திருச்சியில் கலெக்டரை கண்டித்து பெண் மேலாளர் தற்கொலை முயற்சி!!
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கலையரங்கம் தியேட்டர் உள்ளது. மாவட்ட நலப்பணிக்குழுவிற்கு சொந்தமான இந்த தியேட்டரை சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த தியேட்டரை அவரது மகளும் அ.தி.மு.க. பிரமுகருமான கஸ்தூரி மேலாளராக இருந்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தியேட்டருக்கு உரிமம் புதுப்பிக்கப்படாததால் கடந்த ஏப்ரல் மாதம் 19–ந் தேதி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தியேட்டருக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அனுமதி பெற்று மீண்டும் தியேட்டர் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தியேட்டரில் சூர்யா நடித்த மாசு படம் திரையிடப்பட்டு ஓடி வருகிறது.
இந்த நிலையில் வாடகை பணம் கட்டாததது மற்றும் உரிமம் புதுப்பிக்காததாக கூறி உதவி கலெக்டர் கணேச சேகரன் மற்றும் அதிகாரிகள் மீண்டும் நேற்று தியேட்டருக்கு சீல் வைத்தனர். இதை தொடர்ந்து தியேட்டர் மேலாளர் கஸ்தூரி மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் புகார் கொடுத்தார்.
பின்னர் பிற்பகல் போலீஸ் பாதுகாப்புடன் படம் திரையிடப்பட்டது. இதை அறிந்து அங்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் படம் முடிந்ததும் அனைவரும் வெளியே சென்ற பின்னர் மீண்டும் தியேட்டருக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தியேட்டர் மேலாளர் கஸ்தூரி இன்று தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் அதை தடுத்து அவரை காப்பாற்றி உள்ளனர்.
அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:– கடந்த 3 வருடங்களாக மாவட்ட நலப்பணி நிதிக்குழு உறுப்பினர்களால் அலைகழிக்கப்பட்டு இன்று நடுவீதியில் என்னை நிற்க வைத்த கலெக்டர் பழனிச்சாமி, ஆர்.டி.ஓ.கணேச சேகரன், தாசில்தார் ரவி, சட்ட ஆலோசகர் சரவணன் ஆகியோர் எனது தற்கொலை தூண்டுதலுக்கு காரணமானவர்கள்.
எனது சாவு கலையரங்கம் திரையரங்கிற்கு சரித்திரம் படைத்தவையாக இருக்கவும் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுக்காத இவர்களிடம் எந்த நற்செயலையும் எதிர்பார்க்க முடியாது. மரியாதையை இழந்து வாழ்வதை விட மானத்துடன் சாவதே நலம். இந்த உலகை விட்டு அனுப்பி வைத்த இந்த நபர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறி உள்ளார்.
இது குறித்து கஸ்தூரியிடம் கேட்ட போது, தியேட்டருக்கு நான் ஒரு கோடி ருபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளேன். தற்போதும் உரிமத்தை புதுப்பிக்கவும், வாடகை பாக்கியை கட்டவும் தயாராக உள்ளேன். ஆனால் அதிகாரிகள் பணத்தை வாங்காமல் அலைக்கழித்து விட்டு தற்போது தியேட்டருக்கு சீல் வைத்துள்ளதால் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என்றார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த கண்டோன்மென்ட் போலீஸ் உதவி கமிஷனர் அசோக்குமார் கஸ்தூரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating