லது ஜனாதிபதி மாளிகையில் விருந்து உண்டாலோ அடுத்த கணமே இணையத்தளங்களில் அது செய்தியாகப்பதிவேற்றப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் மிகநெருக்கமாக இருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றிலிருந்து இன்றுவரை பெருந்தொகைப் பணத்தை தாங்கள் பெற்றதுமட்டுமல்லாமல், தமது கட்சியையும் அந்தப்பணத்தில் வளர்த்துக்கொண்டார்கள்.
தாங்கள்தான் தமிழ்மக்களினுடைய பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட வடக்கு கிழக்கின் தமிழ்த்தலைவர்கள் தங்களுடைய கட்சியின் இளைஞர் பேரவை என்ற போர்வையில் சிங்கள மக்களுக்கு எதிராகவும், சிங்கள இராணுவத்திற்கு எதிராகவும் இளைஞர்களை தூண்டிவிட்டனர்.
அதன்பிறகு நடந்தேறிய துன்பியல் நிகழ்வுகள் யாவரும் அறிந்ததே. தமிழ்த்தலைவர்களால் தம்முடைய அரசியல் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளால் அதேதமிழ்த்தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதும், அதற்குப்பழிக்குப்பழியாக விடுதலைப்புலிகளை தமிழ்த்தலைவர்கள் அழித்ததும் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத ஒருவிடயம்.
இதுவும் ஒரு இனப்படுகொலைதான். தமிழினம் தமிழினத்தாலேயே அழிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் ஆயுதரீதியாக சிங்கள இராணுவத்தினரை வெற்றி கொண்டாலும், அரசியல்ரீதியாக அவர்கள் தமிழ்பேசும் தலைவர்களாலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்.
சந்திரிக்கா அரசாங்கத்தில் முக்கிய ஆலோசகர்களாக இருந்த தமிழ்த்தலைவர்கள் பலர் விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்டனர். அவர்களில் தப்பிப்பிழைத்தவர்கள் இறுதிக்காலத்தில் விடுதலைப்புலிகளுடன் ஒட்டிஉறவாடி அவர்களை அழித்து இன்றுவரை தங்களுடைய அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்கள் காலத்திலேயே தேர்தல் திணைக்களத்தில் பதியப்படவேண்டிய ஒன்று. அது இன்றுவரை ஏன் பதியப்படவில்லை என்பதற்கு அந்தக்கட்சியில் இருக்கின்ற இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியாகும்.
நேற்று உருவாக்கப்பட்ட மனோ – திகா – ராதா நகைச்சுவை நடிகர்களின் மலையக கூட்டமைப்பு திரைப்படம் விரைவில் பதியப்பட இருக்கின்றது. சுமார் ஒருதசாப்த காலத்திற்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கும் த.தே.கூ திரைப்படம் இன்னமும் பதியப்படாதது ஏனென தமிழ் மக்கள் மட்டுமன்றி கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் உள்ளேயும், வெளியேயும் அடித்துக்கொள்கின்றனர்.
விடுதலைப்புலிகளினுடைய அரசியல் தூரநோக்கின்மையை வழிகாட்ட மனமில்லாமல் அவர்களுடன் இணங்கிப்போவதுபோல நடித்து அவர்களை காட்டிக்கொடுத்த துரோகிகள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். ஏனெனில் அவர்கள்வசம் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கைக்கொள்ளை அடிக்கும் எந்தவிதமான மாந்திரிக தாயத்துக்களும் தற்சமயம் கைவசம் இல்லை.
புலிகளை நினைத்தால் 19வது திருத்தச்சட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பூசா தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லும்.
புலிகளை மறந்தால் புலம்பெயர் தமிழர்கள் பணம் கொடுக்கமாட்டார்கள்.
மைத்திரியை ஆதரித்தால் ரணில் கோவிப்பார். ரணிலை ஆதரித்தால் மைத்திரி கோவிப்பார்.
தனித்து நின்றால் வாக்குகள் சிதறடையும். சேர்ந்து நின்றால் ஆசனப்பங்கீடு சிதறடையும்.
இப்படியான இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கும் த.தே.கூ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முதல்தடவையாக மக்கள் மனம் வென்ற ஜனநாயகவாதிகளுடன் போட்டிபோட இருப்பது அவர்கள் கட்டாயம் தேர்தல் வேலை செய்தே வெல்ல வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியிருக்கின்றது.
உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமெனில் தங்களால் விமர்சிக்கப்படும் 13வது திருத்தச்சட்டமாகிய மாகாணசபை முறைமையில் வந்த வடக்கு மாகாணசபை, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு சென்றால் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றலாம். இல்லாவிட்டால் அவர்கள் மைத்திரி, ரணில், முஸ்லிம் சக்திகள், மலையக சக்திகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஆகியவற்றினால் தோற்கடிக்கப்படுவது உறுதி.
இது அவர்களால் முடியுமா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குளக்கோட்டன்
Average Rating