அன்பென்னும் வலைக்குள் இமயமும் வசப்படும்: காதலில் விழுந்து துப்பாக்கியை தூக்கி எறிந்த நக்சலைட் கமாண்டர்!!
ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் கைதான ஒரு நக்சலைட் கமாண்டர் பிடிபட்டது எப்படி? என்பது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தின்பந்து படர், அங்குள்ள சில கிராமங்களில் நக்சலைட் கமாண்டராக இயங்கி வந்தார். இவர் மீது 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் போலீசார் இவரை கைது செய்ய வலைவீசி தேடிவந்தனர். தொலைதூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்தபோது தின்பந்து படருக்கும் அங்கு வசித்து வந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையில் காதல் தீ பற்றிக் கொண்டது.
அவரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தபோது, கொலைவெறி பிடித்த நக்சலைட் கும்பலை சேர்ந்த உனக்கு எங்கள் மகளை திருமணம் செய்து கொடுப்பதைவிட, ஏதாவது பாழுங்கிணற்றில் தள்ளி கொன்று விடுவோம் என்று கூறி மறுப்பு தெரிவித்தனர்.
எனினும், நீங்கள் திருந்தி வாழ்வதாக உறுதி அளித்தால் என் குடும்பத்தை பகைத்து கொண்டு, வீட்டை விட்டு வெளியேறி, உங்களோடு
திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த தயார் என்று அந்தப் பெண் கூற, தின்பந்து படர் அதற்கு முழுமனதாக சம்மதித்தார்.
இதையடுத்து, உரிய தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த தின்பந்து படர், ஜார்கண்டில் உள்ள ஒரு மாவோயிஸ்ட் முகாமை சூறையாடினார். அங்கிருந்து ஒரு துப்பாக்கி, வெடிப் பொருட்கள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றார்.
துப்பாக்கியையும், குண்டுகளையும் மண்ணில் போட்டு புதைத்துவிட்டு, பணத்துடனும், காதலியுடனும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் மாவட்டத்துக்கு சென்ற தின்பந்து படர், தனது மனம்கவர்ந்த காதலியை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
சுராஜ் முண்டா என்ற போலிப் பெயரில் கூலித்தொழிலாளியாக மாறிய அவர் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, குடும்பம் நடத்தி, மனைவியை நல்லபடியாக காப்பாற்றி வந்தார். மனைவி கர்ப்பிணியானதை அடுத்து, ஜார்கண்டில் உள்ள பருஹட் என்ற அவரது சொந்த கிராமத்துக்கு மனைவியை அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
அங்கிருந்து மீண்டும் ஜலந்தர் நகருக்கு புறப்பட்டபோது பருஹட் கிராம மக்களில் சிலர் தின்பந்து படரை அடையாளம் கண்டு, அவரது நடமாட்டம் குறித்தும், கர்ப்பிணியாக அழைத்து வரப்பட்ட அவரது மனைவியைப் பற்றியும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் செல்போன் தொடர்புகளை ரகசியமாக கண்காணித்த போலீசார், அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஜலந்தர் நகரில் அவர் போலிப் பெயரில் வாழ்ந்து வரும் விபரம் தெரியவந்தது. உடனடியாக ஜலந்தர் நகருக்கு விரைந்து சென்ற போலீசார் தின்பந்து படரை மறைந்திருந்து கண்காணித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
Average Rating