நெல்லிக்குப்பம் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் திடீர் சாவு!!
நெல்லிக்குப்பம் அருகே கொலை வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் ஆஸ்பத்திரியில் இறந்து போனதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே பி.என்.பாளையம் ஒத்த வாடை தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மகன் சுப்பிரமணி (வயது 35), பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ரேவதி (28) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உள்ளது. சுப்பிரமணியனின் உறவினர் வீடு நெய்வேலியில் இருந்ததால் நெய்வேலியில் உறவினர் வீட்டில் தங்கி, அங்கு வீடுகளுக்கு பெயிண்ட் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே நெய்வேலியில் சுப்பிரமணி தங்கி இருந்த உறவினர் வீட்டின் அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கொலை சம்பவம் நடந்தது. இந்த கொலை சம்பவத்தில் சுப்பிரமணி சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதி நெய்வேலி டவுன் ஷிப் போலீசார் சுப்பிரமணியை சந்தேகத்தின் பேரில் அழைத்து சென்று விசாரித்தனர்.
10 நாட்களாக சுப்பிரமணியிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுப்பிரமணியை பார்க்க அவரது மனைவி மற்றும் உறவினர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து ரேவதி வக்கீல் மூலம் கணவரை சந்தித்தார். அப்போது சுப்பிரமணிக்கு உடல் முழுவதும் காயம் இருந்தது. இதையடுத்து சிகிச்சைக்கு சுப்பிரமணியை அழைத்து செல்ல கேட்டும் போலீசார் அனுமதிக்கவில்லை. தாங்களே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதாக கூறினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியை போலீசார் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் சுப்பிரமணி இறந்து போனார். இதுபற்றி அறிந்ததும் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். போலீசார் தாக்கியதில்தான் சுப்பிரமணி இறந்து போனதாக அவர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே பி.என். பாளையத்திலும் பதட்டம் நிலவியது. சுப்பிரமணி சாவுக்கு போலீசார்தான் காரணம் என்றும் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சுப்பிரமணியின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி கடலூர்–பண்ருட்டி சாலையில் மேல் பட்டாம் பாக்கத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமரை செல்வன், துணை செயலாளர் முல்லைவேந்தன் உள்பட 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடலூர் சப்–கலெக்டர் ஷர்மிளா சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தாமரை செல்வன் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் சுப்பிரமணியை போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுப்பிரமணியனின் மனைவி ரேவதிக்கு அரசு வேலை வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடத்த மறியல் போராட்டத்தால் அவ்வழியே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பி.என்.பாளையத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating