இந்திய கேப்டன் தோனி நடிகையுடன் காதலா? : கிசுகிசு உண்மையா?
`டுவென்டி-20′ உலக கோப்பை வென்றதை தொடர்ந்து இந்திய கேப்டன் தோனி `சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்துக்கு மிக விரைவாக உயர்ந்து விட்டார். இவர் பாலிவுட் நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ராவை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின. இதனை மறுத்த தோனி, “ஒவ்வொரு நாளும் ஒரு ஹீரோயினோடு இணைத்து பேசுகிறார்கள். மீடியாவின் இந்த வேலை சிறிது காலத்துக்கு தொடரட்டும்,” என்று புன்னகை கலந்த வெறுப்போடு குறிப்பிட்டார். சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் `டுவென்டி-20′ உலக கோப்பை தொடர் நடந்தது. இதில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. இதனை கவுரவிக்கும் வகையில் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று சிறப்பு விழா நடந்தது. இதில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் மது கோடா ஏற்கனவே அறிவித்தபடி தனது ஆச்சரிய பரிசாக `டொயாட்டோ கரோலா’ சொகுசு காரை தோனிக்கு வழங்கினார். ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் பரிசாக கொடுத்தார். காரை பெற்றுக் கொண்ட தோனி, ரூ. 5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக அப்படியே வழங்கினார். இவருக்கு `ஜார்க்கண்ட் ரத்னா’ விருது வரும் நவ. 15ம் தேதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். பின்னர் நிருபர்களிடம் தோனி அளித்த பேட்டி:
`டுவென்டி-20′ உலக கோப்பை வென்றது தனிநபரின் முயற்சியால் அல்ல. அணியின் கூட்டு முயற்சியால் தான் வெற்றி சாத்தியமானது. இது அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைக்கவில்லை என்பதை சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான `டுவென்டி-20′ போட்டியில் வெற்றி பெற்று நிரூபித்தோம். ஆக்ரோஷம் தொடரும்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆக்ரோஷத்துடன் செயல்பட்டோம். அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரது பொறுப்பு பற்றி தெரியும். எனவே ஆக்ரோஷமான விளையாட்டு தொடரும். ஷ்ரீசாந்தின் ஆக்ரோஷம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. கிரிக் கெட்டில் சில வரையறைகள் உள்ளன. இதனை மீறாமல் இருக்கும் வரை பிரச்னை எதுவும் இல்லை.
கேப்டன் முக்கியமல்ல: ஒரு நாள் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளில் மற்ற கேப்டன் கீழ் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். என்னை பொறுத்தவரை யார் கேப்டன் என்பது முக்கியமல்ல. ஒரு நாள், டெஸ்ட் என எந்த போட்டியாக இருந்தாலும் அணியின் செயல்பாடு தான் முக்கியம். பாக்., தொடர்: பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இன்சமாம் இல்லாதது பெரிய விஷயம் இல்லை. இவர் சமீப காலமாக பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை.மீடியா வேலை: என்னை பாலிவுட் நடிகைளுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின்றன. இது மீடியாவின் வேலை. ஒவ்வொரு நாளும் ஒரு ஹீரோயினை மாற்றுகிறார்கள். இவர்களின் இந்த வேலை சிறிது காலத்துக்கு தொடரட்டும். இவ்வாறு தோனி கூறினார்.
கிசுகிசு உண்மையா?: மும்பையில் நடந்த `டுவென்டி-20′ போட்டிக்கு தனது சிறப்பு விருந்தினராக தீபிகாவுக்கு, தோனி அழைப்பு விடுக்க `லவ் மேட்டர்’ பெரிதானது. தவிர தீபிகாவும் ஷாருக்கானும் நடித்துள்ள `ஓம் சாந்தி ஓம்’ என்ற படத்தை பார்க்க மிகுந்த ஆர்வமாக இருந்துள்ளார். தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் தீபிகா பற்றியே புகழ்ந்து பேசியுள்ளார். இதே போல் மற்றொரு பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ராவுக்கும் தோனி மனதில் இடமிருப்பதாக செய்திகள் வெளியாயின. பிரியங்கா நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு நேரடியாக சென்று சந்திப்பதாக கூறப்பட்டது.
பிரான்ஸ் சென்று இருந்த பிரியங்கா, தோனிக்காக சிறப்பு பரிசுகள் வாங்கி வந்ததாக கூறப்பட்டது. இது குறித்து பிரியங்காவிடம் கேட்ட போது,”உண்மையில் தோனியை பற்றி எதுவும் தெரியாது. கிசுகிசுக்கள் எங்களது வாழ்க்கையில் சகஜம். அதோடு வாழப் பழகி விட்டோம்,” என்றார்.
பிரியங்கா நழுவியுள்ளதால், தீபிகாவுக்கு `கிரீன் சிக்னல்’ கிடைத்துள்ளது. இது பற்றி தீபிகா கூறுகையில்,” மும்பை போட்டியை காண சாதாரண கிரிக்கெட் ரசிகையாக தான் சென்றேன். ஒட்டுமொத்த இந்திய அணிக்கு உற்சாகம் அளித்தேன்,” என்றார். இந்திய அணி என்றால்…தோனியும் சேர்த்து தானே தீபிகா?
கொஞ்சம் ஓய்வு புதிதாக நடிக்க உள்ள விளம்பர படத்துக்காக தான் தோனி கழுத்து வரை இருந்த கூந்தலை `டிரிம்’ செய்து விட்டு,`கிராப்’ வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தோனி கூறுகையில்,”நீண்ட கூந்தலுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காட்சி அளித்து விட்டேன். தற்போது அதற்கு ஓய்வு அளித்துள்ளேன். மாற்றங்கள் நிகழ்வதுசகஜம் தானே,” என்றார்.