ஓரிரு நாளில் சீசன் தொடங்க வாய்ப்பு: சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் குற்றாலம்!!
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த 3 மாதங்களிலும் மெயின்அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிப்பதற்காக குற்றாலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
ஜூன் மாத தொடக்கத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கி விடும். கடந்த ஆண்டு சரியான நேரத்தில் சீசன் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு சீசன் தொடங்குவதில் சற்று காலதாமதமாகி வருகிறது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவின்படி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி பேரூராட்சி சார்பில் மெயின் அருவியில் புதிய தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சுற்றுப்பகுதிகள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்தருவி, புலிஅருவி பகுதியும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. ஐந்தருவி பகுதியில் வாகனங்களை நிறுத்தும் இடம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் மாசுபடாமல் இருப்பதற்காக சோப்பு, ஷாம்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வியாபாரிகள் பலர் கடைகள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பேரூராட்சி தங்கும் விடுதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாகன நுழைவு கட்டணம் உயர்வுக்கு கலெக்டர் தடைவிதித்துள்ளதை தொடர்ந்து பழைய கட்டணத்தையே வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலைய பகுதி மற்றும் அனைத்து அருவிப்பகுதிகளிலும் நவீன கழிப்பிடங்கள் அமைக்கப் பட்டுள்ளது.கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவல்துறை சார்பில் ரூ.37 லட்சம் செலவில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீசன் தொடங்கியதும் முழுஅளவில் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஐந்தருவி அருகில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்கா மேலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்லியா என்ற புதிய வகை வண்ணப்பூ சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் முதியோர் வரை தங்கள் ரசனைக்கு ஏற்ப சுற்றி பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பழையகுற்றாலம் பகுதியில் ஆயிரப்பேரி ஊராட்சி நிர்வாகம் ,பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சீசன் தொடங்கிய உடன் குற்றாலத்தில் இருந்து நெல்லை, மதுரை உட்பட பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்தும் குற்றாலத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் வழக்கம் போல் சாரல்விழா நடத்த மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
Average Rating