10 கோடி நிதி மோசடி – காதலனுடன் நடிகை கைது!!
நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை லீனா மரியா பால். இவர், சென்னையில் கனரா வங்கியில் காதலனை ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டி நடித்து ரூ.19 கோடி மோசடி செய்தது மற்றும் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்.
அந்த வழக்குகளிலிருந்து ஜாமீனில் வெளிவந்த இவர், இப்போது மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை லீனா மரியா பால், அவரது காதலர் சேகர் சந்திரசேகர் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
நடிகை லீனா மரியா பால் கோரேகாவ் மேற்கு லிங்க்சாலையில் உள்ள இம்பேரியல் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் தனது காதலர் சேகர் சந்திரசேகருடன் வசித்து வருகிறார். இருவரும் சேர்ந்து அந்தேரி மேற்கு, சாலிமார் மோர்யா மார்க் கட்டிடத்தில் ‘லயன் ஓக் இண்டியா’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 20 சதவீத வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாக பண வசூலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தவிர குலுக்கல் முறையில் கார் பரிசாக கொடுப்பதாக அறிவித்து உள்ளனர்.
ரூ.10 கோடி மோசடி
இதை நம்பி அந்த நிறுவனத்தில் மும்பையை சேர்ந்த பலர் தங்கள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் கூறியபடி அந்த நிறுவனம் தரப்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதலீட்டாளர்கள் பலர் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த நிறுவனம் ரூ.10 கோடி வரையிலும் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
ரூ 6. 5 கோடி சொத்துகள் பறிமுதல்
இதையடுத்து போலீசார் நடிகை லீனா மரியா பால், அவரது காதலர் சேகர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் தங்கியிருக்கும் வீடு மற்றும் ‘லயன் ஒக் இண்டியா’ அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள 117 விலை உயர்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள், ரூ.37 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 12 செல்போன்கள், ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சிக்கின. ரூ.5 கோடி மதிப்புள்ள 9 விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும்.
இது மட்டுமின்றி 2 வெளிநாட்டு துப்பாக்கிகள், பண பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரைவோலைகள், காசோலைகளையும் போலீசார் அங்கிருந்து கைப்பற்றினார்கள். கைதான இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பணமோசடியில் அத்தில் ஹுசைன் அக்தர்(24), அக்தர் ஹுசைன் ஜைபூரி(55), சல்மான் பிரோஜ் ரிஜ்வி(28), நாசீர் மும்தாஜ் ஜர்பூரி(50) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவலை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு இணை கமிஷனர் தனஞ்சய் கம்லாக்கர் தெரிவித்தார். லீனா மரியா பால் தேசிய விருது பெற்ற மெட்ராஸ் கபே படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating