சேலம் அருகே ரூ.24 லட்சம் கொள்ளையில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் பற்றி பரபரப்பு தகவல்கள்!!
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது அலி. மிளகு வியாபாரியான இவர் தமிழகத்தில் இருந்து மிளகு மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று கேரளாவில் விற்று வந்தார். இவர் சேலம் மாவட்டம் ஏற்காடு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிகளிலும் மிளகு வாங்கி சப்ளை செய்து வந்தார்.
இவரிடம் பாலக்காட்டை சேர்ந்த வீராசாமி (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் ஏற்காட்டில் மிளகு வாங்க ரூ.24லட்சத்தை முகமது அலி கொடுத்து அனுப்பினார். இந்த பணத்தை எடுத்து கொண்டு வீராசாமி ஏற்காடு வந்தார்.
பின்னர் இவரை கும்பல் ஒன்று ஏமாற்றி சேலம் பனமரத்துப்பட்டி அழைத்து வந்து அவரை தாக்கி ரூ. 24 லட்சம் பறித்து சென்றது. இந்த சம்பவம் குறித்து வீராசாமி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஜி.சுப்புலட்சுமியிடம் புகார் செய்தார். இதை யடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது.
இதில் ரூரல் துணை கண்காணிப்பாளர் சந்திர சேகரன், இன்ஸ்பெக்டர்கள் குமார், சம்பத், குலசேகரன், சப்–இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சின்னப்பையன், பாலு, ராகவன் மற்றும் போலீசார் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் விசாரித்து 9 பேரை கைது செய்தனர்.
இவர்கள் பெயர் விவரம் வருமாறு:–
1. சண்முகம், ஏற்காடு வெள்ளக்கடை.
2.பாஸ்கர், வெள்ளக்கடை. ஏற்காட்டில் உள்ள ஓட்டல் ஓன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்
3.கார்த்திக், வெள்ளக் கடை, கார் டிரைவர்.
4.சந்திரன், ஏற்காடு அருகில் உள்ள செம்மணத்தம்
5. பிலியூர் சந்திரன்.
6.அசோக், வெள்ளக் கடை.
7.சந்திரக்குமார், வெள்ளக்கடை, ஆட்டோ டிரைவர்.
8. ராஜசேகர், சேலம் பெரியபுதூர்,
9.சிவக்குமார், சேலம் இரும்பாலை பனங்காடு.
இவர்களை தவிர சேலம் இரும்பாலை வேடுகாத்தாம் பட்டியை சேர்ந்த பிரபல வழிப்பறி திருடன் இளைய ராஜா என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கைதான இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சத்து 98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான அனைவரும் சேலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான ராஜசேகர் சேலத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கராத்தே வீரர். இவர் அவரது நண்பர்கள் இளையராஜா, ராஜசேகர், சிவக்குமார், சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து இரவில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்து உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பகலில் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ராஜசேகர் இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று ரூ.24லட்சம் பறிப்பில் ஈடுபட்ட ஆசிரியர் ராஜசேகர் பணத்தை நண்பர்களிடம் கொடுத்து விட்டு வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார். இவரை கண்காணித்த போலீசார் ராஜசேகரை பள்ளியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இவர் மீது 10–க்கும் மேற்பட்ட வழிப்பறி வழக்குகள் உள்ளதாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்து அவரை கைது செய்துள்ளனர்.
ஆசிரியர் ராஜசேகரின் நண்பர்கள் வழிப்பறி மற்றும் அடி–தடியில் ஈடுபட்டு பொது மக்களிடம் சிக்கி கொண்டார், உடனே அவர்கள் ராஜசேகருக்கு தொடர்பு கொண்டு அழைப்பார்கள். இவர் உடனே வந்து தனக்கு அந்த போலீஸ் அதிகாரி தெரியும். இந்த அரசியல்வாதி தெரியும் என கூறுவார். இதனால் பயந்த பொதுமக்கள் ராஜசேகரின் நண்பர்களை அடிக்காமல் விட்டு விடுவார்கள். ராஜசேகரும், அவரது நண்பர்களையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கைதான 9 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கவும் போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Average Rating