வீட்டில் நடந்த பிரசவத்தால் உடல் நலம் பாதிப்பு: 9–வது குழந்தை பெற்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
“நாம் இருவர் நமக்கு இருவர்”, “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற குடும்ப கட்டுப்பாடு வாசகங்கள் தற்போது “நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தை?” என்ற நிலைக்கு வந்த பின்னரும் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பெண் 10–வது குழந்தை பெற்றெடுத்தார். அதன் பிறகே விழித்துக்கொண்ட சுகாதாரத்துறை அந்த பெண்ணின் கணவருக்கு கட்டாய கருத்தடை ஆபரேசன் செய்தது.
இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த மற்றொரு பெண் 9–வது குழந்தை பெற்றுள்ளார். பாரதி நகரை சேர்ந்த அவரது பெயர் மேரி (வயது 34). இவரது கணவர் அழகர் கூலித்தொழிலாளி. 16 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு சித்ரா தேவி, நாகஜோதி, கவிதா, கண்ணன், சங்கீதா, நாகராஜ், வெற்றிவேல் உள்பட அடுத்தடுத்து 8 குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு பெண் குழந்தை இறந்து விட்டது. தற்போது 3 ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
குடும்பம் நடத்த கஷ்டப்பட்ட போதிலும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை அவர்கள் நிறுத்தவில்லை.
இந்நிலையில் மேரி 9–வது முறையாக கர்ப்பமானார். தொடர்ந்து குழந்தை பெற்று வந்ததால் அவருக்கு ரத்தசோகையும் ஏற்பட்டது. இதையறிந்த மாநகராட்சி சுகாதார செவிலியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆஸ்பத்திரிக்கு சென்றால் டாக்டர்கள் சத்தம்போடுவார்கள் என்று பயந்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டதால் மேரி மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ரவிக்கலா கூறுகையில், மேரிக்கு கருத்தடை செய்வதை அவரது கணவர் எதிர்த்து வந்துள்ளார். 8–வது பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியில் இருந்து ஓடி விட்டார்.
தற்போது ரத்தசோகையால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மேரிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருக்கிறோம். இப்போதும் அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்து கவுன்சிலிங் அளிக்க உள்ளோம் என்றார்.
Average Rating