வாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது!!
வாழப்பாடியை அடுத்த குறிச்சி அணைமேடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள் வாழப்பாடி அரசு மாணவியர் விடுதியில் தங்கி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் கடந்த 27–ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது மகளை மீட்டு கொடுக்குமாறு வாழப்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து, அந்த மாணவி வைத்திருந்த மொபைல் போன் வாயிலாக அவரது இருப்பிடத்தை, வாழப்பாடி போலீசார் நேற்று காலை கண்டுபிடித்தனர். சேலம்– சென்னை தேசிய நெடுஞ்சாலை வாழப்பாடி பை–பாஸ் சாலை அருகே பாழடைந்து கிடக்கும் ஓட்டு கூரை வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த மாணவியை போலீசார் மீட்டனர்.
அந்த மாணவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கு வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகனான டீ மாஸ்டர் ராஜ்குமார் (19) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 27–ந்தேதி அணைமேடு கிராமத்தில் இருந்து வாழப்பாடிக்கு வந்த அந்த மாணவியை அக்ரஹாரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்ற ராஜ்குமார் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பித்து 28–ந்தேதி குறிச்சிக்கு சென்ற அந்த மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்ற வாலிபர் கடத்தி சென்று 29,30 ஆகிய 2 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
அந்த மாணவி, குறிச்சி கிராமத்தில் இருப்பது குறித்து ராஜ்குமார் மற்றும் மூர்த்தி வாயிலாக தகவல் அறிந்த ராஜ்குமாரின் நண்பர்களான வாழப்பாடியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் இளங்கோவன் (20) சண்முகம் மகன்கள் வினோத் (20) குமார் (21), அறிவழகன் மகன் இளவரசன் (19), கலா மகன் ஜெகதீஷ் (23) ஆகிய 5 பேரும் குறிச்சி கிராமத்திற்கு சென்று கடந்த 31–ந்தேதி அந்த மாணவியை மீண்டும் வாழப்பாடிக்கு கடத்தி வந்துள்ளனர்.
வாழப்பாடியில் சேலம்–சென்னை பை–பாஸ் சாலைக்கு அருகிலுள்ள கிழக்குக்காட்டிலுள்ள ஒரு பாழடைந்த ஓட்டுக்கூரை கட்டிடத்தில் அந்த மாணவியை அடைத்து வைத்து கடந்த 3 தினங்களாக 5 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் போலீஸ் எஸ்.பி. சுப்புலட்சுமி, நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று நேரடி விசாரணை நடத்தினார்.
அதனையடுத்து மாணவியை அடைத்து வைத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த ராஜ்குமார் (21), இளங்கோவன் (20) வினோத் (20), இளவரசன் (19), குமார் (21), ஜெகதீஷன் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். கைதான 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சென்றாயன் பாளையத்தில் கடந்த ஆண்டு 5 பேர் கொண்ட கும்பல், 5–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தற்போது 10–ம் வகுப்பு மாணவியை 5 நாட்கள் அடைத்து வைத்து 7 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Average Rating